நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.
தற்போது, கோட் புரமோஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரைவாழ்வில் என்னுடைய பெரிய படமும் இதுதான். நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.” என்றார்.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, வெங்கட் பிரபு, ‘என் அடுத்த படம் சிவகார்த்திகேயனுடன்தான். அவருடைய படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு வந்தால் இந்தப் படம் துவங்கிவிடும்’ என பதிலளித்துள்ளார்.
இதனால், வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி உறுதியாகியுள்ளது.