பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். 2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பினால் இதுவரை 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க அவரே இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தணிக்கை செய்யாமல் மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.
கங்கனா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
எங்களது படமான எமர்ஜென்சிக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக வதந்திகள் சுற்றுகின்றன. இது உண்மையில்லை. எங்களது படம் தணிக்கை முடிந்துவிட்டது ஆனால் அதற்கான சான்றிதழ் வழங்கவில்லை. ஏனெனில் பல கொலை மிரட்டல்கள் வருகின்றன. படத்தின் தணிக்கை வாரிய உறுப்பினர்களும் மிரட்டப்படுகிறார்கள்.
இந்திரா காந்தியை கொலை செய்ததை, பிந்தர்வாலேவை காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாதென்றும் நாங்கள் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறொம். இதைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாட்டின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்றார்.
சீக்கியர்கள் குறித்து தவறாக காண்பிப்பதாக இந்தப் படத்தை வெளியடக்கூடாதென சிரோமனி அகாலிதளம் மத்திய தணிக்கை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் எஸ்ஜிபிசி அமைப்பினரும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் மத்திய தணிக்கை வாரியத்துக்கும் இந்தப் படத்தை தடை செய்யும்படி கடிதம் எழுதியுள்ளார்கள்.
எமர்ஜென்சி படத்தின் தயாரிப்பாளருக்கு எஸ்ஜிபிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளதும். மேலும் பஞ்சாப், ஹரியாணா மாநில உயர்நீதி மன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கும் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் பஞ்சாப்பின் பிஜேபி பொது செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் மத்திய தணிக்கைத் துறைக்கும் , “ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து கவனமாக தணிக்கை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.