2024 - சிறந்த தமிழ்ப் படங்கள்!

year ender - 2024 இந்தாண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள் குறித்து...
2024 - சிறந்த தமிழ்ப் படங்கள்!
Published on
Updated on
5 min read

இந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை.

இந்தாண்டின் தொடக்கத்தில் கேப்டன் மில்லர், அயலான் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இரண்டும் வெற்றிப் படங்களாகின.

ஆனால், நல்ல திரைப்படங்கள் என்கிற பெயரைக் குறைவான படங்களே எடுத்தன. அப்படங்கள் குறித்த ஒரு பார்வைக்காக சில படங்கள் குறிப்பிடப்படுகின்றன. இது, தரவரிசைப் பட்டியல் அல்ல. வெளியீட்டுத் தேதியின் அடிப்படையில் 2024-ன் சிறந்த 10 தமிழ்ப் படங்கள்...

லவ்வர்

காதல்களும் அதன் மோதல்களும் காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் அடிப்படையான ஆணவ மோதலை காதலர்களுக்கு இடையே சரியாகக் கையாண்ட திரைப்படமாக லவ்வர் உருவாகியிருந்தது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் மற்றும் நடிகர் மணிகண்டன் கூட்டணியில் உருவான இப்படம் இளம் தலைமுறையிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. எதையும் பொருட்டாக நினைத்து வாழாத நாயகன் காதலி மேல் அன்பாக இருக்கிறேன் என்கிற பெயரில் அந்த உறவிற்குள் நஞ்சை செலுத்தும் தருணங்களும் சூழல்களும் நுணுக்கமாக பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருந்தது.

மணிகண்டன், ஸ்ரீ கௌரி.
மணிகண்டன், ஸ்ரீ கௌரி.

கிளைமேக்ஸில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அன்பு என்கிற பெயரில் ஒருவர் மீது செலுத்தும் வன்முறையை அனுமதிக்கக் கூடாது என்பதை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி வென்றிருக்கின்றனர். படத்தில் இடம்பெற்றிருந்த, ‘தேன் சுடரே’ பாடல் இந்தாண்டில் அதிகம் ரீல்ஸ் செய்யப்பட்ட பாடலாகவே மாறியது.

மகாராஜா

இந்தாண்டு துவக்கத்திலிருந்தே பெரிய ஹிட் இல்லாமல் இருந்த தமிழ் சினிமாவிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய இப்படம் திரைக்கதைக்காக பெரிய பாராட்டுகளைப் பெற்றது. மகாராஜா கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுக்க வருகிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

எதற்காக, இந்தப் புகார்? இதன் பின்னணி என்ன என்கிற கதையை ரசிகர்களின் ஊகங்களை உடைத்து திரைக்கதை திருப்பத்தால் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இப்போது, சீனாவில் ரூ. 100 கோடி வசூலித்து அங்கும் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வன்முறையையும் அதற்கான காரணத்தையும் வலுவாக முன்வைத்த படமாக ரூ. 25 கோடியில் உருவான இத்திரைப்படம் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் (சீனா உள்பட) வசூலித்துள்ளது.

ஜமா

இந்தாண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்களில் காத்திரமான கதையும் நடிப்பும் வெளிப்பட்ட படம். அறிமுக இயக்குநரான பாரி இளவழகன் நாயகனாகவும் நடித்து அசத்தியிருந்தார். மகாபாரத கதாபாத்திரங்களை முன்னிருத்தி கூத்துக் கலையை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் தமிழ் சூழலில் பேச வேண்டிய கதையைப் பேசியதற்காகவும் பாராட்டுகளைப் பெற்றிருந்தது.

பாரி இளவழகன்
பாரி இளவழகன்

நாயகன் திரௌபதியாகவும் அர்ஜுனனாகவும் பரிணமித்த காட்சிகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தன. உருவாக்கத்தில் ஒளியமைப்பையும் கோணங்களையும் அழகாகக் கையாண்டிருந்தார் இயக்குநர். சில குறைகள் இருந்தாலும் இப்படம் இன்னும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது. இளையராஜாவின் பின்னணி இசையும் படத்தின் கருவிற்கு பலமாக அமைந்திருந்தது.

தங்கலான்

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் நீண்ட நாள்கள் தயாரிப்பிலிருந்த தங்கலான் திரைப்படம் தங்கத்தைத் தேடும் நாயகனின் கதையாக உருவாகியிருந்தது. இதில், கோலார் தங்க வயலுக்குப் பின் இருந்த அரசியல் மற்றும் பூர்வகுடி மக்களின் வாழ்வியல் பேசப்பட்டிருந்தன. அதை நேர்க்கோட்டு கதையாகச் சொல்லாமல் நான்லீனியர் பாணியில் இரஞ்சித் கதையை முன்னும் பின்னுமாக மாற்றியிருந்தது நன்றாக இருந்தது.

விக்ரம்
விக்ரம்

கிளைமேக்ஸ் காட்சிகள் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் தான் கூறவந்த கதையைத் திரை வடிவமாக மாற்றியதில் தங்கலான் முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சில காட்சிகளில் மேஜிகல் ரியலிச (மாய எதார்த்தம்) பாணி பயன்படுத்தப்பட்டிருந்தது சில தருணங்களாக ரசிக்க வைத்தது. ரூ. 100 கோடி வரை வசூலித்து ஹிட் அடித்தது.

கொட்டுக்காளி

கூழாங்கல் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கொட்டுக்காளி பெர்லின், ரோட்டர்டம், ரஷியா, சிங்கப்பூர் என பல முன்னணி உலக சினிமா திரை விழாக்களில் பங்கேற்று அட்டகாசமான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரசனங்களைப் பெற்றாலும் இப்படம் தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்ட பாய்ச்சல் என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சூரி, அன்னா பென்.
சூரி, அன்னா பென்.

இசையே இல்லாமல் இயற்கை சப்தங்களைக் கொண்டு காட்சிகளுக்கு பலம் கொடுத்திருந்தார் இயக்குநர். பேய் பிடித்ததாக நம்பப்படும் நாயகி அன்னா பென்னை மொத்த குடும்பமும் பேயை விரட்ட அழைத்துச் செல்கிறார்கள். இவர்கள் செல்லும் வழியெல்லாம் கதை சொல்லப்பட்டுக்கொண்டே வருகிறது. இறுதியில், சாதியின் ஆதிக்கம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அழுத்தமாகக் காட்சிப்படுத்திய விதம் படத்தை முழுமையாக்குகிறது. இன்றுவரை, ஏதாவது ஒரு திரை விழாவில் கொட்டுக்காளி திரையிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

போகுமிடம் வெகுதூரமில்லை

இப்படமும் மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தை வடிவமாகக் கொண்டு உருவான திரைப்படம். கூத்துக் கலைஞரான கருணாஸ் ஊருக்குச் செல்வதற்காக நெடுஞ்சாலையில் காத்திருக்கிறார். அமரர் ஊர்தி ஓட்டுநராக வரும் விமல் அவரை ஏற்றிச்செல்வதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது. வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், மரணம், வாழ்க்கையின் பொருள் என வசனங்களாலே நம் சிந்தனையை ஆழமாகக் கட்டிப்போடும் முயற்சியில் வென்றிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே. ராஜா.

கருணாஸ், விமல்.
கருணாஸ், விமல்.

யாருமே இல்லாத கருணாஸுக்கு ஒரு ஊரே இருக்கிறது என படம் நிறைவடையும் இடம் பலரையும் பாதித்தது. சில விஷங்களில் கூடுதல் கவனம் எடுத்திருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும். மலையாள சினிமாக்களைப் பார்த்து ஏங்கிய நம் மனங்களுக்கு நல்ல அனுபவமாக வந்த படம் போகுமிடம் வெகுதூரமில்லை.

லப்பர் பந்து

2024-ன் சூப்பர் ஸ்டார் கமர்ஷியல் திரைப்படம். கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்குமான திரைப்படங்களில் முதன்மையான இடத்தைப் பெறும் அளவிற்கு திரையரங்குகளிலேயே மீண்டும் மறுபார்வை செய்யப்பட்ட படமாக அமைந்தது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வருங்கால மாமனாரும் மருமகனும் கிரிக்கெட் விளையாட்டால் முட்டிக்கொள்ள, இவர்களின் குடும்பங்கள் அதற்காக வருந்த, பெண் சுதந்திரம், சாதிய விமர்சனம் என ஒரே படத்தில் பல புள்ளிகளைத் தொட்டு நேர்த்தியாகத் திரைக்கதை எழுதப்பட்டிருந்தது.

தினேஷ், ஹரிஷ் கல்யாண்.
தினேஷ், ஹரிஷ் கல்யாண்.

இயக்குநர் வெற்றிமாறன் தன் அலுவலகத்திற்கே அழைத்து மொத்த படக்குழுவினரைப் பாராட்டியிருந்தார். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மலையாள நடிகை சுவாசிகா இருவருக்கும் திருப்புமுனை படமாக அமைந்துள்ளது.

மெய்யழகன்

வன்முறைப் படங்களை கொஞ்சம் புத்திசாலித்தனமாக எடுத்தால் வெற்றி என்பதே இன்று இந்தியளவில் சினிமா மந்திரமாக இருக்கிறது. தமிழ் உள்பட பல மொழிகளிலும் விதவிதமான ஆக்சன் படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அப்படியான சூழலில், அமைதியான, அழகான படமாக பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது மெய்யழகன். ஊரை உதறிச்சென்ற அரவிந்த் சுவாமியும், சொந்த ஊரும் மனிதர்களும்தான் வாழ்க்கை என நினைக்கும் கார்த்தியும் சந்தித்துக்கொள்ளும் ஒரு இரவை வசனங்களால் சோர்வடையாமல் கடந்த கால நினைவேக்கங்களைத் திரும்பிப் பார்த்து ஒரு பெருமூச்சுடன் உணரச் செய்த படம்.

கார்த்தி, அரவிந்த் சுவாமி.
கார்த்தி, அரவிந்த் சுவாமி.

நடிகர் கார்த்தியின் நல்ல படங்களின் பட்டியலில் நிச்சயம் மெய்யழகனுக்கு பெரிய இடம் இருக்கிறது. இயக்குநர் பிரேம் குமாரின் நிதானமான திரையாக்கம் சில இடங்களில் சிலருக்கு சோர்வைக் கொடுத்திருந்தாலும் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. நல்ல படங்களெல்லாம் ஓடிடி வெளியீட்டுக்குப் பின் கவனிக்கப்படுவதுபோல் மெய்யழகன் இந்தியளவில் பலரிடமிருந்து உருக்கமான பாராட்டுகளைப் பெற்றிருந்தது.

பிளாக்

நடிகர் ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் வெளியாகி படம் நன்றாக இருக்கிறது என[ பேசிப் பேசியே ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படம் பிளாக். எதிர்பாராத திருப்பங்கள், நம் மூளையைச் சோதிக்கும் காட்சிகள் என அறிவியல் புனைவாக உருவான இப்படம் தமிழிலும் இப்படியான கதைகளைச் சிந்திக்கக் கூடிய இயக்குநர் இருக்கிறாரே என ஆச்சரியப்படுத்தியது.

ஜீவா, பிரியா பவானி சங்கர்.
ஜீவா, பிரியா பவானி சங்கர்.

படத்தின் முதல் பத்து நிமிடங்களைக் கடந்துவிட்டால் பின் படம் முழுவதும் சுவாரஸ்யம்தான். நடிகர் ஜீவாவுக்கு நீண்ட இடைவேளைக்குப் பின் கிடைத்த வெற்றி இது. இந்தக் கதையைப்போல் நம் வாழ்க்கையும் ஒருவேளை நிகழ்ந்துகொண்டிருந்தால் எப்படியிருக்கும் என எண்ணும் நிலைக்கே நம்மை இயக்குநர் அழைத்துச் செல்வதே இப்படத்தின் கதைக்கும் காட்சிக்கும் கிடைத்த வெற்றி. இன்னும் வெளிச்சம் கிடைத்திருக்க வேண்டிய படம்.

சொர்க்கவாசல்

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்த படம் சொர்க்கவாசல். 1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய கலவரத்தை மையமாக வைத்து உருவான இப்படம் கைதிகளுக்கும் அதிகார அமைப்பிற்கும் இடையேயான பிரச்னையைப் பேசியது. கைதிகளை உருவாக்குவதும், அவர்களை அடக்குவதுமே இந்த அமைப்பின் செயல்பாடாக இருக்கிறது என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தைக் கதைக்குள் கொண்டு வந்து இயக்குநர் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஆர். ஜே. பாலாஜி, பாலாஜி சக்திவேல்.
ஆர். ஜே. பாலாஜி, பாலாஜி சக்திவேல்.

சிறைக்குள் ஏற்படும் கலவரம், அதனால் ஏற்படும் குழப்பங்கள் என முக்கியமான படமாகவே சொர்க்கவாசல் பார்க்கப்படுகிறது. ’சொர்க்கவாசலுக்கு முன் மண்டியிடலாமா இல்லை, நரகத்திற்கு ராஜாவாக இருக்கலாமா’ என்பதை மையமாகக் கொண்ட இக்கதை பல இடங்களில் சிந்திக்க வைத்தது.

இதுபோக அமரன், ப்ளூ ஸ்டார், கருடன், டிமாண்டி காலனி - 2 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com