குணா குகையில் த்ரில்லர்: மஞ்ஞுமல் பாய்ஸ் - திரை விமர்சனம்!

ஓர் உண்மைச் சம்பவத்தை நகைச்சுவைக் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.
குணா குகையில் த்ரில்லர்: மஞ்ஞுமல் பாய்ஸ் - திரை விமர்சனம்!

படத்தின் தொடக்கமே இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் பாடலோடு துவங்குகிறது. கேரளத்தின் கொச்சி அருகே உள்ள மஞ்ஞுமல் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார்கள். அங்கு கமல்ஹாசனின் குணா படப்பிடிப்பு நடந்த இடமான குணா குகையில் ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார்கள். பின்னர் அந்தப் பிரச்னையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதைப் பதைபதைக்கும் காட்சிகளுடன் அதேசமயம் நகைச்சுவை கலந்த விதமாகவும் நெகிழ்வாகக் கூறியுள்ளார்கள்.

படம் நெடுக கமல்ஹாசனின் குணா அங்கங்கே வந்துகொண்டே இருக்கிறது. குணா குகை மிகவும் முக்கியமான இடம் பிடித்துள்ளது. இளையராஜாவின் இசையும் கொடைக்கானல் குளிருடன் நம்முடன் பயணிக்கிறது. ஒருகட்டத்தில், ’இது மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’ என்ற வரிகள் பின்னணியில் ஒலிக்க திரையரங்கமே ஆர்ப்பரிக்கிறது.

சாதாரணமாக இதை சர்வைவல் (உயிர் பிழைத்தல்) படம் என்ற வகைமைக்குள் அடக்கலாம். ஆனால், படத்தில் அதையும் தாண்டி கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவனைக் கடவுளாக்கும் தருணத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். அந்தக் காட்சி மூட நம்பிக்கைகளைத் தாண்டியதாக இருக்கிறது. கொடைக்கானலில் வாழும் பழங்குடிகளின் நம்பிக்கையாக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கொடைக்கானல் சுற்றுலாவுக்கு செல்லும் வரை படத்தின் கதை சற்று மெதுவாக பயணிப்பதைக் குறையாக சொல்லலாம். கொடைக்கானல் சென்றதும் கதையில் வேகம் அனைவரையும் பற்றிக் கொள்ளும். இது எந்த வருடத்தில் நடக்கும் கதை என்பதை ஒரு சிறிய காட்சி மூலம் சொல்லுவார்கள். அந்த இடம் படத்திலேயே மிகவும் முக்கியமான இடமாக இருந்தது. இறுதியில் அந்தக் குகையில் எழுதப்பட்டிருக்கும் கோவை பாய்ஸ், மஞ்ஞுமல் பாய்ஸ் உடன் சில காதலர்கள் பெயர்களைத் திரையில் காட்டும்போது விசில்கள் பறக்கின்றன.

படத்தில் நிகழ்வதுபோல இதெல்லாம் சாத்தியமா என்று லாஜிக் குறித்த கேள்விகள் எழும்போது இது ஒரு உண்மைக் கதை என்பதை படம் முடியும் தறுவாயில், இயக்குநர் அசலாகப் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் காட்டுகிறார். வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்களில் லாஜிக் பார்க்க முடிவதில்லை. ஆனால் திரைப்படமாகப் பார்க்கும்போது அது தேவைப்படுகிறது. இன்னமும் லாஜிக் தொடர்பான காட்சிகள் வைத்திருக்கலாமோ எனவும் தோன்றியது.

நட்பு, குற்ற உணர்வு, புனிதம், சாகசம், அதிர்ஷ்டம், மனிதம் என பல கண்ணிகள் படத்தில் துலங்குகின்றன. சோகத்திலும் நகைச்சுவைக்கான இடங்கள் தவறவே இல்லை. அதுதான் படத்தின் பலமாகவும் இருக்கிறது. த்ரில்லராக ஒரு பக்கம் கதை நகர்ந்துகொண்டிருந்தாலும் கதாபாத்திரங்களின் செயல்கள், ரியாக்‌ஷன்களை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சௌபின் ஷாகிர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஸ்ரீநாத் பாஸிக்கும் முக்கியமான கதாபாத்திரம். இருவரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நண்பர்கள் நடித்த பலரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். எல்லா நண்பர்களது கூட்டத்திலும் ஒரு அண்ணன் தம்பி எப்போதும் அடித்துக் கொண்டு இருப்பார்கள். தம்பியின் பெல்ட்டை எடுத்து உபயோகிக்கும் அண்ணன் என படம் முழுவதும் சிறிய சிறிய விவரணைகள் நம்மை அந்த உலகத்துக்குள் கூட்டிச் செல்கிறது.

படத்துக்கு மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவும் இசையும் இருக்கிறது. கதையை விவரிக்காமல் சொல்ல வேண்டுமானால் ஒரு குகைக் காட்சித் தொடர் வரும். அதை நினைக்கும்போதே மனம் பதைபதைக்கும். இதை நிஜமான இடத்தில் எடுத்தார்களா? அல்லது செட் அமைத்து எடுத்தார்களா எனத் தெரியவில்லை. உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது. இதை எப்படி படமாக்கினார்கள் என்று மேக்கிங் விடியோ வெளியிட்டால் திரைப்பட ஆர்வலர்களுக்கு பாடமாக இருக்கும். ‘2018’ படத்தில் குறைந்த செலவில் வெள்ளத்தைக் காட்சிப்படுத்தியவர்கள் இந்தப் படத்தில் மிகவும் குறைவான பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் குகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துள்ளார்கள்.

குணா குகையில் த்ரில்லர்: மஞ்ஞுமல் பாய்ஸ் - திரை விமர்சனம்!
வித்தைக்காரனின் வித்தைகள் கைகொடுத்ததா? திரைவிமர்சனம்

முதல் பாதியில் ஒரு திருமணத்தில் வரும் கயிறு இழுக்கும் போட்டி எதற்காக என்பது பிற்பாதியில் பார்க்கும்போது புரிந்தது. கூட்டத்தில் வயதானவர், எந்த சண்டையிலும் ஈடுபடாத ஒருவர் படத்தின் முடிவில் நாயகனாகிறார். கடவுள் நம்பிக்கை அற்றவர் இறைவனாகிறார் என்ற தருணங்கள் நெகிழ்ச்சியாக இருந்தன.

சிறு வயது முதலே துரத்தும் கனவு முழுமை கொள்கிறது. நண்பர்கள் பால்ய காலம் முதலே இந்த நட்பு இருக்கிறது என்பதாகவே ஃபிளாஷ்பேக் காட்சிகள் காட்டுகின்றன.

நிஜ வாழ்க்கையில் அனேகமான நேரங்களில் திரைப்படங்களை விஞ்சக்கூடிய நிகழ்வுகளே நடக்கின்றன. ஆபத்தான காலகட்டத்தில் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் மனிதர்களுக்காக நமது அரசு விருதுகளும் தருகின்றன. உண்மைக் கதையைத் திரையில் பார்க்கும்போது லாஜிக் போன்றவற்றை யோசிக்க வேண்டியதில்லைபோல. பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்கள் மஞ்ஞுமல் பாய்ஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com