வித்தைக்காரனின் வித்தைகள் கைகொடுத்ததா? திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வித்தைக்காரன்'.
வித்தைக்காரனின் வித்தைகள் கைகொடுத்ததா?  திரைவிமர்சனம்

கடத்தலில் ஈடுபடும் மூன்று பேருக்கு இடையில் பிரச்னை ஏற்பட அவர்களுக்கு மத்தியில் புகுந்து திருட நினைக்கும் ஒரு மேஜிக் கலைஞனின் கதைதான் வித்தைக்காரன்.

தனக்கு மேஜிக் கலை தெரியும் என வரும் நடிகர் சதீஷ் கடத்தல்காரன் சுப்பிரமணியம் சிவா உடன் இணைந்து தங்கத்தைக் கடத்த முயல்கிறார். அதன்மூலம் இன்னொரு கடத்தல்காரனான ஆனந்த்ராஜை சந்திக்க முடிகிறது. இருவரும் இணைந்து விமான நிலையத்தில் இருந்து வைரங்களைக் கடத்தும் மற்றொரு கடத்தல்காரனிடமிருந்து அதனை திருடிச் செல்ல முயல்கின்றனர். அவர்கள் வைரங்களை கடத்தினரா இல்லையா என்பதே திரைப்படத்தின் கதை.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களை செய்து வந்த நடிகர் சதீஷ் இப்போதெல்லாம் நாயகனாக நடித்து வருகிறார். ஆனால் அதற்குண்டான நடிப்பைக் கொடுத்திருக்கிறாரா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. ஒரு நாயகனுக்கு உண்டான வழக்கமான ஓப்பனிங் பாடல் தொடங்கி ஸ்லோமோஷன் காட்சிகள் வரை அனைத்திலும் தடுமாறியிருக்கும் சதீஷ் வலுக்கட்டாயமாக தன்னை நிறுவிக்கொள்ள முயன்றிருக்கிறார்.

நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் சிம்ரன் குப்தா. தொடக்கத்தில் அவருக்கான அறிமுகக்காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் இறுதிவரை அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவர் பயன்படுத்தப்படவில்லை. பத்திரிகையாளராக வரும் சிம்ரன் குப்தா இறுதிக் காட்சி வரை எதற்காக இருக்கிறார் என்பதையே புரிந்துகொள்ள முடியாததது சோகம். இவர்களைத் தவிர நடிகர்கள் சுப்பிரமணியன் சிவா, ஆனந்தராஜ், மதுசூதனன், பவெல் நவகீதன், மாரிமுத்து, ஜான் விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார் என பலர் நடித்துள்ளனர்.

ஆனந்தராஜ் வரும் இரண்டாம்பாதி முழுக்க நகைச்சுவையால் நிரப்ப முயற்சித்திருக்கின்றனர். முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி சொல்லிக்கொள்ளும் படியாக உள்ளது. ஆரம்பத்தில் அதிரடியாக வில்லன்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர்களையும் காமெடியன்களாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஒருகாட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்பில்லாத தன்மை முதல்பாதியை சோதிக்கச் செய்கிறது. காட்சிகளின் ஒழுங்கற்ற தன்மையை புரிந்து கொள்ளவே இரண்டாம் பாதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. படத்தொகுப்பில் சற்று கவனமாக வேலை செய்திருக்கலாம். அதேபோல் பின்னணி இசை. எந்த இடத்திலும் கைகொடுக்காத பின்னணி இசை காட்சிகளையும் தொந்தரவு செய்கிறது.

லாஜிக் மீறல்கள் இருந்தாலும் காட்சிகளை திறம்பட கையாள முடியும். திரைக்கதை உருவாக்கத்தில் இயக்குநர் சறுக்கியதன் விளைவாக ஒட்டுமொத்த படமும் பார்வையாளர்களை சோதிக்கின்றது. அடுத்து என்ன நடக்கும் எனும் கேள்வி எழாமல் அடுத்து முடிந்துவிட்டால் நலம் என எண்ணச் செய்கிறது திரைக்கதை உருவாக்கம். கேமரா பணிகள் சற்று ஆறுதலாக இருக்கின்றன. அவ்வாறே மற்ற அனைத்தும் அமைந்திருந்தால் திரைப்படத்தைப் பாராட்டியிருக்கலாம்.

வித்தைகள் எதுவும் இல்லாமல் பொறுமையை சோதித்திருக்கிறார் வித்தைக்காரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com