அஜயன் சல்லிசேரி - குணா குகை கலைஞர்!

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற குணா குகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜயன் சல்லிசேரி - குணா குகை கலைஞர்!

மலையாள சினிமாவின் தரத்திற்கு மற்றொரு உதாரணமாக உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் பிப்.22 ஆம் தேதி வெளியான இப்படம் வசூலைக் குவித்து வருகிறது. படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் கேரள, தமிழக திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கேரளத்தின் மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் குழு கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு, குணா குகைக்குச் சுற்றிப் பார்க்க சென்றபோது எதிர்பாராத விதமாக ஒருவர் குகைக்குள் தவறி விழுகிறார். விழுந்தவரை உடன் வந்த நண்பர்கள் காப்பாற்றினார்களா இல்லையா என்கிற உண்மைச் சம்பவத்தை திரில்லர் பாணியில் உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

படத்தில் பேசப்பட்ட நட்பின் மகத்துவம், நண்பர்களுக்கு இடையேயான் பிணைப்பு ஆகியவை ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பலருக்கும் பெரிய ஆச்சரியமாக இருந்தது குணா குகைதான்.

மஞ்சுமெல் பாய்ஸ் படப்பிடிப்பை உண்மையான குணா குகையில் எடுத்தார்களா? என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் படத்தின் கலை இயக்குநர் அஜயன் சல்லிசேரி. நிஜமாகவே, ஒருவர் குகைக்குள் சிக்கிக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை தன் அசாத்திய கலைத்திறனால் குணா குகை போன்ற செட் அமைத்து காட்சிக்குக் காட்சி விழிகளை விரியவைத்திருக்கிறார்.

படத்தில் ஸ்ரீநாத் பாசி கதாபாத்திரம் குகைக் குழிக்குள் விழுந்ததும் தொடங்கிய பதைபதைப்பு இறுதிவரை நீடித்ததற்கு குகை செட்டின் உண்மைத்தன்மையும் மிக முக்கியமான காரணம். 900 அடி ஆழம் கொண்ட குணா குகையை நம்பகமான செட்டாக மாற்றுவது சாதாரண விஷயமா? இந்த அசாதாரணத்தை எப்படி சாத்தியமாக்கினோம் என்பதை நேர்காணலில் கூறியிருக்கிறார் அஜயன்.

அந்த நேர்காணலில், “இப்படி ஒரு உண்மைச் சம்பவத்தை படமாக்கத் திட்டமிட்டுள்ளதை நடிகர் சௌபின் சாகிர் என்னிடம் கூறினார். இதற்காக, கொடைக்கானல் சென்று சிறப்பு அனுமதி பெற்று குணா குகையைக் காண உள்ளே சென்றோம். அதன் தோற்றம் பயத்தைக் கொடுத்தது. சுற்றிலும் பாறைகள், குகைகள், ஏற்கனவே தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குழியை மூடியிருந்த இரும்பு தடுப்புகள், பூ, செடி, சேறு, வவ்வால்கள், அதன் நாற்றம் என குணா குகை வியக்க வைத்தது. அதைப் பார்த்துவிட்டு திரும்பிய அடுத்த சில நாள்கள் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. கண்ணை மூடினாலே பெரிய குகை பாறைகளுக்கு நடுவே நிற்பது போன்ற கனவு வந்தது. குணா குகையில் இருந்தபோது அதன் தோற்றத்தைக் குறிப்பெடுத்துக்கொண்டேன்.

ஒரு பாறைத்தொடருக்கும் இன்னொரு பாறைக்கும் இடையேயான தொலைவு உள்பட கச்சிதமாக கணக்கு எடுத்துக்கொண்டோம். கொடைக்கானலில் உள்ள பிற பாறைகளின் வளைவு நெளிவுகளை அச்சாக்கி, ஃபைபரில் பாறைகளைச் செய்ய ஆரம்பித்தோம். ஆனால், குணா குகையைப் போல ஆழத்தைக் காட்ட வேண்டும் என்றால் நம்மிடம் குறைந்தது 50 அடி உயரம் கொண்ட ஸ்டுடியோ வேண்டும். அப்போதுதான், செட் அமைத்து மேலிருந்து கீழ் என கேமரா கோணங்களை வைக்க முடியும்.

குணா குகை
குணா குகை

ஆனால், அந்த அளவிற்கான உயரம் கொண்ட செட் எங்கும் இல்லை. 50 அடிக்கு குழி தோண்டவும் முடியாது. இறுதியாக, பெரும்பாவூரில் ஒரு பழைய குடோனைக் கண்டுபிடித்தோம். செட் அமைக்க சரியாக இருந்ததால் அங்கு குணா குகையைப் போன்றே செட் அமைத்தோம். நீங்கள், இந்தக் குணா குகையைக் கூர்மையாக கவனிக்க மட்டும் மீண்டும் ஒருமுறை மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தைப் பாருங்கள். கொடைக்கானல் குளிரைக் காட்ட மூன்று லாரிகளில் ஐஸ்கட்டிகளைக் கொண்டு வந்து பனியை உருவாக்கினோம். செடிகள், மரங்கள் என உண்மையிலேயே குகையைச் சுற்றியே இருப்பீர்கள். அதுதான் எங்களுக்குக் கிடைத்த வெற்றி” எனக் கூறியுள்ளார்.

அஜயன் சல்லிசேரி, கொடைக்கானல்.
அஜயன் சல்லிசேரி, கொடைக்கானல்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991-ல் வெளியான ‘குணா’ திரைப்படத்தின் மூலமே கொடைக்கானலில் அப்படியொரு குகை இருக்கிறது என்பதை பலரும் தெரிந்துகொண்டார்கள். குணா படப்பிடிப்பு ‘டெவில் கிட்சன்’ என்கிற அந்தக் குகைகளிலேயே நடைபெற்றிருக்கிறது. படம் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதும் அக்குகைக்கு ‘குணா குகை’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.

அஜயன் சல்லிசேரி - குணா குகை கலைஞர்!
குணா குகையில் த்ரில்லர்: மஞ்சுமெல் பாய்ஸ் - திரை விமர்சனம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com