பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முக்கியமானப் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போதைய சில முக்கியமான இயக்குநர்களுக்கு முன்னுதாரணமாக ராம் கோபால் வர்மா இருக்கிறார்.
ராம் கோபால் வர்மாவின் சிவா, சத்யா, ரங்கீலா, சர்கார் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது சிறிய அளவிலான படங்களினை இயக்கி வருகிறார்.
சர்ச்சையான கருத்துகளை பேசியும் நடிகைகளுடன் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் அடிக்கடி டிரெண்டிங்கிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார்.
தற்போது, ஆந்திராவின் முதல்வர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் பயணத்தை மையமாக வைத்து 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பவன் கல்யாணின் ஆதரவாளர்களால் அவருக்குக் கொலை மிரட்டல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போலியான துப்பாக்கி மற்றும் படத்தின் 'யு/ஏ' சான்றிதழுடன் எக்ஸில் பதிவிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 2 நிமிடமாக இருக்கும். வரும் மார்ச் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதே கதைப் பின்னணியில் பிப்.8ஆம் தேதி நடிகர் ஜீவா நடிப்பில் யாத்ரா 2 படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.