தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இவரை நட்சத்திர நடிகராக மாற்றியது. அதன்பின் கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, இருவரும் இதுவரை கருத்து சொல்லவில்லை.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ராஷ்மிகா ரசிகர் பக்க கணக்கிலிருந்து, ‘ராஷ்மிகா இந்தியாவின் தேசிய கிரஷ். அவருக்கு கணவராக வருபவர் சிறப்பானவராக இருக்க வேண்டும். விடி(vd) மாதிரி. அதாவது வெரி டேரிங் (very daring). ) (ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவை விடி என்றே அழைக்கின்றனர்). ராஷ்மிகாவை ராணி என்றே அழைக்கிறோம். அதனால், அவரை பாதுகாப்பவரும் ராஜாவாக இருக்க வேண்டும்.' எனப் பதிவிட்டனர்.
இந்தப் பதிவைப் பகிர்ந்த ராஷ்மிகா, ‘மிகவும் உண்மை’ எனப் பதிலளித்துள்ளார். இதனால், விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா விரைவில் திருமணம் செய்துகொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.