
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஹினா கானை போராளி என பாராட்டியுள்ளார் நடிகை சமந்தா.
நடிகை ஹினா கான் (36) பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றவர்.
பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில், இவர் புற்றுநோய் தொடர்பாக சிகிச்சை எடுத்து வருவதாகத் தகவல் வெளியானது. இது, வதந்தியாகவே இருக்கும் என ரசிகர்கள் நம்ப மறுத்தனர்.
இந்த குழப்பங்களைத் தொடர்ந்து, ஹினா கான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு 3ஆம் கட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
மேலும் அந்தப் பதிவில், “என் நலன் விரும்பிகளுக்கு முக்கியமான செய்தியைப் பகிர்கிறேன். நான் 3 ஆம் நிலை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தைரியமாகவே இருக்கிறேன். இதற்கான சிகிச்சையும் துவங்கியுள்ளது. உங்களின் அன்பு, பிராத்தனை, ஆசீர்வாதங்களைப் பாராட்டுகிறேன். உங்களின் தனிப்பட்ட அனுபவங்களும், ஆதரவான ஆலோசனைகளும் இந்த பயணத்தில் என்னை முன் நகர்த்தும். உங்கள் அன்பிற்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஹினா கானுக்கு பல பிரபலங்களும் தங்கள் பிராத்தனையைத் தெரிவித்ததுடன் உறுதியாக இருக்கச் சொல்லி ஆறுதல் வார்த்தைகளையும் கூறினர்.
இந்த நிலையில், நடிகை சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹினா கான் பதிவிட்ட விடியோயைப் பகிர்ந்து, "உங்களுக்காக பிராத்திக்கிறேன் ஹினா கான்” எனக் கூறியதுடன் ‘போராளி (வாரியர்)’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பகிர்ந்த ஹினா கான், “நீங்கள் மிகச்சிறந்த நட்சத்திரம் என்பதை அறிவேன். வாழ்க்கை உங்கள் மீது வீசிய அனைத்தையும் நீங்கள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியத்துக்கும் அப்பாற்பட்டது. நிறைய அன்பும் வாழ்த்துகளும் சமந்தா” என நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைகளின் மூலம் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.