பாலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்கி கௌசல். பாம்பே வெல்வட், மசான், ராமன் ராகவ் 2.0, ராஜி, லஸ்ட் ஸ்டோரிஸ், மன்மர்ஜியான், தி சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றவர். கத்ரீனா கைஃபை 2022இல் மணந்துகொண்டார்.
தற்போது அனிமல் படத்தில் நடித்து புகழ்பெற்ற நாயகி திரிப்தி திம்ரியுடன் இணைந்து ‘பேட் நியூஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு பாடலில் இவர்களின் நெருக்கமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகின.
இந்நிலையில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. இதில் 3 நெருக்கமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. 9, 10, 8 நொடிகள் என மூன்று இடங்களில் வரும் முத்தக் காட்சிகள் மொத்தமாக 27 நொடிகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் சில முத்தக் காட்சிகள் நீக்காமல் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆல்கஹால் குறித்த சில மாற்றங்களையும் செய்யும்படியும் படக்குழுவிடம் தணிக்கை வாரியம் முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் கால அளவு 142 (2 மணி நேரம் 22 நிமிடம் ) இருக்குமெனவும் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் திரிப்தி டிம்ரி இரண்டு ஆண்களால் கற்பமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது வித்தியாசமான அறிவியல் நிபந்தனையான ஹெட்ரோபேட்டர்னல் சூப்பர்பெகுண்டேஷன் முறைமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
விக்கி கௌசல், அமி விர்க் இரண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். இந்த நகைச்சுவை படத்தினை ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை கரன் ஜோகரின் தர்மா புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் ஜூலை 19ஆம் நாள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.