கறுப்பு வெள்ளை... அழியா மணிவண்ணன்!

இயக்குநர் மணிவண்ணன் பிறந்த நாளில் அவருடைய நினைவாக...
கறுப்பு வெள்ளை... அழியா மணிவண்ணன்!
Published on
Updated on
3 min read

தமிழின் அரசியல் திரைப்படங்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் தவிர்க்கவே முடியாத படம் அமைதிப் படை, இயக்குநர் மணிவண்ணன்! பிறகு அந்த அல்வா!

வலுவான அரசியல் தெரிந்த, தமிழ் உணர்வாளரும் தமிழீழ ஆதரவாளருமான  மணிவண்ணன், இயக்குநராகப் பெரும் வெற்றி பெற்றாலும்கூட, நடிகராகத்தான் அனைத்துத் தரப்பு மக்களையும் எளிதில் சென்றடைந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் கதை வசனம் எழுதத் தொடங்கி உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் வெற்றிகரமான இயக்குநராகவும் பரிணமித்த மணிவண்ணன், பாரதிராஜா இயக்கத்திலேயே (நிழல்கள் ரிக்‌ஷாக்காரர் தொடங்கி) நடிக்கவும்கூட செய்தார்.

கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், அமைதிப்படை உள்பட ஏறத்தாழ 50 திரைப்படங்களை இயக்கியவர். 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவையும் சரி, குணச்சித்திரமும் சரி, வில்லத்தனமும் சரி, நடித்த பாத்திரங்களை வெவ்வேறு உயரங்களுக்குக் கொண்டு சென்றவர் மணிவண்ணன் (அவ்வை சண்முகி முதலியாரை, சங்கமம் ஆவுடைப் பிள்ளையை, கொடி பறக்குது கே.டி.யை… மறக்க முடியுமா?).

பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்து உச்சம் தொட்டவர்களில் ஒருவரான மணிவண்ணன் எவ்வாறு பாரதிராஜாவிடம் வந்து சேர்ந்தார்? ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம் பற்றி என்ன நினைத்தார்?

கறுப்பு வெள்ளை... அழியா மணிவண்ணன்!
இயக்குநர் மகேந்திரன் எடுக்காத திரைப்படங்கள்!

1982, நவம்பரில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறுகிறார்:

“பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தைப் பார்த்துவிட்டு அதனுடைய பாதிப்புகளை, நிறைகுறைகளைப் பற்றி சுமார் 90 பக்கங்களுக்கு ஒரு கடிதத்தை அவருக்கு எழுதினேன். உடனே, அவர், நீங்கள் திரைத் துறையில் பணியாற்ற விருப்பமிருந்தால் என்னை வந்து பாருங்கள் என்று எழுதினார்.

“நான் கோயம்புத்தூரில் அப்போது இயல் இசை நாடக மன்றத்தின் மூலமாக நாடகங்கள் எழுதி நடத்திக்கொண்டிருந்தேன். உடனே சென்னைக்கு வந்து டைரக்டரைப் பார்க்க முயற்சித்தேன். ஆனால், அப்போது சில சூழ்நிலையினால் அவரைச் சந்திக்க முடியாமல் கேஆர்ஜி புரொடக்.ஷன்ஸ் கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.. அப்போது கேஆர்ஜி கம்பெனி படத்தை பாரதிராஜா டைரக்ட் செய்துகொண்டிருந்தார்.

“அந்தப் படத்துக்கான புரொடக்.ஷன் சம்பந்தமாக கேஷியர் மாதிரி நான் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் மனோபாலா, ரங்கராஜன் ரெண்டு பேரும் அசிஸ்டென்ட் ஆக பாரதிராஜாவிடம் சேர்ந்திருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் என்னையும் சேர்த்துக்கொள்வாரா? என்ற சந்தேகத்தில் அவரிடம் என்னைப் பற்றி ஒண்ணும் சொல்லிக்காமலேயே புரொடக்.ஷன் வேலையிலேயே இருந்துவிட்டேன்.

“ஒரு நாள் டைரக்டரை நேரடியாக சந்தித்தபோது, நான்தான் மணிவண்ணன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஏன், இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவில்லை? என்று அவர் கேட்டார்.

“அதன் பிறகு அவரிடம் ஒரு கதை சொன்னேன். அதுதான் இப்போது (1982-ல்) மனோபாலா எடுத்திருக்கும் ஆகாயகங்கை. அது அப்போது அவருக்குப் பிடிக்காததால் நிழல்கள் கதையைச் சொன்னேன். ஒவ்வொரு காட்சியாக நான் சொன்னதைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்துக்கு நீங்களே வசனம் எழுதிடுங்க என்று சொல்லி ரூம் போட்டுக் கொடுத்தார்.

“ஏறக்குறைய வசனம் முழுவதும் எழுதி முடிச்சிட்டேன். அந்த நேரத்தில்தான் கல்லுக்குள் ஈரம் படம் ஆரம்பம். அவுட்டோர் போகும்போது, நீங்களும் வர்றீங்களா? என்று டைரக்டர் கேட்டார்.

“பொதுவாக எல்லாரும் அஸிஸ்டென்ட்டா இருந்து அப்புறமா ஒரு ரைட்டரா மாறுவாங்க. நான் ஒரு ரைட்டரா ஆரம்பிச்சு கல்லுக்குள் ஈரம் படத்துக்கு  அஸிஸ்டென்ட் ஆக வொர்க் பண்ணினேன். நிழல்களுக்குப் பிறகு, அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் படங்களுக்கு வசனம் எழுதினேன்.

“ஒரு டைரக்டராக வர வேண்டும் என்பதற்காகத்தான் பாரதிராஜா சார்கிட்ட அஸிஸ்டென்டா சேர்ந்தேன். என்னைப் பொருத்தவரை டைரக்டரோட அனுமதியுடன்தான் இப்போ இரண்டு படம் டைரக்ட் செய்கிறேன். அவர் சொல்லிதான் நான் டைரக்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். சில பேர் நினைக்கிற மாதிரி அவரைப் பகைச்சிட்டு வந்து படம் பண்ணவில்லை. இரண்டு பட பூஜைகளுக்கும் அவர் வந்து வாழ்த்தினார்.

இயக்குநர் மணிவண்ணன்!
இயக்குநர் மணிவண்ணன்!

“ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம் என்றெல்லாம் இரண்டாக எதுவும் எனக்குத் தெரியவில்லை. எல்லாமே ஒரே மாதிரிப் படங்கள்தான். ஏசி ரூமில் உட்கார்ந்திட்டு குடிசையைப் பற்றிப் படம் எடுக்கிறது ஆர்ட் பிலிமில்லை. யாரைப் பற்றிப் படம் எடுக்கிறார்களோ அது அவனிடம் போய்ச் சேராதபோது அதில் ஆர்ட் பிலிம் என்ன வேண்டியிருக்கிறது? ஆனால், என்னைப் பொருத்தவரை சரியான கருத்துகளை சினிமாவில் சொல்ல முடியாது. அந்தக் கருத்துகள் சம்பந்தப்பட்டவர்களிடம் போய்ச் சேருவதற்கு எத்தனையோ சிரமங்கள் இருக்கின்றன. கிராமத்து ஜனங்கள் பற்றித்தான் அதிகமாகப் படம் எடுக்கிறோம். ஆனால், அந்தக் கிராமத்து ஜனங்களே அந்தப் படங்களைப் பார்க்க முடியாம பல கிராமங்களில் சினிமா கொட்டகைகள்கூட இல்லாமல் இருக்கும் நிலை இப்போதும் இருக்கிறது.

கறுப்பு வெள்ளை... அழியா மணிவண்ணன்!
ஓவியரான சிவகுமார் நடிகராகத் தொடர யார் காரணம்?

“இப்போது நான் பண்ணிட்டிருக்கிற ரெண்டு படங்கள்ளேயும் பெரிசா வித்தியாசமா எதையும் செய்திட்டதா சொல்லிக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. என்னோட எண்ணங்களை அங்கங்கே வைச்சுக்கிட்டு மற்றபடி மாமூல் சினிமாவாத்தான் செய்திருக்கிறேன்.

“ஜோதி படத்தில் மாதர் விடுதலை என்பது போலி அப்படிங்கறதை ஒரு கதையா செய்திருக்கிறேன். கோபுரங்கள் சாய்வதில்லை, கலைமணியின் கதை. திரைக்கதை வசனமும் டைரக்.ஷனும் நான்தான். பாரதப் பண்பாட்டுக் கோபுரங்கள் எப்போதும் சாய்வதில்லை அப்படிங்கற கருத்துல ஒரு பிரச்சினையைச் சொல்லியிருக்கிறேன்”.

நாற்பதாண்டுகளுக்கு முன்னர் இயக்குநராக அறிமுகமான காலத்தில் தரப்பட்ட நேர்காணல் இது. கால ஓட்டத்தில் பிற்காலத்தில் திரைப்படங்கள், ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம் போன்ற விஷயங்களில் அவருடைய பார்வையில் மாற்றங்கள் இருந்தாலும் அவருடைய இயக்குநர் பாரதிராஜா மீது கொண்டிருந்த மரியாதையில் எந்த மாற்றமும் இருந்ததில்லை.

கொங்கு பாணியில் அவருடைய பேச்சும் நடிப்பும், அவர் இயக்கிய படங்களும் இன்று மட்டும் அல்ல, என்றென்றும் நினைவில் நிற்பவை.

ஜூலை 31 – இயக்குநர் மணிவண்ணன் பிறந்த நாள்.

வாழ்ந்திருந்தால் அவருக்கு இன்று 71 வயது நிறைந்திருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com