மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
உலகளவில் முதல்நாளில் ரூ.16 கோடி வசூலித்த இப்படம், வெளியான 25 நாட்களில் ரூ.150கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக கூறியிருந்தது.
இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது. ஆஸ்கர் விருது விழாவுக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளதால் பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் அதன்பிறகே இதன் ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் குறித்து முடிவு எடுக்கப்படுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படக்குழு ஓடிடி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.