தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் சேர்த்து மொத்தமாக 700க்கும் அதிகமான படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஊர்வசி.
சமீபத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜே.பேபி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாளத்தில் நடிகை பார்வதியுடன் உள்ளொழுக்கு எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தினை ஆர்எஸ்விபி தயாரிக்க கிரிஸ்டோ டாமி இயக்க சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இன்று ( ஜூன் 21) வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் புரமோஷன் நேர்காணல் ஒன்றில் ஊர்வசி கூறியதாவது:
உருவகேலி நகைச்சுவைகளை நான் எப்போதும் ஆதரித்ததில்லை. இது தொடர்பான டாப்பிக்கினை யாராவது பேச முன்வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கும். இந்த மாதிரியான நகைச்சுவைகள் தீயான தாக்கத்தை நீண்ட காலங்களுக்கு ஏற்படுத்தும். உருவ கேலியை தங்களது திறமையாக யாராவது முன்வைத்தால் நான் அவர்களுக்கு பூஜ்ய மதிப்பெண்களையே தருவேன்.
குறிப்பாக குழந்தைகளிடம் இதுமாதிரி நகைச்சுவைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உருவத்தினை தாண்டி அனைவருக்கும் மரியாதை தருவதுதான் பொதுத்தளமான சினிமாவில் அனைவரையும் உள்ளடக்கிய சரியான அணுகுமுறையாகும்.
100 சதவிகிதம் சரியான உடல்வாகுடன் எல்லோராலும் பிறக்கமுடிவதில்லை. இந்தச் சமூகத்தில் எந்த வடிவத்திலும் உருவ கேலி இருக்கக்கூடாது என்றார்.
இந்தக் கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கிடைத்து வருகின்றன.