நடிகர் கமல்ஹாசன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருடன் உரையாடிய விடியோ வெளியாகியுள்ளது.
பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.
இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை உலகளவில் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளது.
இதற்கிடையில், மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து தன் வாழ்த்துகளைப் பகிர்ந்ததுடன் குணா படத்தை இயக்கிய அனுபவத்தையும் கூறினார்.
அந்த விடியோவை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “குணா படத்தை எடுத்த குகைகள் மிகவும் ஆபத்தானவை. நானும் அங்கிருந்து குரங்குகளின் மண்டையொட்டை எடுத்திருக்கிறேன். ஹேராம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட குரங்கு மண்டையொடு குணா குகையிலிருந்து எடுத்ததுதான். கண்மணி அன்போடு காதலன் பாடல் எனக்கும் இளையராஜாவுக்கும் இடையேயான காதல் கடிதம்தான்.” எனக் கூறியுள்ளார்.