
மோகன்லால்- ஜீத்து ஜோசப் 4வது முறையாக இணைந்து உருவாக்கிய ராம் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கிறது.
பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் நடிகர் மோகன்லால் வைத்து 2013இல் எடுத்த த்ரிஷ்யம் திரைப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இதனை தமிழில் நடிகர் கமலை வைத்து ‘பாபநாசம்’ என ஜீத்து ஜோசப் இயக்கி அந்தப் படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ரீமெக் செய்யப்பட்டது. ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2019இல் ‘த்ரிஷ்யம் 2’ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 3வது பாகமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கூட்டணியில் 3வது படமாக ‘டுவெல்த் மேன்’ எனும் த்ரில்லர் படத்தினை கரோனா காலகடத்தில் எடுத்து ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படமும் நல்ல வரவேற்பினை பெற அடுத்து 4வது முறையாக ‘ராம்’எனும் படம் படப்பிடிப்பு துவங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர், ஆசிர்வாத் சினிமாஸின் 33வது படமாகவும் 5வது முறையாக இந்தக் கூட்டணியில் உருவான ‘நெரு’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஜன.23 இந்தப் படம் ஓடிடியில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஜீத்து ஜோசப், “லண்டனின் ஒரு முக்கிய சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது நடிகைக்கு விபத்து நேரிட்டது. பின்னர் அங்கு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் படப்பிடிப்பினை தொடர முடியவில்லை. மீண்டும் அங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டுமானால் அதே காலநிலையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் முந்தையக் காட்சிகள் வீணாகிவிடும். ஏனெனில் படத்தில் இந்த ஒரே மாதிரியான நிலப்பரபில் வரும் காட்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுமட்டுமின்றி மொராக்கோ, துனிசியாவிலும் படப்பிடிப்பு நடத்தவேண்டியுள்ளது. மீண்டும் ராம் படத்தினை கொண்டுவர நாங்கள் கடுமையாக போராடுகிறோம். மோகன்லால், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு உள்பட பலரும் எப்படியாவது இந்த தடைகளை எல்லாம் தாண்டி படத்தினை திரைக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
ராம் படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிவருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.