கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சிறந்த சாதனைக்கான பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சந்தோஷ் சிவன். 1986-ல் நிதியுடே கதா என்கிற மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தி டெரரிஸ்ட், உருமி, மல்லி, மும்பைக்கார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இதுவரை 12 தேசிய விருதுகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியவர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, இருவர், ராவணன், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இந்தப் படங்களின் வெற்றியில் பெரும் பங்காற்றியவர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் அதிக பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று ரோஜா. ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமான அப்படத்தில் இடம்பெற்ற ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் இந்தியளவில் மிகப் பெரிய கவனத்தைப் பெற்றதற்கு ரஹ்மான் ஒரு காரணம் என்றால், அப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப வயல்கள், அருவி, மரம் என கண்களைக் கவரும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இன்னொரு காரணம்.


இந்தப் பாடல் குற்றாலத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டபோது வயல்வெளிகளின் பச்சை நிறம் குறைவாக இருக்க, சந்தோஷ் சிவனிடம் “எனக்கு பாரதிராஜா படத்தில் வருவது போன்ற அடர் பச்சையான வயல் வேண்டும்” என வருத்தப்பட்டுச் சொன்னாராம் இயக்குநர் மணிரத்னம். சிறிது நேரம் யோசித்த சந்தோஷ் சிவன் லைட்டிங் மற்றும் கண்ணாடி மூலம் பச்சை வயலை ஓவியம்போல் ஒளிப்பதிவில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார். இந்த அழகைக் கண்ட பல இயக்குநர்கள் படப்பிடிப்புக்காக குற்றாலத்தைத் தேடிச் சென்றதற்கு சந்தோஷ் சிவனே காரணம்.

இதுபோல், ‘காட்டுக் குயிலு’ (தளபதி), ‘நறுமுகையே’ (இருவர்), ‘காட்டுச் சிறுக்கி’ (ராவணன்) உள்ளிட்ட பாடல்களில் வெளிப்பட்ட ஒளிப்பதிவு தரமும் காட்சி ஒருங்கிணைப்பும் விமர்சகர்கள் மத்தியில் நினைவு கூறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எந்தக் கதையைத் திரை வழியே சொன்னாலும் அதற்கு தன்னால் முடிந்த வண்ணங்களைச் சேர்த்து ஓவியமாக மாற்றுவதில் கலைஞரான சந்தோஷ் சிவன், தான் இயக்கிய ‘உருமி’ படத்தின் ஒளிப்பதிவை ஓவியம் போன்றே காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்தார்.

இன்றும் பெருந்தச்சன், காலாபாணி, அஹம், இருவர், ராவணன் உள்ளிட்ட படங்கள் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் தனித்துவம் பெற்ற படங்களாக கருதப்படுகின்றன.

ஒளிப்பதிவாளர் என்பதைத் தாண்டி இயக்குநராகவும் தனி கவனம் பெற்றவர் சந்தோஷ் சிவன். 1988-ல் இவர் இயக்கிய ‘ஸ்டோரி ஆஃப் திப்லு’ குறும்படத்திற்கு சிறந்த குறும்படம் பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படம் உள்பட இவர் இயக்கிய ஹலோ, தி டெரரிஸ்ட், மல்லி, நவரசா, ப்ரம்பா ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை வென்றவை.

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!
கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மும்பைக்கார் படத்தை இயக்கி முடித்துள்ளார். கலியுகம், மோகா ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக வழங்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, 2024 ஆம் ஆண்டிற்காக சந்தோஷ் சிவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை நடிகை ப்ரீத்தி ஜிந்தா, சந்தோஷ் சிவனுக்கு வழங்கினார்.

விருதைப் பெற்ற சந்தோஷ் சிவன், “இந்த விருதிற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், முதலில் கேரளத்திற்கு தெரிவிக்கிறேன். மலையாள சினிமாதான் எனக்கு ஒளிப்பதிவில் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தது. நிச்சயமாக, ஒளிப்பதிவுக்கு மொழியே தேவையில்லை. அதனால்தான், தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் மொழிகளில் என்னால் பணியாற்ற முடிந்தது. இந்தத் துறையின் சிறப்பே இதற்கு எல்லைகளே இல்லை என்பதுதான்.

ஜப்பான் புகைப்பட கலைஞர்களால் அழைக்கப்பட்டபோது அவர்களுடன் 15 நாள்கள் இருந்தேன். நான் கிளம்பும்போது 'சைய்ய.. சைய்ய..’ (உயிரே - மணிரத்னம்) பாடலை பாடி விடைகொடுத்தனர். நான் நல்ல கணவனாக இருந்ததில்லை. காரணம், எப்போதும் திரைப்பட பணிகளிலேயே இருக்கிறேன். இம்முறை, என் மனைவி மற்றும் மகன் இங்கு இருக்கிறார்கள். இந்த விருதிற்காக அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நன்றி” எனத் தெரிவித்தார்.

இதுவரையிலும் உலகளவில் புகழ்பெற்ற 10 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். ஆசியாவிலிருந்து இவ்விருதைப் பெறும் முதல் ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை அடைந்திருக்கிறார் சந்தோஷ் சிவன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com