![நடிகர் நிவின் பாலி](http://media.assettype.com/dinamani%2F2024-11-06%2F73lt25u3%2FScreenshot-2024-11-06-150938.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
நடிகர் நிவின் பாலி படவாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப். 3 ஆம் தேதி ஊனுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து, பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 6-வது ஆளாக நிவின் பாலி இணைக்கப்பட்டார். பாதிக்கப்பட்டதாகக் கூறிய பெண், நீதிபதி ஹேமா அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் எழுப்பினார்.
இச்சம்பவம் குறித்து ஊனுக்கல் காவல் துறையிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: ஒரு நாளில் 100 சிகரெட்... புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ஷாருக்கான்!
இந்த நிலையில், அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் துபையில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் டிச.14,15; 2023 அன்று நடிகர் நிவின் பாலி கேரளத்தில் இருந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையென கொத்தமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கையைச் சமர்பித்துள்ளது. இதனால், நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் போலி என உறுதியாகியுள்ளது.
இந்த புகார் எழுந்தபோது இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், ‘நிவின் பாலிக்கு எதிரான இந்த புகார் நியாயமற்றது. சம்பவம் நடந்த அன்று, நிவின் என்னுடன் வர்ஷங்களுக்கு ஷேசம் படப்பிடிப்பிற்காக கொச்சியில் இருந்தார்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.