
நடிகர் ஷாருக்கான் புகைப் பழக்கத்தைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இன்றைய நிலவரப்படி இந்தியாவின் ரூ. 1000 கோடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை இவரே வைத்திருக்கிறார். தயாரிப்பாளராகவும் வணிக ரீதியாக பல கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார்.
இதையும் படிக்க: ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியான ஓவியா!
இந்த நிலையில், கடந்த நவ. 2 ஆம் தேதி நடிகர் ஷாருக்கான் தன் 59-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது, ரசிகர்களுடன் உரையாடிய ஷாருக், ‘நண்பர்களே, ஒரு நல்ல செய்தி, நான் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப் பழக்கத்தை நிறுத்தியதும் மூச்சு திணறல் பிரச்னையிலிருந்து முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். சிகரெட் புகைப்பதைக் கைவிட்டதும் மூச்சுத் திணறல் ஏற்படாது என நினைத்தேன். ஆனால், அந்த உணர்வு கொஞ்சம் இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
ஷாருக்கான் என்றால் அவரின் சிக்ஸ்பேக் நினைவிற்கு வந்தாலும் பல ஆண்டுகளாக நாளொன்றுக்கு 100 சிகரெட் வரை புகைத்துக் கொண்டிருந்தவர். பொதுவெளி, ரசிகர்கள் சந்திப்பு என எங்கு சென்றாலும் புகைத்துக்கொண்டே இருப்பார். மேலும், இதனால் சரியான உணவு மற்றும் தண்ணீர் அருந்தும் பழக்கமும் இல்லை என்கிற தகவலை 2011 ஆம் ஆண்டு ஷாருக்கானே கூறினார்.
தற்போது, தன் வயதும் மற்றும் உடல்நலத்தைக் கணக்கில் கொண்டு புகைப்பழக்கத்தைக் கைவிடும் முடிவை அவர் எடுத்திருப்பது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.