நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 150 கோடியையும் உலகளவில் ரூ. 300 கோடியையும் வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: தனுஷ் - நயன்தாரா மோதல் ஆர்வமாக இருந்தது: பார்த்திபன்
அமரன் ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் இம்மாத இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், தற்போது வரை படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பால் அமரன் ஓடிடி தேதியை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து படத்தைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து, பதிவிட்ட ராஜ்குமார் பெரியசாமி, “லவ் யூ விஜய் சார். நன்றி. எப்போதும் உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன்.” எனக் குறிப்பிட்டு துப்பாக்கி படப்பிடிப்பின்போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்து 12 ஆண்டுகள் 2 மாதம் ஒருநாள் 12 மணிநேரம் ஆகிவிட்டது உங்களுடன் இன்னொரு புகைப்படத்தை எடுக்க...” என இரண்டு படங்களையும் வெளியிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.