ஆலியா பட்டின் அதிரடியான கதைத் தேர்வுக்கு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியும் ஒரு காரணம் என சமீபத்திய நேர்காணலில் ஆலியா பட் கூறியுள்ளார்.
ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலிய பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமாகி கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.
ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.
செல்வாக்கு மிகுந்த நடிகை
ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட் ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூரை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஹா எனும் பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பரில் பிறந்தது.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் லவ் அன்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் நடிகை ஆலியா பட் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
ஜிக்ரா படம் வரும் அக்.11ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மா புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஆலியா பட் அதிரடியான சண்டைக்காட்சிகளில் நடிப்பது பற்றி கூறியதாவது:
ஒரு பெண் சண்டையிடும்போது அதில் பெண் சண்டையிடுகிறாள் எனப் பார்க்க தேவையில்லை. ஒரு மனிதர் ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டையிடுகிறார். ஆண், பெண் என்பதைத் தாண்டி வலுவான கதாபாத்திரமாக இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
நான் இந்தப் படத்தில் இருக்கிறேன். சண்டையிட்டுளேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. ஜிக்ரா படத்தில் எனக்கு பிடித்தது அந்தக் கதாபாத்திரத்தின் வலிமையும் உணர்சிகளுமே.
ராஜமௌலி கூறிய அறிவுரை
ஒருமுறை ராஜமௌலி சார் என்னிடம், ‘சண்டைக் காட்சிகள் என்பது படத்தின் சுவர்களும் தூண்களுமாக இருக்கலாம். ஆனால், படத்தின் அடித்தளமான உணர்ச்சிகள் வலுவாக இல்லாவிட்டால் கட்டடம் இடிந்துவிழும்’ எனக் கூறினார். இதுதான் ஜிக்ரா படத்தினை தேர்வு செய்யும்போது எனக்கு தோன்றியது என்றார்.
ஜிக்ரா டிரைலருக்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, “ஆலியா எப்போதும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் நம்மை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்துவதில்லை. ஜிக்ரா படம் உணர்ச்சிப்பூர்வமான அடர்த்தியான கதையாக இருக்குமென தெரிகிறது” எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.