
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக உடல்நலத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக்கொண்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், நேற்று இரவு, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற கோணத்திலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டிருந்தன.
மருத்துவப் பரிசோதனையில், ரஜினியின் இதயத்திலிருந்து வரும் முக்கிய தமனியான பெருநாடி எனப்படும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாள வெடிப்பு அல்லது ரத்தக் கசிவைக்கூட ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால், இதயத்திலிருந்து உடல் உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபடலாம். இந்த ரத்த நாளத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை சரி செய்ய ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதய சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் துறை நிபுணர்கள், சிறுநீரக சிகிச்சை மருத்துவர்கள் என பல துறை மருத்துவர்கள் இணைந்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி அக்டோபர் 1ஆம் தேதி அதிகாலை ரஜினிக்கு சிகிச்சை தொடங்கியது. சதை வளர்ந்திருக்கும் அந்த நரம்புப் பகுதியில் சிகிச்சை செய்து, அங்கு ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரஜினியின் தொடைப் பகுதியில் இருந்து நரம்பு வழியாக ஸ்டென்ட் உள்செலுத்தப்பட்டு காலை 5 மணிக்குத் தொடங்கிய அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டென்ட் என்பது, பொதுவாக, ரத்த நாளங்களுக்குள் அடைப்பு ஏற்படும்போது, கை அல்லது தொடையில் நரம்பு வழியாக அவ்விடத்தை சரி செய்து, ஸ்டென்ட் பொருத்தி, ரத்தக் குழாயின் பாதையை சீராக்கப் பயன்படுகிறது. பொதுவாகவே ரத்த நாளங்கள் அல்லது நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த ஸ்டென்ட் பயன்படுத்தப்படுகிறது.
ரஜினிக்கு சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொறுத்தப்பட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இதய நாளத்தில்தான் ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை தகவல்கள் உறுதி செய்துள்ளன.
இதைத்தான் அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று லட்சோப லட்ச ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது அவரது 170வது படமாகும். அடுத்து 171வது படமாக கூலி உருவாகி வருகிறது. அண்மையில் கூட ரஜினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு கடந்தவாரம்தான் சென்னை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.