
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு நடனம் அமைத்த ஜானிக்கு சிறந்த நடனப் பயிற்சியாளருக்கான தேசிய விருது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னா், தெலங்கானா மாநிலம் நா்சிங்கி காவல் துறையிடம் ஜானி மீது அவரின் உதவியாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பைக்கு பணி நிமித்தமாக நான் ஜானியுடன் பயணித்தேன். அப்போது அவா் என்னிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டாா். அதற்குப் பிறகும் அவா் எனக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்தாா். அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரினாா்.
ஜானி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காலத்தில், அந்தப் பெண் 18 வயதுக்குள்பட்ட சிறுமியாக இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஜானி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!
இந்நிலையில், புது தில்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கக் கோரி, ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஜானி மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு அக்.6 முதல் அக்.10-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட விருதுகள் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பாலியல் குற்றச்சாட்டு காரணமாக நடனப் பயிற்சியாளா் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது நிறுத்திவைக்கப்படுகிறது. தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பும் திரும்பப் பெறப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.