சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியுள்ள திரைப்படம் வேட்டையன். டிரைலர் மூலம் வழக்கமான ரஜினி படம் போலத் தெரியவில்லையே என்ற பெயரைப் பெற்ற இந்தத் திரைப்படம் திரையில் என்ன பெயர் வாங்கியது?
டிரைலர் சொல்லியது போலவே ரஜினிகாந்த ஒரு நேர்மையான தைரியமான போலீஸ் எஸ்.பி.யாக ரவுடிகளை அலறவிடுகிறார். காவல்துறையில் இவரது என்கவுன்டர் புகழுக்காகவே அவருக்கு வேட்டையன் என்ற பெயரும் உள்ளது. ரவுடிகளைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி பல வருடங்கள் வழக்கு நடத்த பொறுமையில்லாத போலீஸ்காரர், என்கவுன்டர் செய்வதையே பிரதான கொள்கையாக வைத்துள்ளார். மறுபக்கம் நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன் ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் நீதியல்ல என்ற மனிதாபிமான கொள்கைகளுடன் இருக்கிறார். இப்படி இரு துருவங்களான இந்த இரண்டு கதாப்பாத்திரங்களும் ஒரு முக்கிய வழக்கை கையாள்கிறார்கள். இருவரின் கொள்கை நிலைப்பாடுகள் இந்த வழக்கில் என்ன ஆனது? வழக்கின் குற்றவாளி என்ன ஆனார்? ரஜினி ஏன் இந்த வழக்கை விரும்பி கையிலெடுத்தார்? என்பதே கதைக்கரு எனலாம்.
ஆனால் இந்தக் கருவுக்கு சூப்பர் ஸ்டார் சாயம் பூசி, தீம் மியூசிக்குகள், மாஸ் காட்சிகள், எதிரிகளை பறக்கவிடும் சண்டைக் காட்சிகள் மூலம் ரஜினி ரசிகர்களையும், தனது படங்களை விரும்புபவர்களையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் ஞானவேல். ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் விரும்பிடாத கோர்ட், கேஸ் காட்சிகளும், பொதுவான ரசிகர்கள் விரும்பிடாத பில்டப் காட்சிகளும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த ஆபத்தான 50\50 கேமை இயக்குநர் நன்றாகவே கையாண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவில் திரையறங்கில் பார்க்கும்போதும்கூட தூக்கம் சொக்கும் படங்கள் பரவலாகிவிட்ட நிலையில், பெரிய பட்ஜெட்டில் வந்துள்ள நல்ல படமாக வேட்டையன் இருக்கிறது.
இது வழக்கமான குற்ற விசாரணைக் கதைதான், அதுவும் மாஸ் ஹீரோ நடிக்கும் கிரைம் இன்வெஸ்டிகேசன் கதை. பொதுவாக மாஸ் ஹீரோக்களை வைத்து முதல்முறை படம் எடுக்கும் இயக்குநர்கள், ஹீரோவுக்கான மாஸை மட்டுமே மனதில் வைத்து, சொல்ல வந்த கதையை சொதப்பிவிடுவதற்கு நாம் பலமுறை சாட்சியாகிவிட்டோம். ஆனால் இந்தப் படத்தில் இரண்டுக்குமே சரியாக இடமளித்து பாஸ் ஆகியிருக்கிறார் இயக்குநர்.
திரைக்கதையென வரும்போது, "தூங்கிவிட்டேன்" எனப் பலர் பட்டென சொல்லிவிடுவதுபோல படம் இல்லை, பொதுவாக 'எப்படிப்பட்ட படம்' எனப் பார்க்க இது வெறும் இயக்குநர் ஞானவேலின் படமும் இல்லை. இந்தப் படத்தை ஜெய் பீம் உடனோ அல்லது தற்போதைய தமிழ் திரைக்கதை கில்லாடியாக கருதப்படும் மகாராஜாவுடனோ ஒப்பிடுவது முற்றிலும் தவறுதான்.
இது சூப்பர் ஸ்டார் படம், ஜெய் பீம் இயக்குநரின் படம். இரண்டு அம்சங்களுமே படத்தில் திகட்டாத வகையில் உள்ளன. தற்போது வெளியான பெரிய ஹீரோக்களின், பெரிய பட்ஜெட் கதைகளோடு ஒப்பிட்டால் கண்டிப்பாக இந்தப் படத்தை திரையில் கண்டுகளிக்கலாம் என்றே சொல்ல வேண்டும்.
நடிப்பு எனப் பார்க்கும்போது முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, மஞ்சுவாரியர் ஆகியோர் தேவையான நடிப்பை சரியாக வழங்கியுள்ளனர். பலர் எதிர்பார்த்ததுபோல அமிதாப் பச்சன் திரையில் அந்நியமாகத் தெரியவில்லை. படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் போதுமான நேரமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ளது சிறப்பு. லேட்டாக வந்தாலும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறார் ராணா டகுபதி.
ஒளிப்பதிவில் எஸ். ஆர். கதிரின் வேலைகள் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைக்கிறது. முக்கியமாக இரண்டாம் பாதியில் வரும் சப்வே சண்டை காட்சிகளும் டுவிஸ்ட்டுகள் எதிர்பார்த்தவைதான் என்றாலும் ரசிக்கவைக்கத் தவறவில்லை.
அனிருத்தின் இசை படத்தின் முக்கிய பலம் எனலாம். ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டாராக காட்டும் அவரது இசை, ஓக்கேவான காட்சிகளையும் ஓஹோவாக்கிவிடுகின்றன. மனசிலாயோ பாடல் திரையில் பிரமாதமாக இல்லாதது சிறிய ஏமாற்றம்தான்.
என்னதான் சமூக பிரச்னையைப் பேசும் படமாக இருந்தாலும் இது ஒரு கமெர்ஷியல் ஹீரோவின் படம், சூப்பர் ஸ்டாரின் படம் என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இந்த படத்தை கண்டிப்பாக திரையில் கண்டு ரசிக்கலாம்.