நடிகை சாய் பல்லவியின் கருத்திற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்த அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி வெளியாகிறது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையாக உருவான இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
படத்திற்கான புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை சாய் பல்லவியை இணையத்தில் சிலர் வசைபாடி வருவதுடன் அமரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என குரலெழுப்பி வருகின்றனர்.
என்ன நடந்தது?
சாய் பல்லவி, ‘விராத பர்வம்’ படத்திற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில், “எனக்கு வன்முறை வழியில் நம்பிக்கையில்லை. காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்பட்டதைக் காட்டியிருப்பார்கள். அது பயங்கரவாதம் என்றால் கரோனாவின்போது பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியது மட்டும் சரியா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? மனிதர்கள் அனைவரும் சமம்தான். ஜாதி, மதத்தால் பிரிப்பது சரியானதல்ல” எனக் கூறியிருந்தார்.
அவரின் இந்தக் கருத்துக்கு நேர்காணல் வெளியான நேரத்திலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், தன் பேச்சு தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாக சாய் பல்லவி தெரிவித்திருந்தார். அவர் அளித்த விளக்கத்தில், “எல்லா மனிதர்களும் ஒன்றுதான். அவர்களை சாதி, மதம், இனத்தால் பிரிப்பது சரியானது கிடையாது என்பதைத்தான் அந்த நேர்காணலில் கூறியிருந்தேன்” என்றார்.
இதையும் படிக்க: ‘என்றென்றும் புன்னகை’ மாதவன் - ஷாலினி!
இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சாய் பல்லவி அந்த பழைய நேர்காணலில் குறிப்பிட்ட ஜெய் ஸ்ரீராம் விஷயத்தை மட்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர், “ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுக்கும் நீங்கள் எதற்கு ராமாயணா படத்தில் சீதா தேவியாக நடிக்க வேண்டும்”? எனக் கடுமையான வார்த்தைகளால் சாய் பல்லவியையும் அமரன் திரைப்படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.