கோட் படத்தில் அரசியல் மேற்கோள்கள்! மனம் திறந்த வெங்கட் பிரபு!
இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார்.
கோட் திரைப்படம் 3 மணி நேரம் என தகவல் வெளியாகிய நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.
கோட் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அடுத்த ஒரு படத்துடன் அரசியலுக்குள் களமிறங்கும் விஜய்க்கு இந்தப் படம் ஒரு கொண்டாட்டமாக இருக்குமென வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
கோட் படத்தில் நடிகர் விஜய் காரின் எண் சிஎம் 2026 என இருப்பதை பிரேம்ஜி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
முதல் பாடலில் பார்டி ஒன்னு தொடங்கட்டுமா என பாடல் வரிகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேர்காணலில் வெங்கட் பிரபு பேசியதாவது:
எங்கள் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் விஜய் அரசியலுக்கு வருவதை அறிவித்தார். எங்களால் என்ன செய்ய முடியும் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். அதனால் படத்தில் அங்கங்கு அரசியல் தொடர்பான மேற்கோள்களை வைத்துள்ளோம். ஆனால் விஜய் அண்ணா இது வேண்டும் வேண்டாம் என எதுவும் சொல்லவில்லை. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.