
நிவின் பாலி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு அவருடன் பணியாற்றிய முன்னாள் படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
படவாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நிவின் பாலி மீது, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செப். 3 ஆம் தேதியில், ஊனுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து, பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஹேமா அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பெண் புகார் எழுப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஊனுக்கல் காவல் துறையிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், தன் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்ததுடன், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகை பார்வதி கிருஷ்ணா, இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், நடிகர் பகத் மானுவெல் உள்ளிட்ட திரையுலகினர், நிவின் பாலியை ஆதரிப்பதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களுடன் முன்வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகை பார்வதி கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிவின் பாலியுடன் இருக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் கூறப்பட்டிருப்பதாவது, நிவின் பாலி மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் நாங்கள் `வர்ஷங்கள்க்கு சேஷம்’ படப்பிடிப்பிற்காக கொச்சி சென்றிருந்தோம் என்று கூறியுள்ளார், பார்வதி கிருஷ்ணா.
மேலும், நடிகர் பகத் மானுவெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிவின் பாலியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டதுடன், "டிசம்பர் 14, காலை 8:00 மணி முதல் டிசம்பர் 15, அதிகாலை 3 மணி வரை ஒன்றாகதான் படப்பிடிப்பில் இருந்தோம்; படங்களே சான்றாகும்" என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட நாள்களில் நிவின் பாலி கொச்சியில் படப்பிடிப்பில்தான் இருந்தார் என்பதற்கான விடியோக்களும் படங்களும் உள்ளன என்று இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.