யாருக்கான போராட்டம்...? நந்தன் - திரை விமர்சனம்!

நடிகர் சசிகுமாரின் நந்தன் திரைவிமர்சனம்...
யாருக்கான போராட்டம்...? நந்தன் - திரை விமர்சனம்!
Published on
Updated on
2 min read

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான நந்தன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை பகுதியில் கதை ஆரம்பமாகிறது. வணங்கான்குடி என்கிற ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக அப்பகுதியிலிருக்கும் ஆதிக்க சாதியினரே தேர்தெடுக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக, அந்த ஊரின் செல்வாக்கானவரான கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) பல ஆண்டுகளாக தலைவர் என்கிற ‘மரியாதையை’ சுமந்துகொண்டு இருப்பவர்.

அப்படியான ஊரில், அடுத்த பஞ்சாயத்து தலைவர் யார் என்கிற கேள்விக்கு எந்த தடையும் இல்லாமல், கோப்புலிங்கமே முன்மொழியப்படுகிறார். ஆனால், எதிர்பார்க்காததுபோல் அந்த ஊரில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும் என ரிசர்வ் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

இதனால், கோப்புலிங்கத்தின் ஆள்கள் அதிர்ச்சியடைகின்றனர். நமக்கு முன் கைகட்டி நின்றவர்கள் நம்மை ஆள்வதா என ஆத்திரதுடன் இருக்கின்றனர். கோப்புலிங்கம் யோசித்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் நம் பேச்சைக் கேட்கும் ஒருவனையே தலைவராக்குவோம், சும்மா பெயருக்கு இருக்கட்டும் என தன் படையை சாந்தப்படுத்துகிறார். சுற்றி வளைத்து இறுதியாக தன் வீட்டில் வேலைசெய்யும் தலித்தான அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க வைக்கிறார். அம்பேத்குமார் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டாரா? இந்த சாதிய அடக்குமுறைகள் அம்பேத்குமாரை என்னென்ன செய்கின்றன என்பதே நந்தனின் கதை.

நந்தன் - சசிகுமார்
நந்தன் - சசிகுமார்

சமூக நீதி, சாதிய கொடுமைகள், தாழ்த்தப்பட்டோரை ஆதிக்க சாதியினர் நடத்தும் விதம் என ஆண்டாடு காலமாக நிகழும் அடக்குமுறையை பேச வேண்டும் என முக்கியமான பிரச்னையைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் இரா. சரவணன். நகரங்களிலும் தீண்டாமைகள் தொடரும் இக்காலத்தில் கிராமங்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை ஒரு அரசியல் கதையாகவும் அதேநேரம் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும் கடத்த முயற்சித்திருக்கிறார்.

படம் துவங்கும்போதே அழுத்தமான வசனங்களால் அந்த ஊரின் நிலை இதுதான் எனத் தெரிய வருகிறது. ‘ஆள்வதற்கு அல்ல.. வாழ்வதற்குக்கூட இங்கு அதிகாரம் தேவை’ என்கிற வசனம் நந்தனின் கதையை முழுமையடைய வைக்கிறது. அரசியல் ரீதியான கேலி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. போகிற போக்கில், இன்றைய சில அரசியல் தலைவர்களின் பேச்சுகளை, செயல்களையும் கிண்டல் செய்திருக்கிறார்.

ஆனால், நந்தன் திட்டமிட்டபடி முழுமையான திரைப்படமாக உருவாகவில்லை. திரைக்கதையும் உருவாக்கமும் படத்தின் பெரிய பலவீனம். கத்துக்குட்டி, உடன் பிறப்பே போன்ற படங்களை இயக்கியவர் ஏன் நந்தனின் உருவாக்கத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதால், ’பார்த்து பார்த்து’ செலவு செய்வதில் கவனம் போய்விட்டதோ என்னவோ...

யாருக்கான போராட்டம்...? நந்தன் - திரை விமர்சனம்!
மாமனார் vs மருமகன் கிரிக்கெட் போட்டி! வென்றதா லப்பர் பந்து? திரைவிமர்சனம்

குறிப்பாக, எல்லாவற்றையும் ஆவணப்படம்போல் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். இதனால், உணர்ச்சிகளைத் தூண்டியிருக்க வேண்டிய காட்சிகள்கூட வெறுமனெ கடந்து செல்கின்றன. சில அரசியல் நகைச்சுவை வசனங்களுக்குக் கைதட்டல் கிடைத்தாலும் வலுவற்ற காட்சிகளால் அவை பொருள் இழக்கின்றன.

நடிகர் சசிகுமாருக்கு அயோத்தி, கருடன் கொடுத்த வெற்றியை நந்தன் தடுத்திருந்தாலும் பேச வேண்டிய கதையில் பங்களிப்பு செய்ததற்காக அவரைப் பாராட்டலாம். முக்கியமாக, தென் மாவட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த கதாபாத்திரங்களிலேயே சசிகுமார் நடித்து வருகிறார் என அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தன. அதை உடைக்கும் விதமாக, நந்தனில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக நடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நந்தனில் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

பாலாஜி சக்திவேல் கைதட்டல் பெருமளவிற்கு நக்கலான உடல்மொழியில் வசனங்களைப் பேசி அக்கதாபாத்திரத்திற்கு அடையாளம் கொடுத்திருக்கிறார். சசிகுமாருக்கு மனைவியாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி நன்றாக நடித்திருக்கிறார். அழுத்தமான கதைகளை இயக்கும் இயக்குநர்களுக்கான நடிகை.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையை கழித்தால் எந்தக் காட்சிகளும் தனியாகத் தெரியாது. அதேநேரம், தேவையற்ற இடங்களுக்கும் இசையை நிரப்பி வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் சுமார். நீண்ட காலம் தயாரிப்பிலிருந்ததால் நிறைய குறைகள் உருவாகி வந்திருக்கின்றன. அதையெல்லாம் இயக்குநர் சரி செய்ய முயற்சித்திருக்கலாம்.

சமூக அக்கறையைப் பதிவு செய்ய விரும்பும் இயக்குநர்கள், வலியையும் கண்ணீரையும் மட்டும் முழுமையாக நம்பாமல் கதையிலும் திரைக்கதையிலும் தீவிரம் காட்டினால் மட்டுமே ஆதிக்க மனநிலையில் இருப்பவர்களின் மனசாட்சியைக் கேள்விகேட்கும் படைப்புகளைக் கொடுக்க முடியும். நந்தனின் கதை முக்கியமானது என்றாலும் ஒரு திரைப்படமாக ஏமாற்றத்தையே தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com