இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவான கொட்டுக்காளி பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பின், கடந்த ஆக. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது, அமேசான் ஓடிடியில் பார்க்கலாம். ஓடிடி வெளியீட்டுக்குப் பின் கொட்டுக்காளி பரவலான பார்வையையும் கவனத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
கூடுதலான ரசிகர்கள் பார்க்கும்வேளை காரணமாகவே சில எதிர்மறையான விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் இன்றைய தமிழ்த் திரைச் சூழலில் கொண்டாடப்பட வேண்டியவள்தான் கொட்டுக்காளி - ஏன்?
படம் குறித்து ஒரு மீள்பார்வை...
படத்தில் பேய் பிடித்ததாக நம்பப்படும் மீனாவை (அன்னா பென்) சரிசெய்ய மொத்த குடும்பமும் அவரைச் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறது. இவர்கள் அனைவரும் அங்கு சென்று, மீனாவுக்கான சடங்குகளைத் தொடங்குவதற்கு முன்பே படம் முடிகிறது. இந்தப் படம் உருவாக்குவது நிகழ்வுகளின் தருணங்களையே (moments). ஒரு முடிவைச் சொல்லி ரசிகர்களுக்கு நிறைவைக் கொடுக்கும் படமல்ல. நம் அன்றாடங்கள் எத்தனை நிகழ்வுகளால் மாறிக்கொண்டே இருக்கிறது? காலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன் பின் எழுவதிலிருந்து நம்முடைய திட்டங்கள் அனைத்தும் மாறிவிடுகின்றன. நேர தாமதங்களால் உருவாவது நினைத்த காரியத்தை முடிப்பதற்கான தாமதம் மட்டுமல்ல. சின்னச் சின்ன இடர்களால் நம் மனநிலைகள் கடுமையாகக் மாறக்கூடியவை. கொட்டுக்காளியின் ஆரம்பமும் முடிவும் அல்ல முக்கியமானது. இடையே நிகழும் பயணமே கதை.
(இனி விளக்கம் கருதி சில காட்சிகளை விவரிக்கப்படுவதால் படம் பார்க்காதவர்கள் தவிர்த்து விடலாம்).
பாண்டிக்கு (சூரி) மீனா (அன்னா பென்) மாமன் மகள் முறை. அவன் திருமணம் செய்ய ஆசைப்படுகிற பெண். ஆனால், அவளுக்கு அதில் எந்த விருப்பங்களும் இல்லையென்பது கதையொட்டத்தில் தெரிய வருகிறது. மதுரையைப் பின்னணியாக வைத்தே கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மறைமுகமாக, மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்கும் மீனாட்சிக்கும் இடையே நிகழும் ஒன்றாகவும் இருக்கிறது. ஆதிக்கமும், கோபமும் கொண்டவனாகவே பாண்டி அடையாளப்படுத்தப்படுகிறான். மீனாட்சியின் கதாபாத்திரம் வாயே திறக்காத சிலையைத்தான் குறிக்கிறது. பல்லக்கில் இருக்கும் சாமி சிலையை சுற்றுவதுபோல் ஆட்டோவிலிருக்கும் மீனாவைச் சுற்றுகிறார்கள். 4 ஆண்கள் தங்களின் பலத்தை வெளிப்படுத்தினாலும் உள்ளே அமர்ந்திருப்பவள் எந்த சலனமும் அடைவதில்லை. அவளின் மௌனம் இந்த ஆண்களின் கடும் குரலுக்கும் பலத்துக்கும் அப்பாற்பட்டது.
பாண்டியர்கள் மீனாட்சியை பெரும்தெய்வமாகவே வணங்குகிறவர்கள். ஆனால், எத்தனை பாண்டிகள் எத்தனை மீனாட்சிகளை ஆணவக்கொலை செய்தார்கள் என்பதையே கொட்டுக்காளி கூறுகிறது. மானம் என்பதைச் சுற்றி நாம் உருவாக்கிவைத்த கட்டுப்பாடுகளும், அதிகாரங்களும் என்னென்ன என்கிற கேள்விகளைக் கடுமையாக சுட்டிக்காட்டுகிறது.
ஐதீகத்தின்படி மீனாட்சியின் சகோதரன் அழகர்தான். இருவரும் மதுரையின் மாபெரும் அடையாளங்கள். இப்படி யோசிக்கலாம். மீனாட்சியின் பிள்ளைகளுக்கு தாய்மாமன் அழகரே. இங்கிருந்து எங்குவரை இந்த உறவின் மகத்துவம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது? ’தாய்மாமன் சீரெடுத்து வாராண்டி’ என்பது அழகிரிலிருந்து இன்றைய பாண்டிவரை தொடர்கிறது. பணமிருப்பவர்களுக்கு சீர் என்பது சடங்கு. இல்லாத பாண்டிகளுக்கு பொருளாதாரச் சுமை. இவையெல்லாம் வெற்றுப் பெருமிதங்களால் ஒருவனின் வாழ்க்கையை சீரழிப்பவைதான். மீனா வயசுக்கு வந்தபோது செய்த சடங்கு செலவை அவள் திருமண வயது எட்டியவரை பாண்டி கடன்கட்டிக் கொண்டிருக்கிறான். அடுத்தது தன் தங்கை வீட்டில் விசேஷம் நடக்கப்போகிறது. அதற்கும் அவனே கடனாளியாகப்போகிறவன். ’எவ்வளவு செய்கிறார்கள்’ என்பதைக் கணக்கில்கொண்டே உறவுகளில் ஒருவரின் இடம் என்ன என்பதும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
உதாரணமாக, படத்தில் கடையில் பூஜைப் பொருள்களை வாங்குவதிலிருந்து சடங்கு செய்வதுவரை பாண்டியே பணம் அளிக்க வேண்டியிருக்கிறது. அதை, அவன் குறையாகவும் நினைக்காமல் தன் பொருளாதாரத்தின் வழியே அதிகாரத்தைக் கடத்துகிறான். அவன் தங்கைகளும் மீனா குடும்பமும் பாண்டியிடம் பயந்து நிற்பதற்கு அவன் கோபக்காரன் என்பது மட்டுமே காரணம் அல்ல. அந்த உறவைத் துண்டிக்காத வகையில் பொருளியல் காரணங்களும் பெரிய பங்கு வகிக்கின்றன. பாண்டியின் பிடியிலிருந்து மீனாவின் குடும்பம் தப்ப நினைத்தாலும் பொருள் வழியாக அவன் அடைந்த அதிகாரத்தை அவர்களால் உடைக்க முடியவில்லை.
மீனாவுக்கும் பாண்டியின் தங்கைகளுக்கும் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே வயது வித்தியாசம் இருக்கும். ஆனால், மீனாவின் சிந்தனைக்கும் அவர்களின் பார்வைக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் உண்டு. மீனாவின் விருப்பத்தை சக பெண்களே மதிப்பதில்லை. காரணம், கல்வி. மீனாவின் சுயவிருப்புக்கும், முடிவுகளுக்கும் கல்வியறிவு பெரிய இடத்தை வழங்கியிருக்கிறது. முட்டாள் தனங்களிலிருந்தும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் அவளை விடுவித்திருக்கிறது. பெண் விடுதலை என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம் என படத்தில் மீனாவுக்கும் பாண்டியின் தங்கைகளுக்கும் இடையே கல்வியின் முக்கியத்துவம் இழையோடியபடி இருக்கிறது.
நுட்பமாக கவனித்தால் தெரியும், மீனா காதலிப்பதைக் குறிப்பிடும் பாண்டி, ‘கண்டசாதிக்கார பயகூட பழகுறா’ என்கிறான். ஆணவக்கொலை நிகழ்வது இடைநிலைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் இடையே நிகழ்வது மட்டுமல்ல. வேறுவேறு இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்களும் இங்கு ஆணவக்கொலைக்கு ஆளாகியிருக்கின்றனர். அதை சுட்டிக்காட்டவே, ’கண்டசாதி’ என்கிற வார்த்தை கவனமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாண்டி முழு மூடன் இல்லை. நல்லது கெட்டது சரி தவறு அறிந்தவன். மீனாவை படிக்க வைப்பதே அவன்தான். அப்படியிருப்பவனால்கூட சமூகத்தை மீற முடியவில்லை. சாதியைத் தாண்டிச் சிந்திக்க முடியவில்லை. பல பாண்டிகள் இப்படித்தானே?
படத்தில் இடம்பெற்ற ஆட்டோவில் மூணு சாமி துணை என பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூணு சாமிக்கும் ஐதீகத்தில் கதை உண்டு. சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பார்வதியின் தத்துவ வடிவங்களே இன்று மதுரை கருமாத்தூரில் இருக்கும் மூணு சாமி கோவிலின் மூல தெய்வங்கள். இதில், பேச்சியான (பார்வதி) தெய்வம் அந்த இடத்தில் குடிகொள்வதற்கு முன் பேய்க்காமனுடன் சண்டையைச் சந்திக்கிறது. இவற்றால் உருவான இடமே இன்று இருக்கும் கோவில். இதைப்போல், நம் நாட்டார் வாய்வழித் தொன்மக் கதைகளுக்கென சில கூறுகள் இருக்கின்றன. அக்கதைகள் எவையும் ஜதீகத்திலிருந்து பெறப்பட்டவை அல்ல. நம் முன்னோர்களின் தொடர்ச்சிகளாக உருவானவையே. பாண்டி என்பவன் அந்தத் தொடர்ச்சியில் ஒரு கன்னி என்றால் ஆட்டோவில் இவர்களுடன் இருக்கும் சிறுவன் அடுத்த காலத்தின் தொடர்ச்சி.
கிளைமேக்ஸில் ஒரே சட்டகத்தில் பாண்டி, பாண்டியின் அப்பா, மீனாவின் அப்பா, சேவல் காட்சி இடம்பெறுகிறது. அந்த சேவலுக்கும், இந்த ஆண்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆணென்பதாலேயே அதிகாரத்தைத் தொடரும் குப்பைகள். தங்களின் அதிகாரத் திமிரால் பலிபீடம் நோக்கி நகர்பவர்கள். படத்தில் மீனாவின் அப்பா மிக மென்மையானவர். பாண்டி அடித்தாலும் வாங்கக்கூடிய கோழை. ஆனால், அவர் குடும்பத்தில் அவர் எடுப்பதே முடிவு. விருப்பமில்லாத மனைவியும், மகளும் அவருக்கு எதிரான குரலைக்கூட எழுப்பவதில்லை. காரணம் ஆண் என்பதாலேயே உருவான அதிகாரம். இவர்கள் சந்திக்க வேண்டிய பூசாரியை இவர்களுக்கு முன்பாகவே சென்னையைச் சேர்ந்த குடும்பம் சந்தித்திருக்கும் (கார் பதிவு எண்). இக்காட்சியால் படம் முழுமையை நோக்கியே நகர்கிறது. இது மதுரையைச் சேர்ந்தவர்களின் கதை மட்டுமல்ல. பொருளீட்டினாலும் சாதியைக் கண்டறிய முடியாத நாகரீகமான நகரில் வாழ்ந்தாலும் மானத்திற்குக் கேடு வந்தால் தன் ஊருக்கும் சாதிக்கும் சிலர் திரும்புவதை முகத்திலடித்ததுபோல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
பாண்டி ஒருகட்டத்தில் தடுமாறுகிறான். என்ன நடத்துகொண்டிருக்கிறது? நம் எதிர்கால மனைவியை பூசாரி என்கிற பெயரில் வேறு ஒருத்தன் தொடுவதா? இல்லை, நாம் இவ்வளவு நாளாகப் போராடிக்கொண்டிருந்தது எதுவும் திருமணம் என்கிற பந்தத்துடன் முடிவடையக் கூடியதில்லையா? என சொற்கள் இழக்கிறான். அவனுடைய கற்பனையில் மீனாவை அடைவதைத் தவிர வேறு எண்ணங்களே இல்லை. கிளைமேக்ஸ்க்கு முன்பு வரை முழுவீச்சாக அவளை அடையத் துடிப்பவன் இறுதியில் அமைதி கொள்வதற்குக் காரணம், அவளை மன்னிக்கும் இடமல்ல. ஒருவேளை மீனாவை அடித்து திருமணம் செய்துகொண்டாலும் நாளை திருமணத்திற்குப் பின் அவள் மனம் மாறினாள் என்றால் என்ன செய்வது? பாண்டியைக் கேள்விகள் துளைக்கின்றன?
இப்படத்தின் கிளைமேக்ஸ் புரியவில்லை என்கிறார்கள். பாண்டி திருந்திவிட்டானா? பாண்டி மீனாவைக் கொன்றுவிட்டானா? இல்லை நாமே எதையாவது புரிந்துகொள்ள வேண்டுமா? பலரும் முடிவை நாங்கள் ஏன் யோசிக்க வேண்டும் இது ஏமாற்று வேலை என விமர்சிக்கின்றனர்.
பாண்டி திருந்தினானா என்றே பலரும் யோசிக்கின்றனர். ஆனால், ஒரு காட்சியில் வண்டியில் சென்றுகொண்டிருக்கும் மீனா அணைக்கட்டில் இன்னொரு மீனாவைச் சந்திக்கிறாள் இருவரின் கண்களும் தொட்டு கலங்குகின்றன. அதாவது, கொட்டுக்காளியில் மீனா கொல்லப்படுகிறாள். இறந்த மீனாவின் ஆன்மாவே அணைக்கட்டில் இருப்பது என வைத்துக்கொண்டால் அவள் திரும்பிப்பார்த்த அந்த ஒருநாள் பயணமே கொட்டுக்காளி. படத்தில் தொடர்ச்சியாக வரும் அபசகுணமானக் காட்சிகள் இதையே உணர்த்துகின்றன. இப்படிச் சிந்திக்கும் இடங்களையும் இயக்குநரே உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
கலை என்பது இப்படி விரிந்து செல்லக்கூடிய சாத்தியங்களுடன் நம் வாழ்க்கையிலிருந்து, பெற்றுக்கொண்ட அனுபவங்களிலிருந்து ஒன்றை அடையக்கூடிய இடமாக இருக்க வேண்டும். முடிவை அறிவித்து என்ன நினைக்கிறீர்கள்? என கேட்பது மட்டுமல்ல படைப்பு. நேரடியாக சொல்ல வந்ததைச் சொல்வது கலையாகாதா? என்றால் ஆகும். அதன் ஆழத்தைப் பொறுத்து. எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் நாவல் மிகச்சிறந்த உதாரணம். நேரடியான கதை, ஆனால் நாம் மனித மனங்களை உணரும் இடங்கள் அபாரமானவை.
கொட்டுக்காளியில் ஒரு கதைகூறல் பாணி கையாளப்பட்டுள்ளது. இயக்குநர் தன்னுடைய முடிவுக்காக அணைக்கட்டில் மீனாவை நிறுத்தி, பாண்டியின் மௌனத்துடன் நம்முடைய முடிவுக்கும் இடத்தை வழங்கியிருக்கிறார். பாண்டியைப்போல் நாமும் குழம்பி நிற்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் நீங்கள் பாண்டியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்பதையும் படத்திலிருந்த பாண்டி என்ன செய்திருப்பான் என்பதையும் இயக்குநர் சொல்லிவிட்டார். இது எப்படி ஏமாற்று வேலையாகும்? கதையாகவும் படத்தின் உருவாக்கத்திலும் இன்றைய கமர்சியல் நுகர்வைக் கேள்விகேட்கும் வகையில் ஒரு சிறுகதையின், நாவலின் முடிவுபோல் செவ்வியல்தன்மையை நோக்கி நகர்ந்த திரைப்படம் இது. முற்றிலும் சமரசமில்லாத ஓர் இயக்குநரின் படம். கொட்டுக்காளி போன்ற திரைப்படங்கள் நம்மூரிலும் படைப்பாளிகள் எப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்று. உலக அரங்கில் நம் மொழி சினிமா என பெருமையாக முன்வைக்கக்கூடிய படைப்பு.
கொட்டுக்காளி என்றால் பிடிவாதக்காரி என்றே பொருள். ஒருத்தி ஏன் கொட்டுக்காளியாக மாறுகிறாள்? அவளுக்குத் தேவையானதைக் கொடுக்காததால். படத்தில் வரும் மீனாவே எதோ ஒருகாலத்தில் அநீதியால் உயிர் நீத்த ஒரு பெண் தெய்வத்தின் குறியீடுதான். நீராசையுடன் அப்படி கொல்லப்பட்ட பெண்ணை பிற்காலத்தில் நாட்டார் தெய்வமாக மாற்றுகிறார்கள். அதே தெய்வத்திடம் வணங்கி இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கவும் கிளம்புகிறார்கள். அணைக்கட்டில் தலைவிரிக் கோலத்துடன் இருக்கும் மீனாவும் படத்தில் காட்டப்பட்ட சப்த கன்னியர்களும் இதையே உணர்த்துகின்றன. மிக முக்கியமாக, ஏதோ ஒரு காலத்தில் உயிர்மாய்த்த பெண்களைத் தெய்வமாக்கினார்கள். உறுதியாக அப்பெண்கள் சக பெண்களால் அழிந்திருக்க மாட்டார்கள். ஆண்களின் பங்கு இருந்திருக்கிறது. ஆனால், பிற்காலத்தில் அப்படி அழிந்த பெண்களுக்கு ஆண்களே பூசை நடத்தவும் செய்கின்றனர். இவ்வளவு முரண்பாடுகளுடன்தான் தெய்வங்குகளுடனான உறவை மனிதன் கொண்டிருக்கிறான். கொட்டுக்காளி இந்த முரண்பாடுகளையே கறாராக முன்வைக்கிறது.
படத்தில் இவர்கள் பயணிக்கும் ஆட்டோ இயங்க மறுத்ததற்குப் பின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அடையும் பாவனைகளை கவனியுங்கள். அந்தந்த தருணங்களின் மனித மனம் என்னென்னவாகிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். பாண்டி மொத்த குடும்பத்தையும் அடித்து வீசுகிறான். ஆனால், சண்டை நடக்கும் பாலத்திற்குக் கீழே ஆறு அதன் மெல்லிய ஓசையில் சென்றுகொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் இயற்கையுடன் ஒன்றாக அனல் கடத்தப்படுகிறது. எந்தப் பக்கமும் பச்சை தெரிந்தாலும் ஒளிப்பதிவில் வெயில் பிரதானமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி பரந்துகிடக்கும் இயற்கை அதன் போக்கில் அப்படியே இருந்தாலும் அதையெல்லாம் தெய்வத்துடன் இணைத்து வழிபடும் நாம் அதற்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற முகமுடியை அணிந்திருக்கிறோம்.
இயற்கைக்கு முன் நம் அறிதல்கள் அனைத்தும் கேள்விக் குறிகள்தான். அதன் முன் எந்த வினாக்களுக்கும் விடையில்லை. எவ்வளவு பெரிய ஞானிகளும் இதற்கு விடைகொடுப்பதில்லை. அவரவர் பார்வை, அவரவர் நெறிகள். கொஞ்சம் யோசித்தால் இயற்கையில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் தனிமை மலைபோல் நிரம்பிக் கிடக்கிறது. சிந்திக்கச் சிந்திக்க இத்தனிமையை விரட்டிடவே, மனிதன் சமூகங்களாக ஒருங்கிணைந்தான். உறவுகள் உருவாகின. அதற்கான தொன்மக் கதைகள் பல நூற்றாண்டுகளாக மண்ணில் வேர்பிடித்து நிற்க, விட்டுச்செல்லவே முடியாத பாசப் பிணைப்புகள்கொண்ட வாழ்க்கை மனிதனுக்குள் நுழைந்தது.
இன்றும் அந்த அமைப்பே நீடிக்கிறது. மனிதன் உறவுகளைத் தொன்மத்துடன் இணைக்கிறான். உயிர்நீத்த பெண்கள் குலதெய்வங்களாகின்றனர். ஆனால், அத்தெய்வங்களுக்கு எதிரான செயல்களையே நடைமுறையில் மூர்க்கமாக பின்தொடர்கின்றனர். பாண்டி அந்த அமைப்பால் உருவாக்கப்பட்டவன். பாண்டியும் மீனாவும் அத்தகைய ஒன்றில் இருப்பவர்கள். ஆனால் மீனா அதன் முடிவுகளை, விசைகளை உணர்ந்தவள். ஆரம்பக் காட்சியில் கால் கட்டப்பட்ட சேவல் கட்டை உதறித் தப்பிக்கும்போது சிலரால் பிடிபடுவதைப் பார்க்கிறாள். இவளுக்கும் தப்பிச்செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், எங்கு சென்றாலும் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறாள். இப்படத்தில் அவளே ஒரு படிமம்தான். எவ்வளவு தொல்லைகளைக் கண்டும் அவள் சலனமடைவதில்லை. புன்னகையை மட்டுமே பதிலாகத் தருகிறாள். ஒருசொல்கூட பேசாத பெண்ணிடம் எவ்வளவு பெரிய வீரனும் ஆணவம் சீண்டப்பட்டு தோற்பான் என்பதை மீனாவின் கதாபாத்திரத்தை முன்வைத்து இயக்குநர் சத்தமில்லாமல் பதிவு செய்கிறார்.
உலகின் சிறந்த சமூக திரைப்படங்களில் ஒன்று கொட்டுக்காளி. மாஸ்டர்பீஸ். ஒரு கலைஞன் சடங்குகளையும் , நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் சுமக்க வேண்டியதில்லை. ஆனால், அதன் வழியாக மனித மனங்களின் நீட்சிகள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என்கிற திசையை சமகால வாழ்க்கையைச் சுட்டிகாட்டி முன்வைப்பான் என்றால் அதுவே கலைகளாகின்றன. இன்றைய நாம் என்பது அல்ல நாம். நமக்கு பல லட்ச ஆண்டு பழக்கங்களும் எண்ணங்களும் நிறைந்திருக்கின்றன. வெறுமென நவீன வாழ்க்கையின் அசட்டுத்தனங்களையும் வேகத்தையும் இன்றைய மனநிலைகளையும் மட்டுமே பதிவு செய்யும் படைப்புகள் சில ஆண்டுகளில் இன்னொரு வேகத்தில் நீர்த்துபோகிவிடும்.
ஆனால், தொன்மங்களுடனான உணர்வுகள் அப்படியல்ல. நாம் நம் தெய்வங்களைக் கைவிட இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகலாம். அந்த தொடர்பு இருக்கும் வரை அதனுடன் இணைத்து இன்றைய வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்புகள் அவ்வளவு எளிதாக மறைவதில்லை. கொட்டுக்காளி அப்படியான சினிமா. நம்முடைய மொழியிலிருந்து உருவான பெருமைமிகு படைப்பு. சமூகம், சாதி, பொருளாதாரம், கல்வி, மூடநம்பிக்கைகள், அடக்குமுறை என அனைத்தையும் அரிதாரமில்லாமல் பதிவு செய்த மிகச்சிறந்த திரைப்படம். பயணத்தை அடிப்படையாக வைத்து காலத்தையும் மனித மன உணர்வுகளையும் பேசிய அற்புதமான சினிமா.
இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ் கொண்டாடப்பட வேண்டியவர். தன் பாணியிலிருந்து மாறாமல் இன்னும் அபாரமான திரைப்படங்களை அவரால் உருவாக்க முடியும். கலை எது பிரசாரம் எது என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறார். வாழ்த்துகள்.
தங்களுக்கென பெரிய வணிகங்கள் இருந்தும் இப்படியான கதையில் நாம் இருக்க வேண்டும் என நடிக்கவும் தயாரிக்கவும் முன்வந்த நடிகர்கள் சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் முடிவு தமிழ் சினிமாவின் திருப்பங்களில் ஒன்று. இந்த மாதிரியான ஒரு படைப்பில் இணைந்ததற்காக அவர்கள் தாராளமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!