
புணேவைச் சேர்ந்த உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்பினர், சத்ரபதி சிவாஜி குறித்து வெளியாகவிருக்கும் புதிய திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இயக்குநர் ராஜ் மோரேவின் இயக்கத்தில், வரும் ஆக.8 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம் “காலித் கா சிவாஜி”. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது வாழ்க்கை சம்பவங்களின் மூலம் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து அறிந்துக்கொள்ளும் கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் மன்னர் சிவாஜியின் வரலாற்றை தவறாகச் சித்தரிக்க முயன்றுள்ளதாகவும், இதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி புணேவைச் சேர்ந்த ஹிந்து மஹாசங் எனும் அமைப்பினர் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர் ஆன்ந்த் தேவ் கூறியதாவது:
“இப்படம் மன்னர் சத்ரபதி சிவாஜியின் வரலாற்றை திரிக்க முயன்றுள்ளது. இதில், அவரை மதசார்பற்றவராகச் சித்தரித்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் படம் தடை செய்யப்படவில்லை என்றால், அது திரையிடப்படும் திரையரங்குகளில் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
மேலும், சத்ரபதி சிவாஜி ஹிந்துக்களுக்கும் மராட்டியர்களுக்கும் சொந்தமானவர். காலித் கா சிவாஜி படத்தின் யோசனையையே நாங்கள் நிராகரிக்கின்றோம்” என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.