
அபூர்வ ராகங்கள் தொடங்கி கூலியுடன் திரைத் துறையில் 50 ஆண்டுகளை, அரை நூற்றாண்டை நிறைவு செய்கிறார். இத்தனை வயதிலும் ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா? முடியும் என்றே இதுவரையிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த்!
சிவாஜி ராவ் டூ ரஜினிகாந்த்... உருவான வரலாற்றுக் கறுப்பு வெள்ளைக் காலம் பற்றி எளிதான ஒன்றல்ல, கரடுமுரடான தடங்கள், ஏற்றங்கள், சில இறக்கங்கள்... ஆனாலும் சில விஷயங்களில் அன்றும் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். 1980-களின் இறுதியில் சினிமா எக்ஸ்பிரஸுடன் (மருதம்) நீண்ட நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார்; தொடர்ந்து ஏழு இதழ்களில் வெளிவந்தது.
வெள்ளித் திரையில் நடிக்க வந்து பொன் விழா காணும் இன்றைய தருணத்தில் இந்த நேர்காணலிலிருந்து பொருத்தமான அறிந்த, அறியப்படாத தகவல்கள் இங்கே, அத்தனையும் அவரே சொன்னவற்றிலிருந்து!
நடிக்க வந்த காலம் தொடங்கி ரஜினிகாந்த்துக்குத் தனிமைதான் பிடிக்கும். படப்பிடிப்புத் தளங்களில் ஓய்வு கிடைத்தால் தனியாகச் சென்று, தலைக்குக் கைவைத்துத் தரையிலேயே படுத்துவிடுவார். கூட்டம், அரட்டை எதுவும் கிடையாது.
படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்லும்போது அவரேதான் காரை ஓட்டிச் செல்வார். ஒரு வெள்ளை நிற பியட் கார் – டிஎம்யு 5004. பின் இருக்கையில் உதவிக்காக ஓர் இளைஞன். ரஜினிக்குத் தேவையான காபி / டீ பிளாஸ்க், சிகரெட்களுடன். பெயர் கனகராஜ். ஆனால், ரஜினி அவரை அவ்வாறு அழைப்பதில்லை.
சில மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு பலம் கிடைக்கும் என்பார்கள் அல்லவா? சில பெரியவர்களை அடிக்கடி நினைப்பதாலும்கூட அந்த பலம் கிடைக்கும். அதற்காக, கனகராஜ் என்ற பெயரை அப்போதே ராகவேந்திரா என்று மாற்றிவிட்டார் - ஆக, அன்றும் இன்றும் ரஜினிக்கு நெருக்கமான பெயர் ராகவேந்திரர்.
ரஜினிகாந்த்தின் உதவியாளர்களில் ஒருவர் கிரி. இவர்தான் ரஜினி கையெழுத்திட்ட புகைப்படங்களை ரசிகர்களுக்கு அனுப்பிவைப்பவர் (அந்தக் காலத்தில் நடிக, நடிகையர்களுக்கு ரசிகர்கள் கடிதம் எழுதுவார்கள். வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். பதிலுக்கு நடிக, நடிகையர்களும் தங்கள் கையெழுத்திட்ட புகைப்படங்களை அனுப்பிவைப்பார்கள். இப்போது எல்லாம் மலையேறி டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று வேறு லெவலுக்குச் சென்றுவிட்டது!).
1980-களில் ரஜினிக்கு நாள்தோறும் ரசிகர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். முதலிடத்தில் மதுரை, இரண்டாமிடத்தில் திருச்சி, மூன்றாவது (அந்தக் கால பிரிக்கப்படாத) ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள். ரசிகர்களின் கடிதங்களுக்குப் பதிலனுப்பி வைப்பதுதான் கிரியின் முதன்மையான வேலை.
படப்பிடிப்புக்குப் புறப்படுவதற்கு முன் ராகவேந்திரர் படத்துக்கு முன் சில நிமிஷங்களாவது நின்று ஆழ்ந்து தியானம் செய்துவிட்டுதான் புறப்படுவார். ஒப்பனை அறையிலும் தியானம்தான். அல்லாமல் சில நேரங்களில் கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு ஸ்பாஞ்சை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் தியானம் செய்யத் தொடங்கிவிடுவார்.
‘’ராகவேந்திர சுவாமிகள் பெயரில் நிறைய மடங்கள் இருக்கின்றன. 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இன்றும் அருள்பாலிக்கும் சந்நியாசி அவர். ஆந்திரத்தில் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயம் இருக்கிறது. இந்த மந்திராலயத்துக்குச் செல்லும்போது, அந்த சுவாமிகளைத் தியானம் செய்யும்போது, புதிய ரத்தம், புதிய எண்ணம் உண்டாகிறது. தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை இல்லாதவர்களிடையே சுய முயற்சி இருக்காது
“1973-ல் எஸ்ஐஎப்சிசி ஸ்கூல் ஆப் பிலிம் ஆக்டிங்கில் இரு ஆண்டுப் படிப்பில் சேர்ந்து படித்தபோது, அப்படியொன்றும் பிரைட் ஸ்டூடன்ட் என்று சொல்ல முடியாது. அத்துடன் எப்படி நடிப்பது என்று அங்கே கற்றுக்கொடுக்கவில்லை. எப்படி நடிக்கக் கூடாது என்று கற்றுக்கொடுத்ததாகச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட எமோஷனைத் தன் சொந்தக் கற்பனையைப் பயன்படுத்தி நடிக்கத் தூண்டினார்கள். ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் பாணியில் உடலையும் மனசையும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தார்கள்” என்கிறார் ரஜினிகாந்த். பிற்காலத்தில் ராகவேந்திரர் என்றொரு படம் எடுத்து, ராகவேந்திரராகவே முழுப் படத்திலும் நடித்தார்.
நான்கு பேரில் ஒருவராக சிவாஜி ராவ் இருந்தபோதிலும் அங்கே தி கிரேட் பாலசந்தரைச் சந்தித்தபோது, அந்தத் தன்னம்பிக்கையுடன்தான் அறிமுகமாகிறார். பார்த்தவுடனேயே பாலசந்தரை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவருடைய திறமைக்காக மட்டுமல்ல, நிறத்துக்காகவும்.
சின்ன வயதில் தன்னுடைய கறுப்பு நிறத்துக்காக நிறையவே மன வேதனைப்பட்டிருக்கிறார் சிவாஜி ராவ். அம்மா மாதிரி தானும் சிவப்பாக இல்லையே என வருத்தம். ஏன், அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பில் கமல்ஹாசனை முதன்முதலில் சந்தித்தபோதும் அதே வருத்தம் ஏற்பட்டிருக்கிறது.
சிவாஜி ராவின் அம்மா நல்ல சிவப்பு, உயரம். அப்பா கறுப்பு, குள்ளம். சிவாஜி ராவ் உயரத்திலே அம்மா மாதிரி, நிறத்திலே அப்பா மாதிரி. டைரக்டர் பாலசந்தர் நிறத்திலும் அப்பா மாதிரி.
விஷ் யூ ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்தியதுடன் நின்றுவிடாமல், அபூர்வ ராகங்களில் ஒரு வாய்ப்புக் கொடுத்ததுடன் ஒரு கடமை முடிந்ததாக நினைக்காமல், மூன்று முடிச்சு, அவர்கள் என்று அடுத்தடுத்து மூன்று படங்களில் வாய்ப்புக் கொடுத்து, எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்ததனாலும் அப்பா மாதிரி.
சிவாஜி ராவ் என்ற பெயரை மாற்றிப் புதுப்பெயர் சூட்டியதாலும் அப்பா மாதிரி! இந்தப் பெயர் மாற்றம் ஒரு ஹோலி பண்டிகையின் பௌர்ணமியில் நடைபெற்றது. வேறு யாராக இருந்திருந்தாலும் பெயரை மாற்ற சிவாஜி ராவ் ஒருபோதும் சம்மதித்திருக்க மாட்டார்.
ஏனென்றால் பள்ளியில் படிக்கும் காலத்தில் அவருக்குப் பிடித்த விஷயம் வரலாறு. அதிலும் அவருக்குப் பிடித்த பாடம் சத்ரபதி சிவாஜி! சிவாஜி பரம்பரை என்றும் பெருமையுடன் சொல்லிக் கொள்வதுண்டு. அந்தப் பெயரை மாற்ற, இழக்க எவ்வாறு அவர் சம்மதிப்பார்?
பாலசந்தருக்காக மட்டும்தான் பெயரை மாற்றிக்கொள்ள சம்மதித்தார்.
என்றாலும் ரஜினிகாந்த் என்ற பெயரிலும் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது.
தந்தை ரானோஜி ராவ், தாய் ராம்பாய், மகன் ரஜினிகாந்த். மூவர் பெயர்களுக்கு முதல் எழுத்து ‘ஆர்’தானே. பெற்றோருக்கு நாலாவதாகப் பிறந்தவர் சிவாஜி ராவ். முதலில் நாகேஷ், ராணுவத்தில் பணி புரிந்தவர். இரண்டாவது சத்யநாராயணா. மூன்றாவது சகோதரி அஸ்வத்தாமா, சிவாஜி ராவ் கடைசிப் பையன். கடைசி மாதம் டிசம்பரில், நேரம்கூட கடைசிதான், இரவு 11.45 மணிக்குப் பிறந்தவர்.
தொடக்கப் பள்ளியில் கோலி விளையாடுகிற சிறுவன், கோள் மூட்டியவனை கோலிக் குண்டால் தாக்கியிருக்கிறார். கிரிக்கெட் விளையாடும்போது யாராவது வம்புக்கு வந்தால் கிரிக்கெட் மட்டையால்தான் அடி. வம்புக்கு வந்தவர்களை சும்மா விடும் பழக்கமே சிவாஜி ராவுக்கு இருந்ததில்லை.
சிவாஜி ராவாக இருந்த காலத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்காக அப்பாவின் பாக்கெட்டில் கைவைத்திருக்கிறார். பளீர், பளீர் என்று பெல்ட் அடியும் வாங்கியிருக்கிறார். சிவாஜி ராவின் அப்பா, கடமை தவறாத ஒரு கான்ஸ்டபிள். அப்படியென்றால் அடி எப்படி இருந்திருக்கும்?
கடமையுடைய நிறம் காக்கி என்று புரிந்து நடக்கிற சிலரில் ஒருவர்தான் அப்பா கான்ஸ்டபிள் ரானோஜி ராவ். அந்த அளவுக்கு ஃபெர்பக்ட் ஜென்டில்மேன். தொடக்க காலத்தில் சென்னைக்கு வந்து கொஞ்ச காலம் ரஜினியுடன் தங்கியிருந்த அவர் பின்னர், ‘பேச்சுத் துணைக்குக்கூட பிள்ளை அகப்படாத சூழ்நிலையில்’ போரடித்து பெங்களூருக்கே சென்றுவிட்டார்.
என்ன செய்தாலும் ஒன்றை மட்டும் செய்ததில்லை சிவாஜி ராவ். அதாவது பொய் சொல்லுதல். பொய் சொல்லியிருந்தால்தான் அப்பாவிடம் பெல்ட் அடி வாங்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே.
கோட் ஸ்டாண்டில் ஷர்ட் தொங்கியது. ஷர்ட்டில் இருந்த பணம் எங்கேடா?
பணத்தை நான்தான் எடுத்தேன்.
ஏன் எடுத்தாய்?
சினிமா பார்க்க.
இந்த உரையாடல் அப்பாவுக்கும் சிவாஜி ராவுக்கும் இடையே ரெகுலராக நடைபெறும். தொடர்ந்து, ரெகுலராக அடியும் உதையும் விழும். உள்ளபடியே சொன்னால், திருடியதற்கு விழுந்த அடி அல்ல, உண்மைக்கு விழுந்த அடி!
“உண்மையைப் பற்றி ஒரு கதை. சின்னக் கதைதான், ஆனால், பவர்புல் ஸ்டோரி.
“பொய்யும் மெய்யும் ஒரு குளத்திலே இறங்கிக் குளித்தன. முதலில் பொய் குளித்து முழுகி வெளியே வந்தது. வந்தவுடனே கரையிலிருந்த மெய்யுடைய ஆடைகளை எடுத்து உடுத்திக்கொண்டுவிட்டது.
“ஆனால், குளித்துவிட்டு இரண்டாவதாக வெளியே வந்த மெய், பொய்யின் ஆடைகளை எடுத்து உடுத்திக் கொள்ளவே இல்லையாம். நிர்வாணமாகவே இருந்ததாம்.
“இந்த ஸ்டோரி ஒரு பழைய கதைதான். ஆனால், நேக்கட் டரூத் பற்றி மிகத் தெளிவாகச் சொல்கிறது. கட்டுக்கதை என்றாலும் மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குப் பயன்படுகிறதுதானே.
“புராணங்கள் பொய்யாகவே இருக்கட்டும். நீங்கள் அவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவற்றில் வருகிற ஸ்லோகங்கள் சத்தியத்தைச் சொல்கின்றன.
“சிவாஜி ராவ் எஸ்எஸ்எல்சிகூட முடிக்கவில்லை. காரணம்? பிரண்ட்ஷிப். ஆனால், பள்ளியில் சொல்லிக் கொடுத்த ஸ்லோகத்தை மறக்கவில்லை. கருமன்யேவா ஆதிகாரஸ்தே மாபலேசுகதானா – கடமையைச் செய், பலனை எதிர்பாராதே. கீதையில் கிருஷ்ணன் சொல்கிற ஸ்லோகம் – ரஜினியின் மனதில் இருக்கிறது.”
ரஜினிகாந்த்தின் மேலாளர் பெயர் கிருஷ்ணா ராவ். ஸ்லோகங்கள் மனசில் இருக்க, அருகிலேயே கிருஷ்ணனும். முரளி, அதாவது புல்லாங்குழல்? நடிப்புக் கல்லூரி விடுதியில் ‘மோர்க் குழம்பு’ நண்பர் விட்டல். படித்து முடித்ததும் சில காலம் அருண் ஹோட்டலில் தங்கியிருந்தார். அறையில் அவருடன் தங்கியிருந்தவர்கள் எல்லாம் சென்றவுடன் தனியாகிவிட, இருக்க இடமில்லை. விட்டலுடைய வீடுதான் கதி, ஏற்கெனவே படிக்கிற காலத்தில் அவ்வப்போது சென்றதுண்டு, புதுப்பேட்டை கார்டன் ஸ்ட்ரீட். பொல்லாதவன் படப்பிடிப்பின்போதுதான் போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேறியது. அந்த விட்டலுடைய சகோதரர்தான் முரளி.
சிவாஜி ராவ் பலவகை மனிதர்களைக் கண்டு கற்றறிந்தவர். ஏனென்றால் தொடக்க கால வேலை அப்படி. பஸ் கண்டக்டர். பெங்களூரில் 10, 38 ஆம் எண் பஸ்களிலே அவர் வேலை செய்தவர். அவர் சென்ற தடம், ஸ்ரீநகர் டூ சிட்டி ரயில்வே ஸ்டேஷன்.
அந்தத் தடத்திலே அவர் சந்திக்காத கேரக்டர்களே கிடையாது. அதுவே ரஜினியின் படங்களுக்கும் சரி, வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது.
இன்ஸ்டிடியூட்டிற்கு மாதாமாதம் கட்டணம் செலுத்தி, எப்படி நடிக்கக் கூடாது என்று சிவாஜி ராவ் தெரிந்துகொண்டார் என்றால், பஸ் கண்டக்டராக இருந்தபோது, மாதாமாதம் ரூ. 850 சம்பளம் வாங்கிக்கொண்டு, பலவிதமான கேரக்டர்களையும் சிவாஜி ராவ் தெரிந்துகொண்டார்.
“எல்லாருமே – பிரண்ட்ஸ், நைபர்ஸ், ஃபேன்ஸ், ரிப்போர்ட்டர்ஸ், எல்லாருமே அடிக்கடி ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள் ரஜினியிடம் – ஸ்டண்ட்கள் நிறைந்த கமர்ஷியல் படங்களிலேயே நடிக்கிறீர்களே?
“என்ன செய்ய முடியும்? ஒரு நடிகர் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டியதுதான்.
“கிடைக்கிற படமெல்லாம் புவனா ஒரு கேள்விக்குறியாகவோ, காயத்ரியாகவோ, முள்ளும் மலருமாகவோ, ஆறிலிருந்து அறுபது வரையாகவோ கிடைக்கிறதில்லை. கிடைச்சா நடிக்காம விடப் போறதில்லை.
“அதற்காக ஸ்டண்ட் ரஜினிக்குப் பிடிக்காது என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட வேண்டாம். ஸ்டண்ட் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும்.
“ரஜினி, சிவாஜி ராவாக இருந்த காலத்தில் அவர் விரும்பிப் பார்த்தவை ராஜ்குமார், என்.டி. ராமாராவ், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்தான். அவற்றிலும் குறிப்பாக சண்டைப் படங்கள்.
எம்ஜிஆர் படங்களைத் தவிர, மற்றவர்களுடைய படங்களை முதல் நாள், அதிலும் முதல் காட்சி, முதல் ஆளாகச் சென்று பார்த்துவிடுவது வழக்கம். எம்ஜிஆர் படங்களுக்கு பெங்களூரில் அதிகக் கூட்டமாக இருக்கும். டக்கர் அடித்தாலும் டிக்கெட் கிடைக்காது. எனவே, முதல் இரண்டு, மூன்று நாள்களுக்கு எம்ஜிஆர் படங்களைப் பார்க்க முயற்சி செய்வதில்லை”.
கமர்ஷியல் படங்கள், ஆர்ட் படங்கள் என இரண்டு வகை இருப்பதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதில்:
“நத்திங். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல படம், சுமாரான படம், மட்டமான படம்... அவ்வளவுதான். எல்லாருமே என்டர்டெயின்மென்ட்டுக்காக வருகிறார்கள். கமர்ஷியல் இல்லாத ஆர்ட் படங்கள் வெற்றி பெறாது. ரியலிசம் என்ற பெயரில் ஸ்லோவாக எதையாவது காட்டிக் கொண்டிருந்தால் போரடிக்கும். சத்யஜித் ராய் படங்களைப் பாருங்கள், அவற்றை ரசிப்பவர்கள் மிகவும் குறைவு அல்லவா?
“தவிர, ரஜினியைப் பார்த்து எந்தக் கேள்வியையும் கேட்காதீர்கள். தயவுசெய்து இயக்குநர்களிடம் கேளுங்கள். எல்லாம் இயக்குநர்கள் கைகளில்தான் இருக்கிறது. அவர் கேட்டுக்கொள்கிறார். அவர் விரும்புகிறபடி நடிகனுக்கு ஆடை அணிவிக்கிறார், ஆடச் சொல்கிறார். அவர் நினைக்கிறதைச் செய்ய வேண்டியது ஒரு நடிகனுடைய கடமை. The actor is only a puppet. தி ஆக்டர் இஸ் ஒன்லி ஏ பப்பெட். நடிகன் ஒரு பொம்மலாட்டப் பொம்மைதான்.”
“எனக்கு இந்த ரோல்தான் நடிக்க முடியும் என்று சொல்கிறவன், அவன் ஒரு நடிகன் அல்ல. சொல்லவும் கூடாது. எதற்காகவும் தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும். ஏற்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.”
எந்தவொரு பெரிய வேலையையும் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் முதலிலே தேவைப்படுவது தன்னம்பிக்கைதான். இந்த நேர்க்கோட்டில்தான் ரஜினியின் வெற்றி, ஜீவிதம் எல்லாமும் இருக்கிறது. குறுக்குக் கோடே கிடையாது. அப்படி குறுக்கே ஒரு கோட்டை மனசில் ரஜினி போட்டிருந்தால் நான் பைரவியுடைய கணவன் என்று ஒரு சின்ன வில்லன் ரோலில் பேசிக்கொண்டு ஃபீல்டில் நுழைந்து இன்று, சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிற லெவலுக்கு உயர்ந்திருப்பாரா?
“நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இல்லாதவனுடைய வாழ்க்கை என்பது வெறும் ஸீரோதான். இவை இரண்டுமே ஸீரோவுக்கு முன்னால் தொடங்குகிற எண்கள். நம்பிக்கை கடவுள் பேரிலும் இருக்கலாம். தகுந்தவர் பெயரிலும் இருக்கலாம்.
“அற்ப விசுவாசியே, உனக்குக் கடுகளவேனும் விசுவாசம் நம்பிக்கை இருந்தால், அந்த மலையைப் பார்த்து அப்பால் போ என்று சொன்னால் அது விலகிப் போய்விடும் என்று பைபிளில் ஒரு வசனம் வருவதாகச் சொல்வார்கள்.
“பாரதத்திலேயே எடுத்துக் கொள்ளுங்கள். தருமன் எல்லாவற்றையும், எல்லாரையும் சூதாட்டத்தில் தோற்றவுடன் அவர்களை அவமானப்படுத்தவும் திரௌபதை பேரிலே இருக்கும் கோபத்துக்குப் பழிவாங்கவும் அவளைப் பல பேருக்கு மத்தியிலே சபையில் நிற்க வைத்து புடைவையை உரியச் சொல்கிறான் துரியோதனன். துச்சாதனன் அதைச் செய்கிறான்.
“அப்போது திரௌபதை, துரியோதனனைத் திட்டுகிறாள், குமுறுகிறாள். கத்துகிறாள், அலறுகிறாள். பயனில்லை. அப்புறம்தான் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கண்ணீர் விட்டு அழைக்கிறாள், ஓலமிடுகிறாள். அவள் உடம்பிலே கடைசியில் துண்டுத் துணிதான் பாக்கி. அந்தக் கடைசி நேரத்தில்தான் கிருஷ்ணன் கடாட்சத்தாலே புடைவை வளரத் தொடங்குகிறது.
“திரௌபதை ஆரம்பத்திலேயே கிருஷ்ணா, கிருஷ்ணா என்று அழுது கூப்பிட்டாலும் அவள் முக்கால் நிர்வாணமாகிற வரை தன்னோட மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவளும் போராடுகிறாள். தன் கைகளால் புடைவையை உரிய விடாதபடிக்கு முடிந்த மட்டும் தடுக்கிறாள். தன் உடம்பை மறைத்துக் கொள்கிறாள். காரியம் கைமீறிப் போனவுடன், தன்னால் தடுத்து நிறுத்த முடியாது என்பது புரிந்தவுடனே, தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, இரு கைகளையும் விரித்து உயர்த்தி கிருஷ்ணா என்று அழைக்கிறாள். புடைவை வளரத் தொடங்குகிறது. இழுத்துப் பிடிக்கிற வரை கடவுள் பேரிலே அரைகுறை நம்பிக்கை – கிருஷ்ணன் வரவில்லை – கையை விரித்தவுடன் முழு நம்பிக்கை, அப்படியே தன்னை ஒப்படைத்துவிடுகிறாள், அவ்வளவு நேரம் வராத கிருஷ்ணனும் வந்துவிட்டான்”.
இந்த நம்பிக்கைக் கதையை அம்மா சொல்ல, தான் படித்த ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் கதைக்கு விளக்கம் சொல்லக் கேட்டவர் சிவாஜி ராவ். அப்படித்தான் நடிப்புக் கல்லூரியில் படிக்கும்போது பாலசந்தருடன் நம்பிக்கையுடன் கைகுலுக்கினார் சிவாஜி ராவ். கலாகேந்திராவில் சந்தித்தபோதும் அதே நம்பிக்கை.
அந்த நம்பிக்கை சற்றுக் குறைந்த நேரத்தில் பெங்களூர் புறப்பட்டுச் சென்றால், அங்கே கண்டக்டர் வேலையிலிருந்து சிவாஜி ராவ் டிஸ்மிஸ்.
ஆனால், நம்பிக்கை வீண்போகவில்லை. பாலசந்தர் மறுபடியும் அழைத்தார். நடித்துக் காட்டச் சொன்னபோது, கன்னடத்தில் கிரீஷ் கர்னாட் எழுதிய துக்ளக் நாடகத்திலிருந்து ஒரு பகுதியை, தலைநகரைத் துக்ளக் மாற்றச் சொல்கிற வசனத்தைச் சொல்லி நடித்தார். சிவாஜி ராவின் தலையெழுத்து மாறியது.
தனக்கு வழிகாட்டியாக இருப்பது கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். வாழ்வின் தாரக மந்திரங்கள் இவையே என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தார் சிவாஜி ராவ்.
ஹிந்தியில் வெளியான கோல்மால் படத்தைத் தமிழில் தில்லுமுல்லு என்று எடுத்தார் பாலசந்தர். ஒரு ரோலில் மீசையில்லாமல் நடிக்க வேண்டும் என்று பாலசந்தர் விரும்பியபோது, கொஞ்சமும் தயங்கவில்லை. இத்தனைக்கும் மீசை மீது மிகுந்த ஆசை கொண்டவர் ரஜினிகாந்த். ஆனால், கேட்டது பாலசந்தர் அல்லவா?
இதே ரஜினிகாந்த், ப்ரியா படத்தில் ஜூலியஸ் சீசர் வேடத்தில் வரும்போது, மீசையுடன்தான் இருப்பார் (அந்தக் காலத்தில் மிகவும் கேலி செய்யப்பட்ட விஷயம்). மீசையா, சீசரா என்றால் மீசைதான் என்று நின்றுவிட்டார். எனவே, மீசையுள்ள சீசர்!
இந்த நேர்காணல் முழுவதும் அல்லது பல இடங்களில் தன்னைப் பற்றியே ஒரு மூன்றாவது நபரைப் போலத்தான் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். இந்த இடத்தில் இதற்கொரு காரணமும் கூறியிருக்கிறார். ஜூலியஸ் சீசர் எங்கேயும் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தியதில்லை. சீசர் இவ்வாறு நினைக்கிறான், சீசரின் கட்டளை இது என்றே பேசிவந்திருக்கிறான் என்றிருக்கிறார்.
1980-லேயே ரஜினிகாந்த் கூறுகிறார்:
“ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையில் அள்ளி வீசப்படுகிற டிஸ்ரெஸ்பெக்டை, அவமானத்தைச் சகித்துக்கொண்டு ஒவ்வொரு ஸ்டெப்பையும் முன்வைக்கிறார் என்றால், சிவாஜி ராவ் தன் சொந்த வாழ்க்கையில் இடையிலே வந்த பல கஷ்டங்களை விளையாட்டுத் தனமாகக் கடந்தவன்.
“பஸ் கண்டக்டராவதற்கு முன்னாலே, ஸ்கூல் லைஃபுக்குப் பின்னாலே, அவன் என்ன வேலை பார்க்கவில்லை? பிரைவேட் கம்பெனியிலே வருகிற கஸ்டமர்ஸுக்கு காபி, டீ வாங்கிக் கொடுத்துக்கொண்டு இருந்தான், அப்போது அவனுடைய வேலையின் பெயர் பியூன்.
“பிறகு மரத்துண்டுகளை இழைத்துச் செதுக்கினான், மேஜை நாற்காலிகளுக்கு வழுவழுவென பாலிஷ் போட்டான். அப்போ அவன் கார்பென்டிங் டிரெய்னர். அந்தக் காய்ப்புகள் இன்னும் கைகளில் இருக்கின்றன.
அப்புறம் வொர்க் ஷாப். டூல்ஸ்களை கெரசினில் ஊறப் போடுவதில் தொடங்கி, கிரீஸ் போடுவது வரை.
“சுருக்கமாகச் சொன்னால், திசை தெரியாத காட்டிலே இலக்கு இல்லாத பயணத்தை மேற்கொண்டிருந்தான். பட், அவனோட் ஸ்கூல் லைஃபிலே அவனுக்கு ஒரு மோட்டோ... லட்சியம் இருந்தது. டாக்டராக வேண்டும் என்ற லட்சியம். பூவர்... சிவாஜி ராவ்! நல்லாப் படித்திருந்தால் டாக்டராகியிருப்பான். படிக்காததனாலே ஆக்டராகிவிட்டான்!
“சிவாஜி ராவ் வைக்கிற குறி தவறாது. தவறுகிற குறி வைக்க மாட்டான். இது இல்லைனா அது என்று போகிற குணம், அட்ஜஸ்ட்மென்ட்... எப்போதுமே கிடையாது.
“ஸ்கூல் லைபில் சிவாஜி ராவுக்குக் கிடைத்த முதல் போதனைதான் இந்த குணத்துக்குக் காரணம். ஸ்கூலில் அவன் சேர்ந்ததும் அவன் காதிலே விழுந்தது அகம் பிரம்ஹாஸ்மி என்கிற ஸ்லோகம்தான் – நாம் பிரம்மனின் அணுக்கள்.
“அந்த வகையில் பார்த்தால் வீ ஆர் கிரியேட்டர்ஸ். நாம் எல்லாருமே படைப்பாளிகள்தான். இந்த மந்திரத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை, முயற்சி உங்களுக்கு இருக்குமானால் நீங்களும் படைப்பாளிகளே! உங்களால் முடியாதது ஒன்றுமில்லை.
“ஸோ, நத்திங் இஸ் இம்பாஸிபிள்!
பாண்டியனாக நுழைந்து கூலியாக - சூப்பர் ஸ்டாராக ஒளிர்விடும் ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்துகளில் இப்போதும் எவ்வித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், திரையுலகில் இந்த ஐம்பதாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள். அல்லாமல் ஒருவர் வாழ்நாள் முழுவதும் சூப்பர் ஸ்டாராகவே இருக்க முடியுமா? அல்லது இருக்கத்தான் வேண்டுமா?
எத்தனை சூப்பர் டூப்பர் ஹிட்கள் கொடுத்தாலும் புவனா ஒரு கேள்விக்குறியின் சம்பத்துக்கு இணையாக முடியுமா? அவரே நினைத்தாலும் நிச்சயமாக முடியாது.
அவரேகூட கூலி விழாவில் சிரித்துக்கொண்டே சொன்னார், தான் 1950 மாடல் என்று. அதுதானே உண்மையும்கூட. இன்னமும் ஏன், திரைப்படங்களில் வலிந்து வலிந்து சண்டையும் நடனங்களும்? சூப்பர் ஸ்டாரைத் தாண்டி அடுத்த ஒரு கட்டம் காத்திருக்கவில்லையா? அந்தப் பட்டத்தைத் தக்கவைத்து ஆகப் போவதைவிடவும் செய்ய வேண்டியவை எவ்வளவோ. தேர்ந்தெடுத்த, தனக்குகந்த, வயதுக்கேற்ற படங்களில் நடிக்கலாம்.
மேலும், பல்துறைக் கலைஞர்களாவதற்கான, இயக்குநர்களாவதற்கான திறமையுடனும் துடிப்புடனும் இன்றும் – 50 ஆண்டுகளுக்கு முன் அபூர்வ ராகங்களில் சிவாஜி ராவ் தோன்றுவதற்கு முன் இருந்ததைப் போலவே - திரைத்துறையில் – வடபழனியில், கோடம்பாக்கத்தில், சாலிகிராமத்தில், வளசரவாக்கத்தில், தசரதபுரத்தில் ஏராளமான இளைஞர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
யாரோ வாய்ப்புக் கொடுத்த நிலையில் படமெடுத்து வெற்றி பெற்ற இயக்குநர்களை எல்லாம் தவறாமல் அழைத்துப் பாராட்டுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மகிழ்ச்சி.
இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வெறும் எந்திரனாகவே இருக்கப் போகிறீர்கள், ரஜினி சார்? பத்து கோடி ரூபாயில் மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். நீங்களும் புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, புதிய இயக்குநர்களை, நடிகர்களை, கலைஞர்களை, காற்றில் அலைந்துகொண்டிருக்கும் அபூர்வ ராகங்களை ஒலிக்கச் செய்யுங்கள்.
ஐம்பதாம் ஆண்டு நிறைவில் ஆயிரம் பூக்கம் மலரட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.