
மனுஷி திரைப்படத்தைப் பார்த்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சில காட்சிகளைக் குறிப்பிட்டு, அதனை நீக்கிவிட்டு தணிக்கை வாரியத்துக்கு அனுப்ப படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள 'மனுஷி' திரைப்படத்தை, தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தில் 37 ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிமாறன் தரப்பில், விதிகளுக்கு முரணாக தணிக்கை வாரியம் இந்த ஆட்சேபங்களை தெரிவித்துள்ளது. 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க கூறியுள்ளதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் என தணிக்கை வாரியம் சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா? என ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தை பார்த்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சில காட்சிகளை குறிப்பிட்டு, அதனை நீக்கி 2 நாள்களுக்கு தணிக்கை வாரியத்துக்கு படத்தை அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், இரண்டு வாரங்களில் தணிக்கை வாரியம் நடவடிக்கை எடுத்து சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.