விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள் பற்றி...
Published on

தென்னிந்திய திரைப்படங்களுக்காக ரூ. 4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கிய பிறகு இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாதரர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா வழங்குவதாகும்.

இந்தியாவைப் பொருத்தவரை அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஜியோ ஹாட்ஸ்டாரின் சந்தா தொகை குறைவாகவே உள்ளது.

வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் பயன்படுத்துவோர் அதிகமாக இருக்கும் நிலையில், தென்னிந்திய திரைப்படங்களில் அதிக முதலீடுகளை செய்ய ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் முன்வந்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், செளத் அன்பவுண்ட் என்ற நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் நடத்தியது.

இந்த நிகழ்வில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன், நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் தொகுப்பாளர்களான மோகன் லால், நாகர்ஜுனா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரூ. 4,000 கோடி முதலீடு செய்யப் போவதாக ஹாட்ஸ்டார் நிறுவனம், தமிழக அரசுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில், வருகின்ற 2026 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் 4 மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தவிர்த்து 20 இணையத் தொடர்களை வெளியிட இருப்பதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காட்டான், பிரியாமணி நடிப்பில் உருவாகும் குட் வைஃப் சீசன் 2, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்த ஹார்ட் பீட் தொடரின் மூன்றாவது சீசன் 3 ஆகியவற்றின் முன்னோட்ட விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், விக்ராந்த நடிப்பில் உருவாகியுள்ள எல்பிடபள்யூ (லவ் பியாண்ட் விக்கெட்) இணையத் தொடரின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் லக்கி தி சூப்பர் ஸ்டார் வெப் சீரிஸ், எரும சாணி விஜய் குமார் நடிக்கும் ரிசார்ட் வெப் சீரிஸ், கவுரி கிஷன் நடிக்கும் லவ் ஆல்வேஸ் வெப் சீரிஸ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள கெணத்தைக் காணோம் ஆகியவற்றின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் அடுத்தாண்டு கேரள கிரைம் ஃபைல்ஸ் - 3, 1,000 பேபிஸ் -2 ஆகியவை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

From Vijay Sethupathi's Kaattan to Heartbeat - 3...! Jio Hotstar's 2026 releases!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com