

நடிகர் ரஜினிகாந்த் இன்று 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு அண்மையில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விஷயம் அதுவல்ல, அவருக்குக் கிடைக்காத அங்கீகரமா? நிகழ்வில் இளம் பாலிவுட் நட்சத்திரமான நடிகர் ரன்வீர் சிங் பாட்ஷா திரைப்படத்தில் வருவதுபோல ரஜினியின் வலது கரத்திற்கு குனித்து முத்தம் கொடுத்தார். ஒரு முத்தம் தானே? என அதைக் கடக்க முடியவில்லை. பாலிவுட் வரை ரஜினி யாரெனத் தெரியும். இந்த வயதிலும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பது லேசுபட்ட காரியமா?
திரைத்துறையிலேயே 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த நடிகர் ரஜினிகாந்த் பார்க்காத ஏற்றங்களும் இல்லை இறக்கங்களும் இல்லை. ஆனால், அவரே சொல்வதுபோல் இந்தக் குதிரை ஓடிக்கொண்டே இருக்கிறது. ரன்வீர் சிங்குக்கு வருவதற்கு முன் இன்றைய நிலவரப்படி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரான ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திலேயே, ‘ஆல் தி ரஜினி ஃபேன்’ என தீபிகாவுடன் குத்தாட்டாமே போட்டுவிட்டார்.
நாடு முழுவதும் ரஜினிக்கு பல பிரபலங்கள்கூட பெரிய ரசிகர்களாக இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் தமிழைத்தாண்டி அவர் மற்ற மொழிகளில் அதிகம் நடிக்கவில்லை. ஆனால், கன்னியாகுமரியிலிருந்து இமயம் வரை இந்த சூப்பர் ஸ்டார் நீண்ட செல்வாக்குடனும் புகழுடனுமே இருக்கிறார்.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சினிமாவின் மொழி, பேசுபொருள், ரசனை எல்லாமும் மாறும். அதனால்தான், எப்போதும் சினிமாத்துறையில் 10 ஆண்டுகளைக்கூட தாக்குப்பிடிப்பது சிரமம் என்கின்றனர். அதன்பின், நடிக்க கூடியவர்களெல்லாம் சமூகத்தில் பெரிய தாக்கத்தையோ அல்லது நடிப்பிலோ அழுத்தமான தடத்தைப் பதிப்பவர்களாவே இருப்பார்கள். எத்தனை நாள் மார்க்கெடிங் பயன்படும்?
ஆனால், ரஜினி இன்றும் நட்சத்திரமாக இருக்கிறார் என்பதைவிட இன்னும் ரூ. 1000 கோடிக்கான சாத்தியமான வணிகத்தை வைத்திருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம். சிறிய தவறு நடந்தாலே தூக்கிவீசப்படும் சினிமாவில் பாபா திரைப்படத்தால் கடும் விமர்சனங்களையும் வணிக தோல்வியையும் சந்தித்த ரஜினி, 3 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு தான் நம்பிய ஃபார்முலாவையே கையிலெடுத்தார்.
சந்திரமுகி திரைப்படத்தில் அதைப் பொருத்தினார். மாபெரும் வெற்றியால் புதிய ரசனையான ரஜினியை அறிமுகப்படுத்தினார். பாபா போல் முழுப்படத்தையும் தாங்கவில்லை. ஒட்டுமொத்த திரைபடத்திலும் ’வந்து போகும்’ கதாபாத்திரத்தில் நடித்தது மாதிரி அவருக்கே உரித்தான சில விஷயங்களைக் கொண்டு வந்து அசத்தியிருப்பார்.
ரஜினியின் பல திரைப்படங்கள் இப்படியான வரிசையிலேயே இருக்கின்றன. ஒரு தோல்விப்படம் அமைந்தால் அடுத்தது வெற்றிக்கான திட்டமிடலில் முழு கவனத்தையும் வைத்திருப்பார். தன் ஸ்டைல் எதற்கு எப்படி பயன்பட வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதியும் முக்கியமானது.
படையப்பாவில் தன் துண்டால் ஊஞ்சலை இறக்கி, சல்யூட் அடிக்கும் காட்சியை சும்மா செய்தால் அதற்கு என்ன மதிப்பு? தனக்கு நிகரான ஒரு கதாபாத்திரம். அதுவும் ஆணவம் மிக்க நீலாம்பரிக்கு முன்பே பல ஸ்டைல்களை இறக்கிவி தன் மதிப்பை பயங்கரமாக மாற்றியிருப்பார். ரசிகர்களின் மனதை ரஜினியைவிட கொள்ளையடித்த ஸ்டைல் நடிகர் யாராவது உண்டா என்ன?
இன்னொரு உதாரணம். சிகரெட். படையப்பா, பாபாவில் சுருட்டை இழுத்துக்கொண்டிருந்த ரஜினி சந்திரமுகியிலிருந்து திரையில் புகைப்பிடிப்பதை நிறுத்தினார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கிய காலா, கபாலியிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால், அவரே பேட்ட திரைப்படத்தில், ‘உடம்புக்குக் கெடுதல். அனுபவத்துல சொல்றேன்’ என சிகரெட்டைப் புகைத்தார். ஜெயிலர், கூலியில் சாதாரணமாகிவிட்டார். அதில் ஒரு வணிகம் இருப்பதால் ரஜினி கறாரான மறுப்பை வெளிப்படுத்துவதில்லை.
கமர்சியல் திரைப்படங்களைக் கொடுத்து ரசிகர்களின் ’பல்ஸ்’யைப் பிடித்தவர்கள் ஏகப்பட்ட பேர் இருந்தாலும் அந்த ’பல்ஸ்’யை அழுத்தமாகப் பிடித்த ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிமட்டும்தான்!
படையப்பாவில் ஆன்மீகமும் சுருட்டும் பெரிதாக உதவியதை நம்பியவர் தன் கதையான பாபாவில் அதையே கொண்டுவந்து அரசியல் முடிவுக்கான அறிவிப்பை மறைமுகமாக முன்வைத்தார். ஆனால், பாபா சுருட்டால் சூடு கிடைத்தது. உடனே, சந்திரமுகி மாதிரியான அமானுஷ்ய கதையில் தனக்கென நகைச்சுவையும் ஆக்சனுமாக திரைக்கதையை நகர்த்த வைத்து அசத்தினார்.
சிவாஜியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தவர் சில அடிகள் பின்னே வைத்து குசேலன் கதைக்குள் வருகிறார். அப்படத்தில் நடிகர் பசுபதி நாயகனாக இருந்தாலும் இடைவேளைக்குப் பின்பு ரஜினிக்கு முக்கியமான காட்சிகள் இருந்தன. ஆனால், அப்படம் சரியாகப் போகவில்லை என்றாலும் ரஜினிக்கு எந்த இழப்புகளும் ஏற்படவில்லை. இப்போது, ரசிகர்கள் குசேலனைவிட நல்ல படத்திற்காக காத்திருப்பார்கள் என்பது ரஜினிக்குத் தெரியும்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படத்தில் நடித்தார். இந்தியளவில் ரஜினிக்கான மார்க்கெட் இன்னும் பெரிதானது. அப்படம் கொடுத்த வெற்றியை மீறி வேறு என்ன பிரம்மாண்டம் கொடுக்க முடியும்? ஆனால், ரஜினி தீர்க்கமாக கோச்சடையான் கதையைத் தேர்ந்தெடுத்து எந்திரன் கொடுத்த வெளிச்சத்தைக் கொஞ்சம் குறைக்கிறார். அவர் நினைத்ததுபோலவே வித்தியாசமான முயற்சியால் பெரிய ஏமாற்றம் கிடைக்கவில்லை.
2.0 ரஜினி திரைவாழ்வில் மிக அதிகம் வசூலித்த திரைப்படம். அப்படியான கதையில் நடித்துவிட்டு அண்ணாத்தே போன்ற கிராம வாழ்க்கைக் கதைக்கும் ரஜினியால் வளைந்து நகர முடிகிறது. அவரின் பாணி அதுதான். லால் சலாம் ஒரு மற்றொரு உதாரணம். தன் மகள் படமென்றாலும் அதனால் தன் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பையும் அவரால் உருவாக்க முடிகிறது.
இறுதியாக வெளியான கூலியில் அதீத சண்டைக் காட்சிகள், மாஸ் ஆன ஹீரோவாக நடித்தவர் தற்போது ஜெயிலர் - 2 திரைப்படத்தில் அதே பாணியிலேயே நடித்து வருகிறார். தொடர்ந்து, சுந்தர். சி இயக்கத்தில் ஜனரஞ்சகமான படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், கதை பிரச்னையால் அப்படம் கைவிடப்பட்டது. ஆனால், ஜெயிலர் - 2க்குப் பின் நிச்சயமாக குடும்பப் பின்னணியை மையமாக வைத்து தன் மாஸை கொஞ்சம் குறைத்துதான் ரஜினி நடிப்பார். அவரின் தனி வழியை அப்படித்தான் அமைத்து வைத்திருக்கிறார்.
இன்றைய இளம் இயக்குநர்களான கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் என அவரவர்களின் மார்க்கெட் நன்றாக இருந்தபோதே அவர்களுடன் இணைந்து தன்னையும் பலப்படுத்திக்கொண்டார். இதற்கிடையே, ராஜ்குமார் பெரியசாமி, சிபி சக்ரவர்த்தி ஆகிய இரண்டாம் படம் இயக்குநர்களிடமும் கதை கேட்டு கிட்டத்தட்ட படம் உறுதியாகி பின் கைவிடப்பட்டது.
இந்திய திரையுலம் பல சூப்பர் ஸ்டார்களைக் கண்டிருக்கலாம். ஆனால், காலத்திற்கு ஏற்ப கதைகளுக்கும், உருவாக்கத்திற்கும் தன்னை முழுமையாக செலுத்துவதால்தான் ரஜினியால் இன்றும் அந்த சிம்மாசனத்திலேயே அமர்ந்திருக்க முடிகிறது. ஒருவேளை, இன்றுவரை சூப்பர் ஸ்டாராகத் தன் துறையில் இருக்க, அவர் சில தவறான முடிவுகளை எடுக்காமல் இருந்ததும் பெரிய காரணமாக இருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.