பில்லா முதல் கூலி வரை.... ஓபனிங் பாடல்களால் ரஜினிகாந்த் டிரெண்டானது எப்படி?

நடிகர் ரஜினிகாந்த் படத்தில் இடம்பெற்ற ஓபனிங் பாடல்கள் குறித்து...
அறிமுகப் பாடல்களில் ரஜினிகாந்த்.
அறிமுகப் பாடல்களில் ரஜினிகாந்த்.
Updated on
3 min read

முதன்முதலில் ஹீரோ ஓப்பனிங் சாங் டிரண்ட் செட்டை உருவாக்கியவர் யார் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். இவரின் அறிமுக பாடல்கள் எப்போதுமே தனித்துவம் பெற்றதாகவே இருக்கும்,

எம்ஜிஆர் காலத்திலேயே ஹீரோ அறிமுக பாடல் டிரெண்டானது. மற்ற யாரும் இதைக் கடைப்பிடிக்கவில்லை, ஆனால் அதன்பிறகு முற்றிலும் பொருந்தியது ரஜினிக்கு என்றே சொல்லலாம்.

அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள் அனைவரும் இந்த பாணியை தொடர்ந்தார்கள். திரைப்படம் தொடங்கிய சில காட்சிகளுக்கு பிறகு பாடலில் நடிகர்கள் தோன்றுவார்கள். ஆனால் தொடக்கக் காட்சியிலேயே பாடலுடன் மாஸாக தோன்றுவது சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம்.

அதில், அதிகமும் தத்துவப்பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி, உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா, நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், வந்தேன்டா பால்காரன் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிலும் 90-களில் ரஜினிகாந்த் படம் என்றால் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடும் பாடல்தான் ஹீரோ இன்ட்ரோடக்‌ஷன் பாடலாக இருக்கும். இருவரின் இணை நீண்ட காலத்துக்கு பயணித்தது. இது ஒரு சென்டிமெண்ட் ஆகவும் இருந்தது.

பில்லா படத்தில் நாட்டுக்குள்ள எனக்கொரு ஊர் உண்டு பாடல்.
பில்லா படத்தில் நாட்டுக்குள்ள எனக்கொரு ஊர் உண்டு பாடல்.

ரஜினிகாந்தின் ஓபனிங் பாடல்கள் என்பது, வெறும் பாடல்களாக மட்டும் இல்லாமல், ரசிகர்களின் கொண்டாட்டங்களாகவும், உணர்வுகளாகவும் இருந்து வருகின்றன. இந்தப் பாடல்கள் ரஜினியை திரையில் வரவேற்கவும், உச்ச நட்சத்திரமாக கொண்டாடவும் வைத்துள்ளன.

இந்த ஓபனிங் பாடல்கள்தான் ரஜினியின் கதாபாத்திரம், ஸ்டைல், வாழ்க்கைத் தத்துவம், ரசிகர்களின் அன்பு ஒட்டுமொத்தமாக ஒரே பாடலில் கொண்டுவந்து சேர்க்கும். அந்தப் பாடலில் அவர் தோன்றும் அந்த நொடியே, ரஜினி ரசிகர்களுக்கு திருவிழாவாக இருந்து வருகிறது.

அருணாச்சலம் படத்தில் அதான்டா, இதான்டா பாடல்.
அருணாச்சலம் படத்தில் அதான்டா, இதான்டா பாடல்.

கடந்த 1979 -ல் வெளியான பில்லா படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ரஜினி இறப்பதுபோன்ற காட்சிக்குப் பிறகு, மற்றொரு ரஜினி திரையில் தோன்றுவார். அப்போது, “நாட்டுக்குள்ள எனக்கொரு ஊர் உண்டு, ஊருக்குள்ள எனக்கொரு பேர் உண்டு” என ஆரம்பிக்கும். இதுதான் ரஜினிகாந்திற்கு முதல் ஓபனிங் பாடல் என்றே சொல்லலாம்.

இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடியிருப்பார். அதனைத் தொடர்ந்து, முரட்டுக்காளை படத்தில் பொதுவாக என் மனசு தங்கம் பாடல், பட்டித்தொடி எங்கும் பரவி ஹிட் அடித்தது.

நான் பொல்லாதவன், வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான், மரத்தை வைச்சவன் தண்ணீ ஊத்துவான் போன்ற தத்துவப் பாடல்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம், இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்களில் இடம்பெற்று தனித்துவம் பெற ஆரம்பித்தது.

முரட்டுக்காளை படத்தில் பொதுவாக என் மனசு தங்கம்.
முரட்டுக்காளை படத்தில் பொதுவாக என் மனசு தங்கம்.

90-களில் ரஜினி படத்துக்கு ஓபனிங் பாடல் என்றால் அது எஸ்.பி. பாலசுப்பிரமணியன்தான், உழைப்பாளி படத்தில் உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா (இன்றுவரை மே 1 ஆம் தேதிக்கான பாடல் இதுதான்), அண்ணாமலை படத்தில் வந்தேன்டா பால்காரன், முத்து படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி, பாட்ஷா படத்தில் நான் ஆட்டோக்காரன், அருணாச்சலம் படத்தில் அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா, படையப்பா படத்தில் என்பேரு படையப்பா, சந்திரமுகி தேவுடா தேவுடா என இவர்களின் இருவர் இணையில் தொடர்ந்து வெற்றிப்பாடல்களாக அமைந்தது.

குறிப்பாக படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஹு ஆர் யூ மேன்? என்று கூறும்போது, என் பேரு படையப்பா என பாடல் ஒலிக்கும் அரங்மே அதிர்ந்தது. பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ஆட்டோக்காரன் பாடல், இன்றளவும் ஆயுதப் பூஜை நாள்களில் ஒலிக்கிறது. இப்பாடல் ரஜினிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையேயான உணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

தர்பார் படத்தில் சும்மா கிழி பாடல்.
தர்பார் படத்தில் சும்மா கிழி பாடல்.

ரஜினிகாந்த்துக்கு தொடக்கப் பாடல் என்றால், அது எஸ்.பி.பி.தான். இது சந்திரமுகி படம் வரை நீடித்தது. அதன் பின்பு எடுக்கப்பட்ட கபாலி, காலா படங்களில் இந்த இணை இணையவில்லை, பின்னர் பேட்ட படத்தில் எஸ்பிபியுடன் அனிருத் மரண மாஸ் பாடலை பாடியிருப்பார். இந்தப் பாடலும் ஹிட்டானது, தொடர்ந்து தர்பார் படத்தில் எஸ்.பி.பி. சும்மா கிழி பாடல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

அண்மையில் வெளியான கூலி படத்தில், டி.ராஜேந்திரன் பாணியில் இடம்பெற்ற சிக்கிட்டு சிக்கிட்டு பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ரஜினிகாந்த்தின் படத்துக்கு பெரிதாக வலுசேர்த்தது பாடல்கள் என்றே சொல்லாம். அதற்கு இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என இசையமைப்பாளர்கள் அனைவருக்கு பங்கும் இருக்கிறது.

ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ஓபனிங் பாடல்கள் மட்டுமல்ல, பாடல்கள் அனைத்தும் கொண்டாடப்பட்டுதான் வருகிறது. இந்தப் பாடல்கள் இன்றளவும் தனி இடத்தைப் பிடித்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ரஜினியின் மாஸ் என்ட்ரி என்று சொன்னால் மிகையாது....!

Summary

Opening songs featured in actor Rajinikanth's films.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com