என்னை வாழவைக்கும் தமிழ்த் தெய்வங்களான... ரஜினிகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக பயணம் பற்றி...
ரஜினி 75
ரஜினி 75
Updated on
2 min read

ஒவ்வொரு திரையுலகிலும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் இருந்தாலும், இணையத்தில் சூப்பர்ஸ்டார் என்று தேடும்போது - வருவது என்னவோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர்தான்.

5 தலைமுறைகளாக தமிழ்த் திரையுலகைத் தன் கைக்குள் அடைத்துவைத்திருக்கும் ரஜினிகாந்த், தனது 75-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

தனது தனித்துவமான திரை அர்ப்பணிப்பால் அனைத்து வயதுத் தரப்பினரையும் திரை முன்னால் கட்டிப்போடும் வல்லமை படைத்தமையால்தான், திரையுலகில் என்றென்றும் நீங்கா இடத்தைப் பெற்று விளங்குகிறார் ரஜினிகாந்த்.

சினிமா வாய்ப்பு என்றாலே வெள்ளைத் தோலுடையவர்களுக்குத்தான் என்றிருந்ததை முற்றிலும் மாற்றியமைத்தவர் இவர்தான். சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல், தனி ஒருவராக சிகரத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

கறுப்பு & வெள்ளை, வண்ணப்படம், 3டி, அனிமேஷன் என 4 பரிணாமங்களிலும் நடித்துள்ள ரஜினிகாந்த், தமிழ்த் திரையுலகை 5 தலைமுறைகளாக ஆக்கிரமித்த அவர் இன்னும் ஆக்கிரமிப்பார்.

70-களில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, தாய் மீது சத்தியம், முள்ளும் மலரும், பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தொடங்கிய ரஜினிகாந்த், 80-களில் ஜானி, போக்கிரி ராஜா, மூன்று முகம், ராஜாதி ராஜா, படிக்காதவன் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராகப் பதித்தார்.

90 காலகட்டம்தான், தமிழ்த் திரையுலகின் உச்சம் என்று சொல்லலாம். குறிப்பாக, ரஜினிகாந்தின் காலம் என்றே சொல்லலாம். 90-களில்தான் ரஜினியின் பாட்ஷா, வீரா, தளபதி, அண்ணாமலை, முத்து, படையப்பா, எஜமான் உள்ளிட்டவையும் வெளியாகின. முதன்முறையாக இரு தலைமுறை ரசிகர்களை ஒன்றாக ஒரே அரங்கில், தனது படத்தின் மூலம் கொண்டாட வைத்தார்.

தற்போதைய 2கே கிட்ஸ்-களுக்கு ரஜினி என்றால் சூப்பர்ஸ்டார் என்று மட்டுமே தெரிந்திருந்த நிலையில், கபாலி படம் வெளியாகி, சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினிதான் என்ற அளவுக்கு 2கே கிட்ஸ் ரசிகர்களையும் ரஜினி கட்டுப்படுத்தினார். தொடர்ந்து, காலா, பேட்ட, ஜெயிலர், கூலி முதலான ஹைப் படங்களையும் கொடுத்தார்.

தற்போதைய 2கே கிட்ஸ்-களையும் தன்வசப்படுத்தியிருக்கும் ரஜினி, ஜெயிலர் படத்தில் குழந்தை நட்சத்திரத்துடன் நகைச்சுவைக் காட்சியில் நடித்து ஜென் ஸீ குழந்தைகளையும் கட்டுப்படுத்தினார். ஜெயிலரில் நகைச்சுவைக் காட்சியில், 75 வயதான இமாலய நடிகரை ஒரு குழந்தை நட்சத்திரம் ஒருமையில் அழைப்பதாகக் காட்டியிருப்பது அவரின் பெருந்தன்மையைக் காட்டும்.

ரஜினியின் நகைச்சுவை என்றால் தில்லுமுல்லு, மன்னன்; நடிப்பு என்றால் ஆறிலிருந்து அறுபது வரை, ராகவேந்திரா; வில்லன் என்றால் 16 வயதினிலே, எந்திரன் படங்கள்தான் ரசிகர்கள் கண்முன் வந்துசெல்லும்.

ரஜினியின் படங்களை முதியோர் முதல் அவர்களின் பேரன்மார்கள் வரையில் ஒன்றாக அமர்ந்து, கொண்டாட்டத்துடன் பார்க்கலாம் - காரணம், அவரின் படங்களில் இரட்டை அர்த்தங்களோ முகம் சுளிக்கும் காட்சிகளோ இல்லாமைதான்.

ரஜினியின் திரை வரவையடுத்து, திரைக்குள் உள்நுழைந்த அன்றைய இளம் நடிகர்கள் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரையில் பெரும்பாலானோரின் நடிப்பில் ரஜினியின் சாயல் சிறிதேனும் கலந்திருப்பது அவரின் திரை அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

இவரின் படங்கள், யாரையும் புண்படுத்துவதோ சர்ச்சையாவதாகதோ இருக்கக் கூடாது என்பதில் ரஜினிகாந்த் எப்போதும் விழிப்புடனே இருப்பது அவரின் தனிச்சிறப்பே. ரசிகர்களைக் குடும்பமாகவே பாவிக்கும் ரஜினி, தனது படங்களை அனைவரும் குடும்பமாகவே பார்க்கும்வகையில் தேர்ந்தெடுப்பதுதான் அவரை வீழா உச்சத்தில் வைத்திருக்கிறது.

ரஜினியின் பாடல் என்றால், வயது மறந்து அனைவரும் எழுந்து ஆடும்வகையில் அவர் அனைத்து வயதினரையும் கட்டுக்குள் வைத்திருப்பது எந்த நடிகருக்கும் காணாத ஒன்று.

பான் இந்தியா கலாசாரத்தை எந்திரன் வாயிலாக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். ரஜினிகாந்தின் படங்களில் நகைச்சுவை பாத்திரங்களுக்கென தனி நடிகர்கள் தேவையில்லை என்பது அவரின் மேடைப் பேச்சே புலப்படுத்தும்.

இன்று அவரின் படம் வெளியானால், திரையரங்குகளில் அனைத்து வயது குரல் கொண்டாட்டங்களும் எழும்பும் என்பதில் சந்தேகமில்லை.

தலைமுறை கடந்தும் ஹிட் ஆனவன் என்ற அவரின் பாட்டு, அவருக்கே உரித்தானது.

தமிழ் மக்களால் வளர்ந்து திரையுலகில் உச்சத்துக்குச் சென்ற ரஜினிகாந்த், என் உடல் பொருள் ஆவியைத் தமிழுக்கும் தமிழருக்கும் கொடுப்பது முறை அல்லவா என்று பாடியதுடன் நிறுத்தாமல், என்னை வாழவைக்கும் தமிழ்த் தெய்வங்களான... என இன்றும் தன்னுடைய ஒவ்வொரு பேச்சின் தொடக்கத்திலும் தமிழ் மக்களைக் குறிப்பிடுவது அவரது நன்றியுணர்வைப் பிரதிபலிக்கிறது.

Summary

Superstar Rajinikanth's journey in the film industry

இதையும் படிக்க | ரஜினி செய்யாத தவறு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com