

கண்ணே கலைமானே தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்ற நடிகை பவித்ரா அரவிந்த் புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன், விஜய் தொலைக்காட்சியில் கண்ணே கலைமானே தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பவித்ரா அரவிந்த்.
கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், கல்லூரி படிக்கும்போதே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார். இதன் விளைவாக இவருக்கு கன்னடத்தில் மாங்கல்யம் தந்துனானே என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதில், நடித்துக்கொண்டிருக்கும்போதே, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சக்தி என்ற பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதன் விளைவாக விஜய் தொலைக்காட்சியில் கண்ணே கலைமானே என்ற தொடரில் நாயகியாக நடித்தார். பார்வையற்ற பெண்மணியாக இதில் பவித்ரா நடித்திருந்தார். ஓராண்டுக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பானது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடரில் நாயகனாக நடித்துவரும் அமல்ஜித்தை இவர் காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்களை பவித்ரா பதிவிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், புதிய தொடரில் நாயகியாக நடிக்க பவித்ரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடரின் நாயகன் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதில் அமல்ஜித் நாயகனாக நடித்தால், தொடரில் இருவரின் காதல் காட்சிகள் மிகுந்த வரவேற்பைப் பெறும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.