2025 - ஆம் ஆண்டு இல்லறத்தில் இணைந்த சின்ன திரை பிரபலங்கள்!

2025 - ஆம் ஆண்டு இல்லறத்தில் இணைந்த பிரபலங்கள் குறித்து....
திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை பிரபலங்கள்.
திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை பிரபலங்கள்.படம் சித்திரிப்பு / இரா.முத்துராஜா

வெள்ளித் திரைப் பிரபலங்களைக் காட்டிலும் சின்ன திரை நட்சத்திரங்களே ரசிகர்களை அதிகம் கவருகிறார்கள். ஏனென்றால், தொடர்கள் மூலம் நாள்தோறும் அவர்களைப் பார்த்து அவர்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போய்விடுகிறார்கள்.

சின்ன திரை பிரபலங்களின் வாழ்க்கையில் நடைபெறும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய பிரபலங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

1. ராம் - ரஞ்சனி

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது சின்ன திரை பயணத்தை தொடங்கிய ராம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கு ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இதில், தனித்துவமான நடிப்பை வழங்கி மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

நடிகர் ராமிற்கு, ரஞ்சனி என்பவருடன் அண்மையில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் வெள்ளித்திரை, சின்ன திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

2. பிரியங்கா தேஷ் பாண்டே - வசி

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை எனலாம்.

இதன் மூலம் பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வெற்றியைப் பதிவு செய்தார்.

பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு, வசி சாச்சி என்பவருடன் கடந்த ஏப். 16 ஆம் தேதி உற்றார் உறவினர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. வசி சாச்சி பிரபல டிஜே என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஜிஷ்ணு மேனன் - அபியாத்ரா

சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். எதிர்மறையான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது, இவர் ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் செல்லமே செல்லம் தொடரில் நடித்து வருகிறார்.

நடிகர் ஜிஷ்ணு மேனன், ஒப்பனைக் கலைஞர் அபியாத்ராவை நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த மே 14 ஆம் தேதி கோயிலில் திருமணம் நடைபெற்றது.

4. அக்னி - ராதிகா

நடிகர் அக்னி, தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர். இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் ஆதி பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, மலர் பாத்திரத்தில் நாயகனாக நடிகர் அக்னி நடித்தார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார்.

இதனிடையே, இந்த மாதம் நடிகர் அக்னி மற்றும் ராதிகாவுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

5. ஸ்ரியா - ரோஷித் நரசிம்மன்

தமிழ் சினிமாவில் சாக்லேட், ஐராவதிகாரம் (2019) ஆகிய படங்களில் இவர் நடித்து பிரபலமான ஸ்ரியா, தற்போது சின்ன திரையில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்,

மகளே என் மருமகளே தொடர்களில் நடித்துவரும் நடிகை ஸ்ரியாவுக்கு ரோஷித் நரசிம்மன் என்பவருடன் கடந்த டிச. 14 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

சொகுசு விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில், திரைப் பிரபலங்கள் உள்பட நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றிருந்தனர்.

6. அக்‌ஷயா - ஜைனு ஜெய்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் தொடரில் மகாலட்சுமி என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அக்‌ஷயா. இவர் பகலறியான், மின்மினி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது நீண்டகால நண்பரான ஜைனு ஜெய் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். தனது நீண்ட கால நண்பரையே அக்‌ஷ்யா கரம் பிடித்துள்ளார்.

ஜெய்னு ஜெய் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. விஜே சங்கீதா - அரவிந்த் சேஜு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் விஜே சங்கீதா. அழகு சீரியல் மூலம் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து, தமிழும் சரஸ்வதியும் தொடரில் 'வசு' பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

விஜே சங்கீதா தனது நீண்டநாள் காதலர் அரவிந்த் சேஜுவை கடந்த பிப்ரவரி மாதம் கரம் பிடித்தார்.

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சேஜு, தற்போது அய்யனார் துணை தொடரில் மதுமிதாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. அமீர் - பாவனி

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற பாவனியிடம், வைல்ட்கார்டு மூலம் நுழைந்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார்.

பின்னர், போட்டியிலிருந்து வெளியேவந்து காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. அமீர் - பாவனி ஜோடிக்கு 2025 ஏப். 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர்.

நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தில் அமீர் - பாவனி என இவரும் நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரின் பாத்திரங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

9. ஸ்மிருதி காஷ்யப் - அபிஷேக்

ரோஜா, மிஸ்டர் மனைவி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர் ஸ்மிருதி காஷ்யப். இவருக்கும் அபிஷேக் என்பவருடன் கடந்த நவ. 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கோலாகலமாக நடைபெற்ற ஸ்மிருதி காஷ்யப் - அபிஷேக்கின் திருமணத்தில் வெள்ளித்திரை, சின்னதிரை பிரபலங்கள் பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை பிரபலங்களுக்கு நாமும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com