

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது கடைசியான ஒரு குட்டிக் கதையைக் கூறியுள்ளார்.
எப்போதுமே தனது இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டிக் கதை சொல்வது வழக்கம். அதேபோல் இந்தப் படத்தில் என்ன கூறினார் தெரியுமா?
மழை - குடை - குட்டி ஸ்டோரி
ஒரு ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அருகில் இறக்கிவிடும்போது அங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்போது தன்னிடம் இருக்கும் குடையை கொடுத்து அனுப்புகிறார்.
அந்தப் பெண், “திருப்பி உங்களிடம் எப்படி கொடுப்பது?” எனக் கேட்க, “தேவைப்படுவர்களுக்கு கொடுத்து விடுங்கள்” என்று அவர் கிளம்பிவிடுவார்.
அந்தப் பெண் மருத்துவமனைக்குச் செல்லும்போது முதியவர் ஒருவர் வாசலில் மழைக்கு பயந்து கை கால்கள் எல்லாம் உதறிக் கொண்டு இருக்கிறார்.
அந்தப் பெண் அந்தக் குடையை முதியவரிடம் கொடுத்து ஆட்டோ ஓட்டுநர் சொல்வது போலவே சொல்லி அனுப்புகிறார். அந்த முதியவர் பேருந்துக்குச் செல்லும்போது அங்கு பூக்களை விற்கும் ஒரு அம்மாவிடம் குடையைக் கொடுத்து விடுகிறார்.
மற்றவர்களுக்கு உதவுங்கள்...
அந்த பூக்கார அம்மா வீட்டிற்குச் செல்லும்போது ஒரு சிறுமி மழையில் நனைந்துகொண்டு செல்கிறார். இதைக் கவனித்த பூக்காரம்மா அந்தக் குடையை சிறுமியிடம் தருகிறார்.
மழையில் தனது குழந்தை எப்படி வருமென வீட்டில் காத்திருப்பவர் யார் தெரியுமா? அந்த ஆட்டோக்காரர்தான்.
இந்தக் கதையின் நோக்கம் என்ன தெரியுமா? நீங்கள் ஒருவருக்கு உதவினால் அது பிற்காலத்தில் உங்களுக்கு திரும்பி வரும் என்பதுதான்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. வெள்ளத்தில் தவிப்பவர்களுக்கு ஒரு படகு கொடுத்தீர்கள் என்றால் அது பாலைவனத்தில் உங்களுக்கு ஒட்டகமாக வரும்.
அதனால் உங்களால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்து வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருங்கள் என்றார்.
இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாகவும் மமிதா பைஜூ முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பாபி தியோல் உள்பட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்குச் சென்றதால் ஜன நாயகனே தனது கடைசி திரைப்படமெனக் கூறியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.
இந்தப் படம் வரும் ஜன.9ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.