

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நிர்வாகத்தினர் 24 மணிநேர தனிமையில் வைத்திருந்ததாகவும், அந்த நேரம் மிகவும் கொடுமையானதாகக் கழிந்ததாக கனி திரு தெரிவித்துள்ளார்.
குறைந்த வாக்குகள் மூலம் மக்கள் ஏன் என்னை வெளியேற்றினார்கள் என்ற எண்ணம் மட்டும்தான் தனக்குள் ஓடிக்கொண்டு இருந்ததாகவும், இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் அமித் பார்கவ், கனி திரு ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், வீட்டிற்குத் திரும்பிய கனி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
விடியோவில் கனி திரு பேசியுள்ளதாவது,
நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். இதனை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால், மக்கள் தீர்ப்பு இதுதான் என்றால் அதனை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, 24 மணிநேரம் தனிமைப்படுத்துவார்கள். அந்த 24 மணிநேரமும் எனக்குள் ஒரே கேள்விதான். ஏன் மக்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பதுதான் அது. அந்த நேரம் மிகக்கொடுமையாகக் கழிந்தது.
மனிதர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு வீட்டில் இருந்து என் சகோதரி விஜயலட்சுமி, கணவர் திரு, குழந்தைகள் ஆகியோர் வந்து என்னுடன் பேசிய பிறகுதான் நான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
உங்களுக்கு (ரசிகர்களுக்கு) நன்றி கூற வார்த்தைகளே இல்லை. உங்கள் விடியோக்களையும் பார்த்தேன். நீங்கள் எனக்கு என்ன செய்துள்ளீர்கள் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
உங்கள் அன்புக்கு பாத்திரமாக என்றுமே இருப்பேன். நான் வணங்கிய தெய்வங்கள் என்னை கைவிடவில்லை எனப் பேசியுள்ளார்.
எனினும், விஜய் தொலைக்காட்சி நிர்வாகமே சான்ட்ராவை வைத்துக்கொண்டு கனி திருவை வெளியேற்றிவிட்டதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதில் பல அரசியல் உண்டு என்பதை அறிவோம் என்றும், கனி என்றுமே ராணியாக மனதில் இருப்பார் எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.