
நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் சின்னதிரை நடிகையுமான ஜோவிதா லிவிங்ஸ்டன், மெளனம் பேசியதே தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த அவர், தற்போது அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் மெளனம் பேசியதே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் அசோக் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் நடிக்கிறார். இவர்களுடன் ஐரா அகர்வாலும் முதன்மை பாத்திரத்தில் தோன்றுகிறார்.
இந்தத் தொடர், ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜகதாத்ரி தொடரின் மறு உருவாக்கம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அருவி மற்றும் பூவே உனக்காக ஆகிய இரு தொடர்களைத் தொடர்ந்து தற்போது மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதா நடித்துவருகிறார்.
அந்த இரு தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ஜோவிதா நடிக்கும் மெளனம் பேசியதே தொடர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. இந்நிலையில் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய 4 மாதங்களில் அத்தொடரில் இருந்து ஜோவிதா விலகியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் ஜோவிதா பதிவிட்டுள்ளதாவது,
''மெளனம் பேசியதே தொடரில் எனது கதாபாத்திரம் மிகுந்த சுயநலம் கொண்டதாகவும், மன அழுத்தம் உடையதாகவும் உள்ளது. இதில் நடிப்பது எனக்கு நிறைவாக இல்லை. எனது நம்பிக்கை மற்றும் கலாசாரத்துக்கு எதிரானதாக உள்ளது.
சில மாதங்களாக ஓய்வின்றி நடிப்பதைப்போன்று உள்ளது. இது எனக்கு கடினமான சூழல். தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக இல்லாததால், இத்தொடரில் இருந்து விலகுகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!