தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

தக் லைஃப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து.
தக் லைஃப் போஸ்டர்
தக் லைஃப் போஸ்டர்
Published on
Updated on
2 min read

நமது நிருபர்

மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தை சிலர் மிரட்டுகிறார்கள் என்பதற்காக அதை வெளியிடாமல் தடை செய்வது ஏற்புடையதல்ல என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு புதன்கிழமை (ஜூன் 18) பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5 -ஆம் தேதி வெளியானது. சென்னையில் நடைபெற்ற அதன் தமிழ்ப்பட வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல் பேசியது கர்நாடகத்தில் சர்ச்சையானது. அவருக்கு எதிராக கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

அதன் விளைவாக, கமல் மன்னிப்பு கேட்கும்வரை படத்தை திரையிட முடியாது என கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எம். மகேஷ் ரெட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் எம். மகேஷ் ரெட்டி மற்றும் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். அப்போது நீதிபதி உஜ்ஜல் புயான், "கும்பல்களும், குண்டர்களும் தங்கள் கைகளில் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு வீதிக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

சட்டத்தின் ஆட்சி மட்டுமே இங்கு நிலவ வேண்டும். யாராவது ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தால், அதை மற்றொரு அறிக்கை மூலமே எதிர்க்க வேண்டும். யாராவது ஏதாவது எழுதியிருந்தால், அதை எழுத்து மூலமே எதிர்க்க வேண்டும். படம் திரையிடப்பட்டாலும் அதைப் பார்க்காமல் விடுவது மக்களின் முடிவு. ஆனால், படத்தைத் திரையிடும் திரையரங்குகள் எரிக்கப்படும் என மக்களிடையே அச்சமூட்டக் கூடாது. கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் ஜூன் 18-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, நீதிபதி மன்மோகன் கூறுகையில், "மத்திய திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் பெற்ற எந்தப் படத்தையும் திரையிடலாம். அதற்கு நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமை' என்றார்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மனு ஜூன் 20-இல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுமாறு குறிப்பிட்டனர். ஜூன் 3-ஆம் தேதி விசாரணையின்போது நடிகர் கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்குமாறு கேட்பதெல்லாம் உயர்நீதிமன்றத்தின் வேலையே கிடையாது என்றும் நீதிபதி மன்மோகன் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், "சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதில் தலையிடுகிறோம்.

இது ஒரு திரைப்படத்தைப் பற்றியது மட்டுமல்ல' என்றார் நீதிபதி மன்மோகன்.

இதைத் தொடர் ந்து, தக் லைஃப் படத்தை திரையிடாமல் இருக்க கன்னட திரைப்பட வர்த்தக சபை சுயமாக முடிவெடுத்தது என்று மாநில அரசின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "ஒரு படத்தில் மக்களுக்கு மாறுபட்ட பார்வை இருக்கலாம். ஆனால், அதற்காக படத்தை திரையிட மறுக்கும் போக்கு மாற வேண்டும்' என்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை வரும் வியாழக்கிழமை தொடரும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

"உச்சநீதிமன்ற கருத்தை மதித்து செயல்படுவோம்'

பெங்களூரு, ஜூன் 17: "தக் லைஃப்' பட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தை கர்நாடக அரசு மதித்து செயல்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் கருத்தை மதிக்க வேண்டும். யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

கர்நாடகம் எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலம். நமது கருத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை. அதற்கான வாய்ப்பை மாநில அரசு வழங்கியது. பெங்களூரு மக்கள் தாராள மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். பெங்களூரில் எல்லா ஜாதியினர், மொழியினர், கலாசாரங்களுக்கும் இடம் அளித்துள்ளோம். இது பன்னாட்டு மாநகரமாகும்.

கர்நாடக மக்கள் எப்போதும் பெரிய மனதுடன் நடந்துகொண்டுள்ளனர். கன்னட மொழியின் சுயமதிப்பை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க முடியாது. அதே கருத்தைத்தான் மாநில அரசும் கொண்டுள்ளது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் கருத்தை மதிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com