30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ் - திரை விமர்சனம்!

30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ் - திரை விமர்சனம்!

விக்ரம் பிரபு நடித்த லவ் மேரேஜ் படத்தின் திரை விமர்சனம்...
Published on
லவ் மேரேஜ் - திரை விமர்சனம்!(2.5 / 5)

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நாடுமுழுக்க நடக்கும் கதைகளில் ஒன்றுதான் படத்தின் கதை. நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகவில்லை. பார்க்காத பெண் இல்லை, போகாத இடமில்லை. ஆனால், கல்யாணம் நடந்த பாடில்லை... சொந்த சாதிக்குள் தேடிச்சலித்து மதுரையிலிருந்து கோபிச்செட்டிபாளையத்தில் வேறொரு சாதியில் கலப்புத் திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர்.

மாப்பிள்ளை குடும்பமே கோபி செல்கிறது. நிச்சயதார்த்தமும் நன்றாக நடந்து முடிகிறது. சரி, ஊருக்குக் கிளம்புவோம் என விக்ரம் பிரபு குடும்பத்தார் கிளம்பும்போது கரோனா ஊரடங்கு அமலாகிறது. வேறு வழியில்லாதாதல் பெண் வீட்டிலேயே நாள்கள் கழிய, இனி ஜாலிதான் என நாயகன் நினைக்கும்போது ஒரு டுவிஸ்ட். அதனால், இரு குடும்பமும் அதிர்ச்சியடைகின்றனர்.

திருமண ஆசையில் கிளம்பிய குடும்பம் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள், 30 வயதுக்கும் மேல் கல்யாணம் ஆகவில்லை என்றால் உறவினர்களும் சமூகமும் ஒருவரை என்னென்ன மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் என்பதை நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசியிருக்கிறார் இயக்குநர் சண்முக பிரியன்.

முதல்பாதியில் சில இடங்களில் நன்றாக சிரிக்க முடிகிறது. விக்ரம் பிரபுவுடன் நடிகர்கள் ரமேஷ் திலக், வடிவேல் முருகன் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் கதைக்கு வலுவைச் சேர்க்கின்றன.

நல்ல வேலை, சொத்து என எல்லாம் இருந்தாலும் இன்றெல்லாம் பல சோதனைகளுக்குப் பின்பே திருமணங்கள் நடக்கின்றன. அப்படியான சூழலில் 30 வயதைக் கடந்தவர் திருமணத்திற்காக ஏங்குவது படத்தில் சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

முக்கியமாக, சாதிப் பெருமைகளைப் பேசிப்பேசி இறுதியில் பெண் கிடைக்கவில்லை என்றால் தங்களுக்கு இணையான மாற்று சமூகத்தில் பெண் எடுப்பதையும், ஆனால் அது காதல் திருமணமாக இருந்தால் எதிர்ப்பதையும் கேள்வி கேட்டிருக்கின்றனர்.

திருமண நிச்சயதார்த்த செய்யக் கிளம்பிய குடும்பம் கரோனாவால் மாட்டிக்கொள்வதையும் அங்கு நாயகனுக்குக் கிடைக்கும் அனுபவங்களையும் இயக்குநர் சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறார். ஆனால், இன்னும் நன்றாக எழுதியிருந்தால் பிளாக்பஸ்டர் படமாக அமைந்திருக்கும். திருப்பங்களைக் கொடுக்கிறோம் என காட்சிகளை ஊகிக்கவிட்டது ஏமாற்றம்.

நடிகர் விக்ரம் பிரவுக்கு நல்ல படம் என்றாலும் நடிப்பைக் காணவில்லை. பிரேம்மில் சும்மா நிற்பதுபோல் பல காட்சிகளில் தெரிகிறார். பெண் பார்க்கபோன இடத்தில் மணப்பெண்ணுடன் தனியாக பேசச் செல்லும்போது, கல்யாணம் எப்போதுதான் ஆகும் என்கிற பரிதவிப்பையும் முகத்தில் நன்றாகக் கொண்டுவந்திருக்கலாம். கிளைமேக்ஸில் மட்டும் கொஞ்சம் ஆறுதலைக் கொடுக்கிறார். மற்றபடி, படத்தில் அவர் நடிப்பதற்கான தருணத்தை இயக்குநர் கூட்டியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

நடிகர்கள் ரமேஷ் திலக், அருள்தாஸ், சத்யராஜ் காட்சிகள் ரசிக்க வைப்பதுடன் கதைக்கு பலத்தையும் கொடுத்திருக்கின்றனர். நாயகிகள் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் இருவரும் நல்ல தேர்வு. சுஷ்மிதா சாந்தமாக நடிக்க, மீனாட்சி துள்ளலாக கவனம் ஈர்க்கிறார். மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் ஒருவர் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். அவரின் கொங்கு மண்டல பேச்சும் உடல்மொழியும் ரசிக்க வைக்கிறது.

சான் ரோல்டனின் பின்னணி இசை நன்றாக இருந்தது. படத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப இருந்தாலும் தமிழகத்தின் மிக அழகான ஊர்களில் ஒன்றாக கோபிச்செட்டிபாளையத்தை திரையில் அழகாகக் காட்டியிருக்க வேண்டாமா?

என்னதான் ஒரு முக்கியமான பிரச்னையைப் பேச முயற்சி செய்திருந்தாலும் இன்னும் கூடுதலான காட்சிகளை அழுத்தமாக உருவாக்கியிருந்தால் இப்படம் இன்னும் உணர்வுப்பூர்வமாக இருந்திருக்கும். சில குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்க ஒரு ஜாலியான படமாகவே உருவாகியிருக்கிறது.

Summary

vikram prabhu's love marriage movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Open in App
Dinamani
www.dinamani.com