vijay antony maargan
விஜய் ஆண்டனி

சித்தர் வழி, ரசாயன ஊசி... விஜய் ஆண்டனியின் மார்கன் - திரை விமர்சனம்!

விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படத்தின் திரை விமர்சனம்....
Published on
மார்கன் - திரை விமர்சனம்!(2.5 / 5)

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மார்கன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஒரு இளம்பெண் வித்தியாசமான முறையில் வில்லனால் கொல்லப்படுகிறார். வித்தியாசம் என்றால், ஒரு ஊசியை அப்பெண் மீது செலுத்தியதும் சில நொடிகளிலேயே உடல் முழுவதும் கருப்பாகி மரணம் நிகழ்கிறது. இந்த கொலைச் சம்பவத்தை காவல்துறை விசாரிக்கும்போது, இதேபோல் ஒரு வழக்கை எதிர்கொண்ட காவல்துறை அதிகாரியான துருவ்-க்கு (விஜய் ஆண்டனி) தகவல் செல்கிறது. உடனடியாக, இந்த வழக்கை அவர் கையிலெடுக்கிறார்.

கொலையான அன்று ஒரு இளைஞர் சிசிடிவி கேமராவில் பதிவாக, அவரைத் தேடி விஜய் ஆண்டனி செல்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனியின் உறவினரான அஜய் திஷன் நடித்திருக்கிறார் (இதுதான் அவருடைய அறிமுகப்படம்). அந்த இளைஞருக்கும் இக்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணையை ஆரம்பிக்கும் விஜய் ஆண்டனி, சில திருப்பங்களைச் சந்திக்கிறார். இறுதியில் கொலையாளி யார்? வித்தியாசமான முறையில் உடலை கருப்பாக்கி கொல்வதற்கான காரணம் என்ன என்கிற மீதக்கதையே மார்கன்.

படத்திற்கு முதலில் கனன மார்கன் என்றே பெயரிட்டிருந்தனர். அதன் பொருள் சித்தர்கள் அகராதியில் காற்றின் வழியே பயணிப்பவன் என்கின்றனர். படத்தின் பெயருக்கு ஏற்ப, இக்கதையில் அப்படி ஒரு வித்தியாசமான கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லியோ ஜான் பால். ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் சரடுபோல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொலைக்குப் பின் இருக்கும் மனித ஆணவமும் அதை முறியடிக்கும் தனித்திறமையுமாக கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் ஆரம்பத்திலேயே கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் கவனம் சிதறாமல் பார்க்க முடிகிறது. கிரைம் திரில்லர் கதைதான் என்றாலும் அதை வித்தியாசமாகத் திரைப்படுத்தியிருக்கின்றனர். இடைவேளைக் காட்சியிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது. முக்கியமாக, அஜய் திஷன் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக இருக்கிறது. அறிமுக படத்திலேயே நன்றாக நடித்திருக்கிறார். நீருக்குள் அவர் செல்லும் காட்சிகள் பார்வையாளர்களிடம் சுவாரஸ்யத்தைத் தருகிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் சில டிவிஸ்டுகள் இருந்தாலும் அது உணர்வுப்பூர்வமான அமையவில்லை. யார் வில்லனாக இருக்கும் என பெரிய ஊகங்களை ஏற்படுத்திவிட்டு சில லாஜிக் சொதப்பல்களால் மிக நன்றாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் பார்க்கலாம் என்பதோடு நின்றுவிட்டது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் வெற்றியைப் பெறவில்லை. அவற்றுடன் ஒப்பிடும்போது மார்கன் சுவாரஸ்யமான திரைப்படம். கிரைம் திரில்லருக்கான கதாபாத்திரத்தை விஜய் ஆண்டனி நன்றாகக் கையாளவும் செய்வதால் சில குறைகளை அவர் நடிப்பால் கடந்துசெல்ல வைக்கவும் முடிகிறது. இந்தப் படத்தில் அவரின் நடிப்பும் எதார்த்தமாக இருக்கிறது.

நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த அஜய் திஷனுக்கு பெயர் சொல்லும் படமாகவே அமைந்திருக்கிறது. நீச்சல் வீரராகவும் மனப்பதற்றம் கொண்டவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனாக அல்லாமல் வில்லனாக நடிக்கவும் நல்ல தேர்வாக இருப்பார். நடிகை பிரிகடா சாகா, மகாநதி சங்கர் கதாபாத்திரங்களும் கதையைச் சிதைக்காமல் எழுதப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவாளர் நீச்சல் குளத்தைக் காட்சிப்படுத்திய விதம், நீருக்குள் எடுக்கப்பட்ட ஷாட்டுகள் கவனம் பெறுகின்றன. விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் கதையின் போக்கிற்கு பலம் சேர்க்கிறது.

சித்தர்கள் வழியில் வாழ்க்கையைக் காணும் விஷயம், ரசாயன ஊசி, அடுத்தடுத்த திருப்பங்கள், கிளைமேக்ஸில் ஏன் கொலைகள் நடந்தது என்பதற்கான காரணம் என மார்கன் திரைப்படத்தை சலிப்பில்லாமல் பார்க்க முடிகிறது. நீருக்குள் இருந்தபடி கொலையான இடத்திற்கு அஜய் கதாபாத்திரம் செல்வது படத்தின் பலமான காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.

படத்தின் பெயரைப் போலவே சில குழப்பமான காட்சிகள் இருப்பது சிறிய ஏமாற்றம். மற்றபடி, கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கேற்ப ரசிக்கக்கூடிய படமாகவே மார்கன் உருவாகியிருக்கிறது.

actor vijay antony's maargan movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Open in App
Dinamani
www.dinamani.com