தக் லைஃப் படக்குழுவினர் ஹோலி வாழ்த்துத் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளனர்.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப்.
கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் தயாராகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
தக் லைஃப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு டீசர் கடந்த நவம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டீசரில் கமல் மாறுபட்ட வேடத்தில் வருவது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் இருந்தது.
இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஹோலி பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவித்து படக்குழுவினர் சிறிய க்ளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
மணிரத்னம் படங்களில் பெரும்பாலும் ஹோலி பண்டிகை சார்ந்த காட்சிகள் அல்லது பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். இந்தப் படத்தின் விடியோவிலும் சிம்பு ஹோலி பண்டிகையில் ஆடுவதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.