
‘ரெட்ரோ’ படவிழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சூரியாவின் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் விழா தெலங்கானாவின் ஹைதரபாதில் நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது மிகப் பெரியளவில் சர்ச்சையாகி அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடியின மக்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியதாகக் கூறி அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், முந்தைய காலத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்து வந்ததைக் குறிக்கவே பழங்குடியினர் (டிரைப்) எனும் வார்த்தையைத் தான் பயன்படுத்தியாகக் கூறியதுடன் ஆங்கில அகராதியை மேற்கோள்காட்டி, தனது பேச்சு குறித்து அவர் நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியதாவது:
”ரெட்ரோ திரைப்பட விழாவில் நான் பேசியது மக்களில் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. எனவே, அது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எந்தவொரு சமூகத்தையும் குறிவைத்து புண்படுத்துவது எனது நோக்கமில்லை. முக்கியமாக பட்டியலின பழங்குடியின மக்களை. அவர்கள் மீது நான் அளவுக்கடந்த மரியாதை வைத்துள்ளதுடன், அவர்களை நம் நாட்டின் ஓர் முக்கிய அங்கமாக நான் கருதுகிறேன்.
இந்தியா முழுவதும் ஒரு நாடு, நம் மக்கள் அனைவரும் சமம் எனும் ஒற்றுமையைக் குறித்தே நான் பேசினேன். நம் நாட்டுக்காக அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும் என நான் வலியுறுத்திய வேளையில், எப்படி எனது குடும்பமாகவும் சகோதரர்களாகவும் கருதும் மக்களுக்கு எதிராக நான் பேசுவேன்?
‘டிரைப்’ (பழங்குடியினர்) என நான் குறிப்பிட்ட வார்த்தையானது, பல நூறாண்டுகளுக்கு முன்பு தனித்தனி இனக்குழுக்களாக இருந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்ட மனிதர்களைக் குறிக்க வரலாறு, அகராதி ரீதியான அர்த்ததில் மட்டுமே பயன்படுத்தினேன். ஆனால், அது பழங்குடியின மக்களைக் குறிக்க 20-ம் நூற்றாண்டின் இடையில் அறிமுகப்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் கூட முழுமையடையாத ‘ ஷெடியூல்டு டிரைப்’ (பட்டியலின பழங்குடிகள்) -ஐ குறித்தானது அல்ல.
ஆங்கில அகராதியின் படி டிரைப் (பழங்குடியினர்) என்றால், பாரம்பரிய சமூகத்தில் குடும்பங்களாகவும், குழுக்களாகவும் சமூகம், பொருளாதாரம், மதம் மற்றும் ரத்த பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பொதுவான கலாசாரம் மற்றும் பேச்சுவழக்கை உடைய சமூகப் பிரிவு என்றே அர்த்தம்.
நான் பேசிய கருத்தில் ஏதேனும் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டிருந்தாலோ அல்லது யாரேனும் காயப்பட்டிருந்தாலோ அதற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது நோக்கம் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையைப் பற்றி பேசுவது மட்டுமே.
ஒரு போதும் பிரியாத ஒற்றுமையையும், உயர்வையும் அடைவதிலேயே எனது தளத்தை பயன்படுத்த வேண்டும் என நான் உறுதியாகவுள்ளேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அவர் மீது ஹைதரபாதின் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கேங்கர்ஸ் படத்தின் 2-ஆவது முன்னோட்ட விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.