

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மருத்துவர் திவாகரை, விஜய் சேதுபதி விமர்சித்துப் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மேடை நடனக் கலைஞரான ரம்யா உடனான வாக்குவாதத்தின்போது, 'தராதரம் இல்லாதவர்' என திவாகர் விமர்சித்துப் பேசியிருந்தார். இது குறித்து வார இறுதியில் விவாதித்த விஜய் சேதுபதி திவாகரின் தராதரம் குறித்துப் பேசினார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 10 ஆண்கள், 10 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.
முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.
தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 4 வாரங்களைக் கடந்துள்ளது. 4வது வாரத்தின் இறுதியில் பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்னைகள் குறித்து விஜய் சேதுபதி விவாதிப்பார்.
அந்தவகையில் இந்த வாரம் தராதரம் குறித்து திவாகர் பேசியது குறித்து விவாதித்தார். பிக் பாஸ் வீட்டில் ரம்யா உடனான வாக்குவாதத்தின்போது திவாகர் ஆவேசமடைந்து தராதரம் இல்லாதவளுடன் பேசத் தயாராக இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். தராதரம் குறித்துப் பேசியதால், சபரி, எஃப்ஜே உள்ளிட்டோர் ரம்யாவுக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர்.
இது குறித்து வார இறுதியில் விவாதித்த விஜய் சேதுபதி, தராதரம் கண்டு அளப்பதற்கு ஏதேனும் அளவுகோல் வைத்துள்ளீர்களா திவாகர் என விமர்சித்தார். தராதரம் நிர்ணயிக்க நீங்கள் யார்? உங்களுக்கு முரண்பட்ட கருத்துகள் இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் முன்வையுங்கள். ஆனால், அதனைத் தவிர்த்துவிட்டு தராதரம் இல்லாதவர் என யாரையும் குறிப்பிட்டு உங்கள் மதிப்பை இழந்துவிடாதீர்கள் என எச்சரித்தார்.
குற்றம் நடக்கும்போது அல்லது மாற்றுக்கருத்து உருவாகும்போது அதனை அப்போதே பொதுவெளியில் தெரிவிக்காமல், சந்தர்ப்பம் வரும்போது தெரிவிப்பதுதான் உங்கள் தராதரமா? நீங்கள் தராதரம் பற்றி பேசலாமா? என விமர்சித்தார்.
இதனால், வருத்தமடைந்த திவாகர் மன்னிப்புக்கோரினார். ஆனால், மன்னிப்பு தேவையில்ல எனக் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, இதுபோன்று இனி நடக்காமல் இருப்பதுதான் நீங்கள் கேட்ட மன்னிப்புக்கு மதிப்பு சேர்க்கும் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: சிறைக்குச் செல்லும் இருவர் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.