

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சுந்தர். சி கூட்டணி விலகல் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இளம் இயக்குநர்களுடன் பணியாற்றிவந்த ரஜினிகாந்த் அருணாச்சலம் திரைப்படத்திற்குப் பின் மீண்டும் இணைந்தது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அடுத்த சில நாள்களிலேயே கனத்த இதயத்துடன் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார். திடீர் அதிர்ச்சியாக இது அமைய, பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளரான கமல் ஹாசன், ”நான் முதலீட்டாளன். என்னுடைய நட்சத்திரத்துக்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்கு பிடிக்கும் வரையில் நாங்கள் கதைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்” எனக் கூறினார்.
நடிகர் கமலின் இப்பேச்சு இன்னும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், கதை என்னவென்று ரஜினியிடம் சொல்லாமலேயே சுந்தர். சி உடனான கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா?
ரஜினிக்கு கதையில் உடன்பாடு இல்லையென்றால் இவர்கள் கதையை விவாதித்த அன்றே ரஜினி சில மாற்றங்களைச் சொல்லியிருப்பார் என்றும் அதற்கு சுந்தர். சி ஒப்புக்கொண்டதால்தான் பூஜை நடைபெற்றிருக்கிறது என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும், இப்போது நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக அனிருத்தே இருக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அனிருத்தின் பின்னணி இசைகள் ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு நன்றாக பொருந்தவும் செய்கின்றன.
ஆனால், இயக்குநர் சுந்தர். சி இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடனே பணியாற்றுகிறார். ஒருவேளை, அனிருத்துக்கு பதில் ஆதியை ஒப்பந்தம் செய்வதற்கான பரிந்துரையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
அதேநேரம், சுந்தர். சியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் அவரையே இப்படத்திற்குள் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயன்றும் வருகிறதாம். இன்னும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரஜினி - சுந்தர். சி கூட்டணி அறிவிப்பு விடியோக்களை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இயக்குநர் பாரதி கண்ணனை மிரட்டிய கார்த்திக் ஆதரவாளர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.