

இயக்குநர் கார்த்திக்கின் ஆதரவாளர்கள் தன்னை மென்மையாக மிரட்டியதாக இயக்குநர் பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார்.
அருவா வேலு, திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் பாரதி கண்ணன். தற்போது, நடிகராக சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
அண்மையில், பாரதி கண்ணன் ஒரு நேர்காணலில் பேசியபோது நடிகர் கார்த்திக் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். முக்கியமாக, “நடிகர் கார்த்திக்கை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க ஒரு தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். நான் எழுதிய கதையைச் சொல்லி கார்த்திக்கை ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டிற்குச் சென்றேன். அப்போதே, அவருக்கு முன்பணமாக ரூ. 5 லட்சம் கொடுத்தேன்.
மீண்டும் கதை கேட்க ஊட்டிக்கு வரச்சொல்லியிருந்தார். மேலும் ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு அங்கு சென்று கதையைச் சொல்லி, பணத்தைக் கொடுத்தேன். ஆனால், அந்த தயாரிப்பாளர் கார்த்திக்கை வைத்து நாம் படம் எடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த பணத்தை வாங்கிவிடுங்கள் என்றார்.
நான் கார்த்தியிடம் விஷயத்தைச் சொல்லி பணத்தைக் கேட்டபோது, “என்ன பாரதி? கார்த்திக்கிடம் பணம் போனால் திரும்ப வராது என திரைத்துறைக்கே தெரியும். உங்களுக்கு தெரியாதா? பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ளலாம். பயந்தால் தொழில் செய்ய முடியுமா?” என்றார். (இதனை பாரதி கண்ணன் நகைச்சுவையாக கார்த்திக் போன்றே மிமிக்ரி செய்தது இந்த நேர்காணலை வைரலாக்கியது)
மேலும், கார்த்திக்கால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதையும் சொன்னார். இதனால், ரசிகர்கள் கார்த்திக் இப்படிப்பட்டவரா? என கருத்து கூறி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஒரு நேர்காணலில் பேசிய பாரதி கண்ணன், “நடிகர் கார்த்தி குறித்து நான் சாதாரணமாக பேசியது இவ்வளவு வைரலாகும் எனத் தெரியவில்லை. பல ஆண்டுகள் முன் அனுபவித்த வலி. இப்போது அதெல்லாம் மறைந்துவிட்டது. இதற்காக, நிறைய செல்போன் அழைப்புகள் வந்தன. தென் மாவட்டங்களிலிருந்து கார்த்திக்கின் ஆதரவாளர்கள் மென்மையாக மிரட்டலும் விடுத்தனர்.
நடிகர்கள் பிரபு, ராதா ரவி ஆகியோர் கார்த்திக் நிறைய பேருக்கு உதவி செய்திருப்பதையும் நான் அப்படி பேசியதைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அழைத்துச் சொன்னார்கள். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். மிகச்சிறந்த நடிகரான கார்த்திக் மீண்டும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் வில்லனாக கலக்கக் காத்திருக்கும் மம்மூட்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.