

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இரண்டு சம்பவங்களில் காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையின் நீட்சியில் குரூரமான சதை வியாபார கும்பலிடமிருந்து 40 இளம்பெண்களை கருணையுடன் மீட்கும் காவல்துறை பெண் அதிகாரிகளின் கதைதான் தில்லி கிரைம் இணையத் தொடரின் 3-வது சீசனின் ஒன்லைன்.
தலைநகர் தில்லியில் கொடுங்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்படும் இரண்டு வயது குழந்தையின் தாயை தேடுகிறது ஏசிபி நீத்தி சிங் (ரசிகா தூகல்) தலைமையிலான தில்லி போலீஸ். அதேநேரம் அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில் இருந்து ஒரு வேனில் தலைநகர் தில்லிக்கு கடத்திச் செல்லவிருந்த 10 இளம்பெண்களை ஓர் கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கிறது டிஐஜி வர்த்திகா சதுர்வேதி (ஷெபாலி ஷா) தலைமையிலான குழு.
குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற பெண்ணையும் அவளது கணவனையும் கைது செய்கிறது நீத்தி சிங் தலைமையிலான தில்லி காவல்துறை. அதேபோல் சில்சாரில் மீட்கப்பட்டது 10 இளம் பெண்கள்தான், ஏற்கெனவே 30 இளம்பெண்களை ஏற்றிச் சென்ற ஒரு வேன் தில்லிக்கு சென்றிருப்பது வர்த்திகா சதுர்வேதி தலைமையிலான குழுவுக்கு தெரியவருகிறது.
இதையடுத்து உயர் அதிகாரிகளின் அனுமதிப் பெற்று தில்லி சென்று விசாரணையை தொடங்குகிறார் வர்த்திகா சதுர்வேதி. அங்கு அவருக்கு பூபேந்தர் (ராஜேஷ் தைலங்), நீத்தி சிங் உள்ளிட்ட அவரது குழுவினர் உறுதுணையாக இருக்கின்றனர்.
மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் குழந்தை தில்லியின் தலைப்புச் செய்தியாக பற்றியெரிய, வர்த்திகா சிங் விசாரித்து வரும் வழக்குக்கு ஒரு பொறி கிடைக்கிறது.
அது என்ன? யார் மூலம் அந்த துப்பு கிடைக்கிறது? கடத்தப்பட்ட இளம்பெண்கள் எங்கே? கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? கடத்தல் கும்பலை காவல்துறை கைது செய்ததா? இளம்பெண்கள் மீட்கப்பட்டனரா? என்ற கேள்விகளுக்கான விடை தான் தில்லி கிரைம் 3-வது சீசனின் கதை.
6 எபிசோட்களைக் கொண்ட இந்த மூன்றாவது சீசன், முதல் எபிசோடிலேயே பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து விடுகிறது. சதை வியாபரத்துக்காக வடஇந்தியாவில் ஏழை எளிய பெண் குழந்தைகள் கடத்தப்படும் உண்மைச் சம்பவங்களைத் தழுவி இத்தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் தனுஜ் சோப்ரா. ஒவ்வொரு எபிசோடிலும் கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை இயக்குநர் சிறப்பாக விவரித்திருக்கிறார். அதேநேரம், கடத்தலைத் தடுக்க காவல்துறை மேற்கொள்ளும் முயற்சிகளையும் முடிந்தளவுக்கு சினிமாத்தனம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.
கடந்த இரண்டு சீசன்களைப் போலவே 3-வது சீசனிலும் வர்த்திகா சதுர்வேதி டிஐஜி- யாக ஷெபாலி ஷா வாழ்ந்திருக்கிறார். இயலாமை, கோபம், தேடல், பாசம், கருணை, கட்டுப்பாடு என சகலத்தையும் தன் கண்களின் வழியே பார்வையாளர்களுக்கு கடத்தி அப்ளாஸை அள்ளுகிறார். அதேபோல் அவரது குழுவில் வரும் ராஜேஷ் தைலாங், அனுராக் அரோரா, ரசிகா தூகல், ஜெயா பட்டாச்சார்யா என அனைவருமே அட்டகாசமான நடிப்பை தந்துள்ளனர். மீனா சௌத்ரி என்ற பெரிய அக்கா கதாப்பாத்திரத்தில் ஹுமா குரேஷி சம்பவம் செய்திருக்கிறார்.
இந்த மூன்றாவது சீசனில் புதிதாக இணைந்திருந்தாலும், அவரது தோற்றமும், கட்டுப்படுத்த முடியாத கோபத்தை அமைதியான அதிகாரத்தின் மூலம் வெளிப்படுத்தும் அணுகுமுறையும் ஈர்க்கிறது.
அதேபோல் கல்யாணி என்ற கதாப்பாத்திரத்தில் வரும் மிட்டா வசிஷ்ட் குறைவான நேரமே வந்தாலும் கலகலப்பூட்டுகிறார். சோனம், குஷும், ராகுல், தீபிகா என தொடரில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுதான் இந்த தொடரின் ஆகச்சிறந்த பலம். அனு சிங் சௌத்ரியின் வசனங்கள் கூர்மையான கத்தி போல் தாக்குகின்றன. அஸ்ஸாமின் மழைத் தூவும் சில்சாரில் துவங்கி தில்லி, ஹரியாணா, சூரத், ராஜஸ்தான், மும்பை என ஜோஹன் எய்ட் மற்றும் எரிக் வுண்டர் லின் ஆகியோரின் ஒளிப்பதிவு அந்தந்தப் பகுதிகளின் நிலவியலை நம் கண்ணுக்கு விருந்தாக்குகின்றன.
தில்லியின் இரவு நேர காட்சிகளும் துரத்தல்களும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதோடு செய்ரி ட்ரஜ்ஸனின் பின்னணி இசை தொடரின் உணர்வுகளோடு பார்வையாளர்களை ஒன்றிப் போக செய்கிறது. இந்த தொடரின் டாப்நாட்ச் தொழில்நுட்பக் குழுதான் என்றாலும் மிகையல்ல.
சட்டவிரோத இளம்பெண் கடத்தல் மற்றும் தில்லியில் 2012-ல் நிகழ்ந்த குழந்தை ஃபாலாக் மரணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்குடன் காணக் கிடைக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின் படி கடந்த 2022-ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 2 லட்சத்து 93 ஆயிரத்து 500 பெண் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இதை வெறுமனே ஒரு செய்தியாக கடந்து செல்லும் சராசரி பொதுபுத்தியில் இருந்து விலகி, காணாமல் போன பெண் குழந்தைகள் குறித்து சிந்திக்க தூண்டுவதே 'தில்லி கிரைம்' - சீசன் 3 இணையத் தொடர்.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் நூறுசாமி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.