

நடிகை மணிமேகலையின் கணவர் உசேன் இஸ்லாமியராக இருந்தாலும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளார். முறைப்படி விரதம் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்லவுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் மணிமேகலை - உசேன் தம்பதி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
சின்ன திரையில் பிரபல தொகுப்பாளரான மணிமேகலை, இஸ்லாமியரான உசேனை காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்து மதத்தைச் சேர்ந்த மணிமேகலையின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், நம்பிக்கையின் அடிப்படையில் உசேனை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை மணிமேகலை வெளியிட்டு ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளாகத் தொகுப்பாளராக உள்ள மணிமேகலை, பல்வேறு ஹிட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், தன் கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசன்களிலும் பங்கெடுத்து வந்த மணிமேகலை, 5-வது சீசன் நிகழ்ச்சியை ரக்ஷனுடன் தொகுத்து வழங்கினார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியும் மக்களிடம் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் சின்ன திரைக்கான சிறந்த தொகுப்பாளர் மற்றும் சிறந்த என்டர்டெயினர் விருதையும் பெற்றார். மேலும், பல பொதுநிகழ்ச்சிகளில் தனது கணவர் உசேனுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்.
மணிமேகலையின் வளர்ச்சியில் உசேனின் பங்கும் அளப்பரியதாக உள்ளதாக மணிமேகலை அடிக்கடி கூறுவதுண்டு. இதனிடையே மணிமேகலை - உசேன் தம்பதிக்கு மதம் ஒரு வேறுபாடாக இருந்தது இல்லை என்பதற்கு சான்றாக தற்போது சபரிமலைக்கு உசேன் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை மணிமேகலை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் மோசமானவர்கள்: வெளியேறிய திவாகர் கருத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.